

இருபது ஓவர் உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றை இந்திய அணிக்கு பெற்றுத் தந்த கேப்டன் என்பது உள்பட இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன் என்ற பெருமைக்கு உரியவர் தோனி.
அவரே இப்போது அந்நிய மண்ணியில் அதிக டெஸ்ட் தோல்விகளைச் சந்தித்த இந்திய அணிக்கு கேப்டன் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு நியூஸிலாந்து அணியில் நீண்ட நாள்களாக கேப்டனாக இருந்த ஸ்டீபன் பிளமிங், மேற்கிந்தியத்தீவுகள் அணி கேப்டனாக இருந்த பிரையன் லாரா ஆகியோர் அதிகபட்சமாக 16 டெஸ்ட் தோல்விகளை சந்தித்த கேப்டனாக உள்ளனர்.
இங்கிலாந்தில் அடைந்துள்ள இரு தோல்விகளையும் சேர்த்து இப்போது தோனி தலைமையில் இந்திய அணி 13 டெஸ்ட்களில் தோல்வியடைந்துள்ளது. இன்னும் 3 டெஸ்ட் போட்டிகளில் தோற்றால் பிளமிங், லாரா வரிசையில் தோனி இணைந்துவிட வாய்ப்பு உள்ளது.
தோனி தலைமையில் இந்திய அணி வெளிநாடுகளில் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. 8 டெஸ்ட்கள் டிரா ஆனது. மீதி 13 ஆட்டங்களும் தோல்விதான்.
இதற்கு முன்பு இந்திய அணி கேப்டன்களாக இருந்த மன்சூர் அலிகான் பட்டோடி, அசாருதீன், கங்குலி ஆகியோர் வெளிநாடுகளில் தலா 10 டெஸ்ட் தோல்விகளை சந்தித்துள்ளனர். அதே நேரத்தில் கங்குலி அந்நிய மண்ணில் 11 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி தேடித்தந்தவர் என்ற பெருமைக்குரியவராக உள்ளார். இப்போது இங்கிலாந்தில் நடை
பெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்னடைவில் உள்ளது. முதல் டெஸ்ட் டிரா ஆனது. லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்தது.
எனினும் அந்த வெற்றி மூலம் இந்திய அணி வீரர்கள் உத்வேகம் பெறவில்லை. அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்தனர். சவுதாம்ப்படனில் நடைபெற்ற 3-வது டெஸ்ட்டில் 266 ரன்கள் வித்தியாசத்திலும், மான்செஸ்டரில் நடைபெற்ற 4-வது டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தனர்.