T20 WC | “தொடரை வெல்லும் அணியை நாங்கள் பெற்றுள்ளோம்” - ராகுல் திராவிட்

ராகுல் திராவிட் மற்றும் ஜடேஜா
ராகுல் திராவிட் மற்றும் ஜடேஜா
Updated on
1 min read

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை தொடரை நிச்சயம் வெல்லும் அணியை பெற்றுள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார். நியூயார்க் நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது.

“ஒவ்வொரு தொடரும் எனக்கு முக்கியமானது. இந்திய அணிக்கு நான் பயிற்சி தரும் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. அதனால் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இதுவே எனது கடைசி தொடர் என்ற காரணத்தால் எனது பணியில் எந்த மாற்றமும் இருக்காது. அனைத்தும் வழக்கம் போலவே இருக்கும்.

இந்த பயணம் இனிதானதாக இருந்தது. இந்தப் பணியை நேசிக்கிறேன். இது மிகவும் ஸ்பெஷலானது. இருந்தும் பல்வேறு காரணங்களால் என்னால் இதனை தொடர முடியவில்லை. அதனால் மீண்டும் நான் விண்ணப்பிக்கவில்லை. எனது பயிற்சியின் கீழ் இந்திய அணி ஐசிசி தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது.

2022 டி20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதியில் ஆடி இருந்தோம். பின்னர் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில் சிறப்பாக ஆடி இறுதிப் போட்டிக்கு முன்னேறினோம். கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் சிறப்பாகவே விளையாடி இருந்தோம்.

அதனால் நாங்கள் சிறந்த கிரிக்கெட் ஆடவில்லை என என்னால் சொல்ல முடியாது. அதே நேரத்தில் நாக்-அவுட் போட்டிகளில் நாங்கள் வெற்றிக் கோட்டை கடக்கவில்லை. ஆனால், இப்போது அது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. இந்த முறை அந்த வெற்றிக் கோட்டை கடப்பது தான் எங்கள் இலக்கு.

நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் குறித்து நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. ஆடுகளத்தின் தன்மையை அறிந்து ஆட வேண்டியது அவசியம். அதற்கு எங்களது அனுபவம் உதவும். தொடரை வெல்லும் அணியை நாங்கள் பெற்றுள்ளோம்” என திராவிட் தெரிவித்தார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இதுவே ராகுல் திராவிடுக்கு கடைசி தொடர். பயிற்சியாளர் பொறுப்பில் தொடருமாறு கேப்டன் ரோகித் சர்மா கேட்டுக் கொண்டும் அதனை அவர் மறுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in