

ஜார்ஜ்டவுன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் உகாண்டா அணிகள் விளையாடின. இதில் 125 ரன்களில் வெற்றி பெற்றது ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி.
கயானவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற உகாண்டா பந்து வீச முடிவு செய்தது. ஆப்கானிஸ்தான் அணிக்காக குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஸத்ரான் இன்னிங்ஸை ஓபன் செய்தனர்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 46 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து இப்ராஹிம் ஸத்ரான் ஆட்டமிழந்தார். தொடர்ந்து 45 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ரஹ்மானுல்லா குர்பாஸும் ஆட்டமிழந்தார். 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது ஆப்கானிஸ்தான்.
184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை உகாண்டா விரட்டியது. முதல் ஓவரில் ரோனக் படேல் மற்றும் ரோஜரை அடுத்தடுத்த பந்துகளில் வெளியேற்றினார் ஆப்கன் பவுலர் ஃபசல்ஹக் ஃபரூக்கி. தொடர்ந்து சீரான இடைவெளியில் உகாண்டா பேட்ஸ்மேன்கள் விக்கெட்டை இழந்து வந்தனர். 13-வது ஓவரை ஃபரூக்கி வீசினார். அதில் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
16 ஓவர்களில் 58 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது உகாண்டா. இதன் மூலம் 125 ரன்களில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. ஃபரூக்கி 4 ஓவர்கள் வீசி 9 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். ரஷித் கான் மற்றும் நவீன் உல் ஹக் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இவர்கள் இருவரும் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். முஜீப், 1 விக்கெட் வீழத்தி இருந்தார். ஆட்ட நாயகன் விருதை ஃபரூக்கி வென்றார்.