Published : 13 Apr 2018 04:22 PM
Last Updated : 13 Apr 2018 04:22 PM

பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் அடுத்த களபலி: கேள்விக்குறியான வஹாப் ரியாஸின் எதிர்காலம்

முன்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை மைக்கேல் கிளார்க் தலைமையில் ‘அதி திறன் அணி’யாக மாற்றியே தீருவேன் என்று அவதாரபுருஷர் போல் சூளுரைத்து சர்ச்சையில் சிக்கி அங்கிருந்து வெளியேறிய பிறகு பாகிஸ்தான் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று ஒவ்வொருவரையாக அனுப்புவது என்ற ‘திருப்பணி’யை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் மேற்கொண்டு வருகிறார்.

கம்ரன் அக்மல், உமர் அக்மல், மொகமது ஆமிர்... என்று இவரது களபலிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஹபீஸ் குறித்தும் ஆர்தர் கைவிரல்களை மூடி தாளம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் பயிற்சி முகாமுக்காக அறிவிக்கப்பட்ட 25 வீரர்கள் கொண்ட உத்தேசப் பட்டியலில் கூட வஹாப் ரியாஸ் பெயர் இடம்பெறவில்லை. அயர்லாந்து பயணத்துக்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வஹாப் ரியாஸின் பணி அர்ப்பணிப்பு, பயிற்சிக்கான நாட்டம் ஆகியவற்றை கேள்விக்குட்படுத்திய ஆர்தர், ‘இரண்டு ஆண்டுகளில் வஹாப் ரியாஸ் ஒரு போட்டியைக் கூட எங்களுக்காக வென்று தரவில்லை’ என்று சாடினார்.

இது தொடர்பாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்கு மிக்கி ஆர்தர் கூறும்போது, “2 ஆண்டுகளில் அவரால் எந்த ஒரு போட்டியையும் வென்று தர முடியவில்லை. நீண்ட காலமாக அணியில் இருப்பவர்கள் போட்டிகளை வென்று கொடுத்து தரநிலைகளை நிர்ணயிக்க வேண்டும்.

இல்லையெனில் நீண்ட எதிர்காலம் உடைய இளம் வீர்ர்களுக்குத்தான் வாய்ப்பளிக்க வேண்டும். வஹாபை நீக்குவது மிகப்பெரிய முடிவுதான் ஆனால் நேரத்துக்கேற்பவே அணித் தேர்வு செய்யப்படுகிறது. வீர்ர்கள் தங்கள் இடம்பற்றிய உத்தரவாதம் மற்றும் சவுகரிய நிலைகளிலிருந்து வெளியே வர வேண்டும்” என்றார்.

உடற்தகுதி சோதனையில் வஹாப் ரியாஸ் அதிகாரபூர்வ நிர்ணயமான 17.4 புள்ளிகள் ஸ்கோர் செய்தது போதாது என்று கூறும் ஆர்தர் அதிகாரப்பூர்வமற்ற 19 புள்ளிகள் என்று நிர்ணயம் செய்து வஹாபை வெளியேற்றியுள்ளார், புதிய அஃப்ரீடி 18 புள்ளிகள் எடுத்துள்ளார்.

“பந்து வீசும் போது வஹாப் ரியாஸை நான் குறை கூற மாட்டேன். பயிற்சி, கட்டுக்கோப்பு உள்ளிட்ட விஷயங்களில்தான் நான் அவரிடம் குறைகாண்கிறேன்.

நான் பாகிஸ்தான் கிரிக்கெட் சூழலை மாற்ற விரும்புகிறேன். குறைந்தபட்சமாக செய்வது போதும் என்று நினைக்கும் வீர்ர்களிடம் நான் ஆர்வம் காட்டுவதில்லை. இது உயர் திறன் சூழலாகும், இங்கு சாமானியங்களுக்கு இடமில்லை. போட்டிகளை சீரான முறையில் வெற்றிப்பெற்று தரவில்லையெனில் தானாகவே அணியில் உங்கள் இடம் கேள்விக்குறிதான் ஆகும்” என்கிறார் கண்டிப்புப் புலி மிக்கி ஆர்தர்.

ஜனவரி 2016லிருந்து வஹாப் ரியாஸ் 11 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார், இது சிறந்த பந்து வீச்சுதான். பாகிஸ்தானின் அதிகவிக்கெட்டுகள் வீழ்த்திய 3வது வீரராவார் வஹாப் ரியாஸ், இவர் இதுவரைவீழ்த்திய விக்கெட்டுகளில் முக்கால்வாசிக்கு மேல் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 உலகக்கோப்பை ஆஸி.க்கு எதிரான பவுலிங்கும்... மேலும்:

2015 உலகக்கோப்பையில் அடிலெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு ஸ்பெல் போட்டாரே அதை மறக்கமுடியாது, ஷேன்வாட்சனுக்கு இவருக்கும் ஒரு பெரிய போரே நடந்தது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். அதே போல் துபாயில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் வேகாத வெயிலில் ஒரு ஸ்பெல் போட்டு மொயின் அலி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோரை வீழ்த்தியது வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தது.

அதே போல் இலங்கைக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவிக்க பாகிஸ்தான் 262 ரன்களுக்குச் சுருண்டு 220 ரன்கள் பின் தங்கியிருந்தது. 2வது இன்னிங்சில் இலங்கை அணி 96 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன போது அதிர்ச்சியளித்தவர் வஹாப் ரியாஸ், 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உத்வேகம் அளித்தார், இதுதான் இவர் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டியாகும். ஆனாலும் பாகிஸ்தான் தோற்றது வேறு கதை. 2016-17 ஆஸ்திரேலியா தொடரிலும் பாகிஸ்தான் சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் வஹாப் ரியாஸ்தான்.

டெஸ்ட் போட்டிகள் அளவுக்கு ஒருநாள் போட்டிகளில் வஹாப் சோபிக்க முடியாமல் போனது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 8 ஓவர்களில் 87 ரன்கள் விளாசப்பட்டார், மே.இ.தீவுகளுக்கு எதிரான கடைசி டி20 போட்டியிலும் 44 ரன்களைக் கொடுத்தார் வஹாப்.

ஒரு நல்ல பவுலரை பாகிஸ்தான் கிரிக்கெட் பண்பாடு தெரியாத அயல் நாட்டுப் பயிற்சியாளர் ஒருவரைக் கொண்டு ஒழிப்பது என்பது எப்படி அனுமதிக்கப்படுகிறது என்பது புரியவில்லை.

மிக்கி ஆர்தர் ஒரு சர்ச்சைக்குரிய பயிற்சியாளர் என்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்குத் தெரியாதா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x