Published : 18 Apr 2018 01:16 am

Updated : 18 Apr 2018 09:27 am

 

Published : 18 Apr 2018 01:16 AM
Last Updated : 18 Apr 2018 09:27 AM

ரோஹித் சர்மா 94, குருணால் பாண்டியா 3 விக்.; கோலி 92 வீண்: மும்பையிடம் ஆர்சிபி சரண்

94-3-92

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018-ன் 14வது போட்டியில் 213 ரன்கள் குவித்த மும்பை இந்தியன்ஸ் பிறகு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 167/8 என்று கட்டுப்படுத்தி 46 ரன்களில் பெரிய வெற்றியைப் பெற்று அட்டவணையில் புள்ளிகள் பட்டியலில் இணைந்தது.

டாஸ் வென்று பேட் செய்து பார்க்காமல் முதலில் மும்பையை பேட் செய்ய அழைத்து தவறிழைத்தார் விராட் கோலி.

இரண்டு கேப்டன்களும் 90க்கும் அதிகமாக அடித்த ஒரு அரிய நிகழ்வு ஐபிஎல் போட்டியில் நிகழ்ந்தாலும் ரோஹித் சர்மா 52 பந்துகளில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 94 ரன்கள் எடுத்தது வெற்றிக்கு வித்திட விராட் கோலி 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தாலும் மற்ற ஆர்சிபி வீரர்களில் ஒருவர் கூட 20 ரன்கள் வரை கூட எடுக்க முடியவில்லை என்பதுதான் நடந்தது. 86/5 என்று 12வது ஓவரில் பெங்களூரு அணி ஆனபிறகே விராட் கோலியின் இன்னிங்ஸ் நிகர ரன் விகிதத்தை வலுப்படுத்துவதற்காக அமைந்த இன்னிங்ஸ் போல் ஆகிவிட்டது. ஒரு நேரத்தில் ஓவருக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆந்த்ரே ரஸல், பிராவோ ரக அதிரடி வீரர்கள் இருந்தாலும் கூட வெற்றிபெற முடியாது எனும்போது விராட் கோலியிடம் அத்தகைய தாறுமாறான ஷாட்கள் கைவசம் இல்லை, எதிரணியினரை திணறடிக்கும் புதியது புனையும் திடீர் ஸ்ட்ரோக்குகளும் கைவசம் இல்லை. ஆகவே ஒருவிதத்தில் விராட் கோலி பேட்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி தன் பந்து வீச்சின் மூலம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது என்றே கூற வேண்டும்.

மெக்லினாகன், குருணால் பாண்டியாவிடம் சரணடைந்த ஆர்சிபி!

214 ரன்கள் இலக்கு என்பது சாதாரணமல்ல, அனைவரும் இறங்கி அடிக்க வேண்டியதுதான், நின்று நிதானிப்பதற்கெல்லாம் அங்கு நேரமில்லை.

மெக்கல்லம் இல்லாததால் விராட் கோலியும் குவிண்டன் டி காக்கும் இறங்கினர். பும்ராவின் முதல் ஓவர் கடைசி பந்தை மிக அருமையாக நேர் பவுண்டரி அடித்தார் கோலி. 2வது ஓவரே குருணால் பாண்டியா வந்தார் முதல் பந்தை டிகாக் ஸ்வீப் செய்து பவுண்டரிக்கு விரட்டி பிறகு ஒரு ரன் எடுத்து கோலியிடம் ஸ்ட்ரைக் கொடுக்க கோலி ஒரு அருமையான சொடுக்கு ஷாட் மூலம் மிட்விக்கெட்டில் ஒரு பவுண்டரியையும், பிறகு கவர் திசையில் பளார் என்று புல்லட் ஷாட் பவுண்டரி ஒன்றையும் அடித்தார். மெக்லினாகன் வீசிய அடுத்த ஓவரில் கோலிக்கு அருமையான ஒரு பந்து பேடின் மேல் பகுதியில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சென்றது பயங்கர முறையீடு எழுந்தது மும்பை ரிவியூ செய்யவில்லை, அது நாட் அவுட் என்று ரீப்ளேயில் தெரிந்தது.

முஸ்தபிசுர் வந்தார் டி காக் அவரை ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் வெளுக்க 4 ஓவர்களில் 40 என்ற நல்ல தொடக்கம் கண்டது ஆர்சிபி. 19 ரன்களில் இருந்த டி காக் முதல் விக்கெட்டாக வெளியேறினார், மெக்லினாகன் பந்தை இறங்கி வந்து கவர் திசையில் ஆட முனைந்தார் பந்து சிக்கவில்லை பவுல்டு ஆனார். அதே ஓவரில் மிக முக்கிய விக்கெட்டான டிவில்லியர்ஸையும் கழற்றினார் மெக்லினாகன். மிடில் ஸ்டம்பில் பிட்ச் ஆன ஷார்ட் பிட்ச் பந்தை டிவில்லியர்ஸ் புல் ஆட தூரம் போகாமல் ஹர்திக் பாண்டியாவிடம் கேட்ச் ஆனது, டிவில்லியர்ஸ் 1 ரன்னில் வெளியேறினார்.

புதிர் ஸ்பின்னர் மார்க்கன்டே தன் முதல் ஓவரில் கோலிக்கு 4 ரன்களையே கொடுக்க அடுத்த ஓவரில் குருணால் பாண்டியா 6 ரன்களையே கொடுத்து சிக்கனம் காட்டினார்.

மந்தீப் சிங் 16 ரன்கள் எடுத்த நிலையில் குருணால் பாண்டியாவின் பந்தை வெகு முன்னதாக இறங்கி வர குருணால் பந்தை வைடாக வீச இஷான் கிஷன் ஸ்டம்ப்டு செய்தார். அடுத்த பந்தே ஃபார்மில் இல்லாத கோரி ஆண்டர்சன், குருணால் பாண்டியா பந்தை எடுத்த எடுப்பில் அடிக்கப் போய் டீப்பில் கேட்ச் ஆகி டக் அவுட் ஆனார். பிறகு 12வது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களில் குருணால் பாண்டியாவை ஒரு மோசமான ஷாட்டை ஆட லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேற 12 ஓவர்கள் முடிவில் 87/5 என்று ஆனது. அப்போது விராட் கோலி 33 பந்துகளில் 38 ரன்களையே எடுத்து ஆடிவந்தார். மார்க்கண்டே தன் 4வது ஓவருக்குத் திரும்ப விராட் கோலி தன் அருமையான இன்சடி அவுட் எக்ஸ்ட்ரா கவர் ஷாட்டில் சிக்ஸ் அடித்து வரவேற்றார். ஆனால் அதே ஓவரில் சர்பராஸ் கான் 5 ரன்களில் தாறுமாறாக மேலேறி வந்து ஆடப்போக பந்தை வெளியே வீசினார் மார்க்கண்டே, மீண்டும் இஷான் கிஷன் ஸ்டம்பிங் செய்தார்.அவ்வளவுதான் 14 ஓவர்களில் 104/6 என்ற நிலையில் ஆர்சிபி வெற்றிக்கு ஒரு போதும் சாத்தியமாகாதவாறு ஓவருக்கு 18.33 ரன்கள் தேவைப்பட்டது.

இடையில் விராட் கோலி, ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையைக் கடந்தது மட்டும்தான் ஆறுதலான விஷயம், கோலி 92 நாட் அவுட்டாக 167/8 என்று முடிந்தது ஆர்சிபி.

மும்பை அணியில் குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளையும் பும்ரா, மெக்லினாகன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மயங்க் மார்க்கண்டே 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

உமேஷ் யாதவ்வின் முதல் 2 பந்துகளுக்குப் பிறகு ரோஹித், எவின் லூயிஸ் அதிரடி:

முன்னதாக டாஸ் வென்று விராட் கோலி மும்பையை பேட் செய்ய அழைத்தார். சூரிய குமார் யாதவ், எவின் லூயிஸ் இறங்கினர்.

விராட் கோலி முதலில் சிராஜிடம் பந்தைக்கொடுப்பார் என்று தோன்றியது. ஆனால் திடீரென என்ன தோன்றிற்றோ உமேஷ் யாதவ்வை அழைத்து வீசச் செய்தார்.

உமேஷ் யாதவ் முதல் ஓவரைத் தொடங்கினார்.

முதல் பந்து ஆஃப் ஸ்டம்பில் பிட்ச் ஆகி சற்றே, மிகச்சற்றே நின்று வந்தது சூரிய குமார் யாதவ் தளர்வாக ஆட பந்து ஊடுருவி ஸ்டம்பைத் தாக்கியது, சூரியகுமார் யாதவ் கோல்டன் டக்.

சூரிய குமார் யாதவ் நல்ல பார்மில் இருப்பவர் முதல் பந்தில் வெளியேற, இஷான் கிஷன் களமிறங்கினார். உமேஷ் யாதவ் இவருக்கும் வேகமாக ஒரு பந்தை உள்ளே கொண்டு வர இஷான் கிஷன் தடுப்பாட்டம் எடுபடவில்லை மீண்டும் பவுல்டு. 2 பந்துகளில் 2 விக்கெட், ஹாட்ரிக் வாய்ப்பு.

ரோஹித் சர்மா இறங்கியவுடன் கால்காப்பில் வாங்கினார். ஹாட்ரிக் கிடைக்கவில்லை. அன்று ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய உமேஷ் இன்று முதல் 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ரோஹித் சர்மா அவசரம் அவசரமாக பேடைக் கட்ட வைத்தார்.

அதன் பிறகு எவின் லூயிஸ் தன் தசைப் பலத்தைக் காட்டினார். வாஷிங்டன் சுந்தருக்கு சரியான லெந்த் கிடைக்கவில்லை வைட், ஷார்ட் என்று வீசி முதல் ஓவரிலேயே 19 ரன்கள் விளாசப்பட்டார். சிராஜ் வந்தார் சிக்ஸ் அடித்தார் எவின் லூயிஸ். பிறகு இன்னொரு பவுண்டரி அடிக்க அந்த ஓவரிலேயே 16 ரன்கள் வந்தது. வோக்ஸ் முதல் ஓவரில் 4 ரன்களையே கொடுத்தாலும் பவர் பிளேயில் 60/2 என்று மும்பை இந்தியன்ஸ் மீண்டது.

9வது ஓவரில் சிக்ஸர் மூலம் எவின் லூயிஸ் ஐபிஎல் முதல் அரைசதம் கண்டார். ரோஹித் சர்மா வாஷிங்டன் சுந்தரை மேலேறி வந்து மிக அருமையான ஒரு லெக் திசை சிக்சரை அடித்தார். சாஹலை ஸ்லாக் ஸ்வீப் செய்துதான் லூயிஸ் 34 பந்துகளில் 51 ரன்கள் வந்தார். முதல் ஓவரில் 9 ரன்கள் கொடுத்த சாஹல், தன் 2வது ஓவரில் லூயிஸ் காட்டடியில் சிக்கினார். இரண்டு டாட் பால்களுக்குப் பிறகு லாங் ஆஃபில் ஒரு சிக்ஸ், பிறகு மீண்டும் ஒரு ஸ்லாக் ஸ்வீப் சிக்ஸ். சாஹல் 2 ஓவர்களில் 22 ரன்கள் விளாசப்பட்டார். கடைசியில் 42 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் அவர் 65 ரன்களில் கோரி ஆண்டர்சனிடம் வீழ்ந்தார். ரோஹித் சர்மா, எவின் லூயிஸ் கூட்டணி 11 ஒவர்களில் 108 ரன்கள் வெளுத்தனர்.

ரோஹித் சர்மாவின் அபார பினிஷிங்:

சாஹல் பாவம் தன் முழு கோட்டா ஓவர்களையும் வீச முடியவில்லை. சுந்தரும் 2 ஓவர்களில் 32 ரன்கள் கோலி யாரைத்தான் நம்புவார்? கோரி ஆண்டர்சனைத்தான், ஆனல் கோரி ஆண்டர்சனின் 19 பந்துகளில் 39 ரன்களைக் குவித்தார் ரோஹித் சர்மா. கோரி ஆண்டர்சனின் கோணங்கள் அவருக்கு வாகாகப் போய் விட்டது, சேவாக் போல் ஆஃப் திசையில் பவுண்டரிகளையும் சிராஜ், உமேஷ் லெக் திசையில் காட்டிய போது சிக்சர்களையும் வெளுத்து வாங்கினார் ரோஹித் சர்மா.

ஹர்திக் பாண்டியா விக்கெட் கீப்பரிடம் கொடுத்த கேட்ச் கள நடுவரால் அவுட் கொடுக்கப்பட ரிவியூவில் சர்ச்சைக்குரிய முறையில் நாட் அவுட் ஆனது. இது நடந்தது வோக்ஸ் வீசிய 19வது ஓவரில், கோலி கடுப்பாகி நடுவரிடம் வாக்குவாதம் புரிந்தார். ஆனால் அடுத்த 2 பந்துகள் சிக்சருக்கு பாண்டியா பறக்கவிட்டது கோலியின் கோபத்தை அதிகரித்திருக்கும். கோரி ஆண்டர்சன் வீசிய கடைசி ஓவரில் ரோஹித் சர்மா 4,6,4 என்று விளாசி 52 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி பந்தை ஹர்திக் பளார் என்று பவுண்டரி அடிக்க மும்பை இந்தியன்ஸ் 213 ரன்கள் குவித்தது.

ராயல் சாலஞ்சர்ஸ் அணி ஆட்டத்தின் எந்த நிலையிலும் இலக்கை வெற்றிகரமாகத் துரத்தும் என்று நம்புவதற்கு இடமாக இல்லை. குருணால் பாண்டியா, மார்க்கண்டே இணைந்து 8 ஓவர்களில் 53 ரன்களைக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மெக்லினாகன், குருணால் பாண்டியா 2 ஓவர்களில் ஆர்சிபியின் முதுகெலும்பை உடைத்தனர்.

இங்கிலாந்து வீரர் ஒருவர் கூறினாரே.... ஆர்சிபி அணி ஒரு ஜோக் என்று அதுதான் இன்றைய தோல்வி நினைவு படுத்தியது.

ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author