Published : 02 Apr 2018 08:35 AM
Last Updated : 02 Apr 2018 08:35 AM

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான முன்னிலையில் இங்கிலாந்து அணி- ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ் அரை சதம்

நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான முன்னிலையை நோக்கி பயணிக்கத் தொடங்கி உள்ளது.

கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோவ் 101, மார்க் வுட் 52 ரன்கள் சேர்த்தனர். நியூஸிலாந்து தரப்பில் டிம் சவுதி 6, டிரென்ட் போல்ட் 4 விக்கெட்கள் வீழ்த்தினர். இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 74.5 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. ஜீத் ராவல் 5, டாம் லதாம் 0, கேப்டன் கேன் வில்லியம்சன் 22, ராஸ் டெய்லர் 2, ஹென்றி நிக்கோல்ல்ஸ் 0, காலின் டி கிராண்ட் ஹோம் 72 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

வாட்லிங் 77, டிம் சவுதி 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்த ஜோடி நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடியது. வாட்லிங் 220 பந்துகளில், 11 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 85 ரன்களும், டிம் சவுதி 48 பந்துகளில், ஒரு சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் எடுத்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் போல்டானார்கள். இதன் பின்னர் களமிறங்கிய இஷ் சோதி 1, டிரென்ட் போட் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் வெளியேறினர். முடிவில் நியூஸிலாந்து அணி 93.3 ஓவர்களில் 278 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நீல் வாக்னர் 24 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராடு 6, ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்கள் வீழ்த்தினர்.

29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணி அலாஸ்டர் குக் விக்கெட்டை விரைவாக இழந்தது. அவர் 14 ரன்கள் எடுத்த நிலையில் டிரென்ட் போல்ட் பந்தில், வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஜேம்ஸ் வின்ஸ், மார்க் ஸ்டோன்மேனுடன் இணைந்து இன்னிங்ஸை சிறப்பாக கட்டமைத்தார். ஸ்டோன்மேன் 139 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் எடுத்த நிலையில் டிம் சவுதி பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 123 ரன்கள் சேர்த்தது. சிறிது நேரத்தில் ஜேம்ஸ் வின்ஸூம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

128 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்த அவர், டிரென்ட் போல்ட் பந்தை சிலிப் திசையில் அடித்த போது டெய்லரிடம் கேட்ச் ஆனது. 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இங்கிலாந்து அணி 66 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஜோ ரூட் 30, டேவிட் மலான் 19 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கைவசம் 7 விக்கெட்கள் இருக்க 231 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x