Published : 08 May 2018 10:39 AM
Last Updated : 08 May 2018 10:39 AM

மேஜிக்கல் முஜீப்: அசத்தும் 17 வயது ஆப்கான் லெக் ஸ்பின்னர்

நடப்பு ஐபில் தொடரில் சன் ரைசர்ஸின் ரஷீத் கான், கிங்ஸ் லெவன் அணியின் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் பந்து வீச்சு நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளனர்.

அதுவும் 17 வயது முஜீப் உர் ரஹ்மான் பெரிய வீரர்களையெல்லாம் தன் புதிர் ஸ்பின்னினால் திணறடித்து வருவது ஐபிஎல் கிரிக்கெட்டுக்கே ஒரு புதிய வண்ணத்தைச் சேர்த்துள்ளது.

போரும், பயங்கரவாதமும், தாலிபனீயமும் தலைவிரித்தாடும் ஒரு ஏழை நாட்டிலிருந்து ஐபிஎல் ஏலத்தில் ரூ.4 கோடிக்கு எடுக்கப்பட்ட முஜீப் ஒரு இளம் ஹீரோவாக ஆப்கன் ரசிகர்களுக்கு மாறியுள்ளார்.

இதுவரை ஸ்பின்னர்கள் பந்துகளை எப்படித் திருப்புவார்களோ அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பந்துகளை திருப்புவதால்தான் அவரை எளிதில் கணிக்க முடியவில்லை என்று ஏற்கெனவே கிரிக்கெட் பண்டிதர்கள் இவரை விதந்தோதி வருகின்றனர்.

இந்நிலையில் முதல் தர கிரிக்கெட்டில் 344 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கே.என்.அனந்தபத்மநாபன் என்ற தற்போதைய ஐபிஎல் நடுவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “மணிக்கட்டு மூலம் அல்லாமல் விரல்களைப் பயன்படுத்தி முஜீப் வீசும் லெக்ஸ்பின் மிகவும் ஆச்சரியமாக உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இவரைப்போன்ற இன்னொரு பவுலர் இல்லை என்றே கூற வேண்டும்” என்று பாராட்டினார்.

17,000 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்துள்ள உலகின் தலைசிறந்த பேட்ஸ்மென்களின் ஒருவராகத் திகழும் இந்திய கேப்டன் விராட் கோலியையே முஜிப் உர் ரஹ்மான் அன்று திகைக்கவைத்தார். விராட் கோலியின் மட்டைக்கும் கால்காப்புக்கு இடையே புகுந்து ஸ்டம்பைத் தாக்கும் கூக்ளியை வீசினார் முஜீப். ஜோஃப்ரா ஆர்ச்சரும் ஞாயிறன்று இவரது பந்து வீச்சில் திகைத்தார்.

ராஜஸ்தான் ராயல்சின் 3 விக்கெட்டுகளை 4 பந்துகளில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். ஆட்ட நாயகனாகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார்.

எந்த நிலையிலும் வீசுகிறார், அன்று டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்ற நிலையில் கடைசி ஓவரை தைரியமாக வீசினார் இந்த 17 வயது முஜீப். 12 ரன்களைத்தான் விட்டுக் கொடுத்தார்.

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச் சுற்று ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் ஹராரே மைதானத்தில் 4 விக்கெட்டுகளை 43 ரன்களுக்கு எடுத்து மே.இ.தீவுகளுக்கு அதிர்ச்சித் தோல்வி அளித்தார் முஜீப்.

எனவே ஆப்கான் அணி இந்தியாவுக்கு எதிராக வரலாற்று முதல் டெஸ்ட்டில் ஆடும்போது ரஷீத் கான், முஜீப் இருவரும் ஆடினால் அது இந்திய பேட்ஸ்மென்களுக்கும் ஸ்பின் பிட்சில் பிரச்சினைதான், வலுவான இந்திய பேட்டிங்கை இந்திய பிட்சில் இவர்கள் இருவரும் எதிர்கொள்வதும் ஒரு கற்றல் முயற்சிதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x