T20 WC பயிற்சி ஆட்டம்: வங்கதேசத்தை 60 ரன்களில் வென்றது இந்தியா!

இந்திய அணி வீரர்கள் | படம்: எக்ஸ்
இந்திய அணி வீரர்கள் | படம்: எக்ஸ்
Updated on
1 min read

நியூயார்க்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் பயிற்சி ஆட்டத்தில் வங்கதேசத்தை 60 ரன்களில் வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டியில் உள்ள ஐசனோவர் பூங்காவில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் 20 ஓவர்களில் 182 ரன்கள் எடுத்தது இந்தியா. 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை வங்கதேசம் விரட்டியது.

அந்த அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து வந்தது. அதிகபட்சமாக மஹ்மதுல்லா 40 ரன்கள் எடுத்தார். ஷகிப் அல் ஹசன், 28 ரன்கள் எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் மூலம் இந்தியா 60 ரன்களில் வெற்றி பெற்றது.

பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, 8 பவுலர்களை பயன்படுத்தினார். இதில் அர்ஷ்தீப் மற்றும் ஷிவம் துபே என இருவரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பும்ரா, சிராஜ், அக்சர் படேல் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

முன்னதாக, முதல் இன்னிங்ஸில் சஞ்சு சாம்சன் மற்றும் ரோகித் சர்மா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இதில் சஞ்சு, 1 ரன்னில் எல்பிடபள்யூ ஆனார். 7-வது ஓவரில் ரோகித் சர்மா 23 ரன்களில் வெளியேறினார். முதல் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 92 ரன்களைச் சேர்த்திருந்தது. அரைசதம் கடந்த ரிஷப் பந்த் ரிட்டயர்டு அவுட் முறையில் வெளியேறினார்.

சூர்யகுமார் யாதவ் - ஷிவம் துபே பொறுப்பாக விளையாடிக்கொண்டிருக்க, 15-வது ஓவரில் 14 ரன்களுக்கு அவுட்டாகி வெளியேறினார் துபே. அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா ஹாட்ரிக் சிக்சர்களை விளாசி மிரட்டினார். மறுபுறம் சூர்யகுமார் யாதவ் 31 ரன்களில் விக்கெட்டானார். 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 165 ரன்களைச் சேர்த்திருந்தது.

ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா இணைந்து ரன்களை உயர்த்த நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 182 ரன்களைச் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெஹதீஹசன், ஷரிஃபுல் இஸ்லாம், மஹ்முதுல்லா, தன்வீர் இஸ்லாம் ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in