

போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை புரட்டி எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
தென் ஆப்பிரிக்காவுக்கு ஒயிட்வாஷ் கொடுத்த மேற்கு இந்தியத் தீவுகள், இப்போது டி20 உலகக் கோப்பைக்கு வித்தியாசமான அதிரடி முறையில் உலகிற்கு திருப்பி அடித்துக் காட்டி வருகிறது. போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று முதலில் பேட் செய்த அந்த அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்து 35 ரன்களில் தோல்வி கண்டது.
ஆஸ்திரேலிய அணியில் ட்ராவிஸ் ஹெட், பாட் கமின்ஸ், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் இன்னும் இணையவில்லை. மிட்செல் மார்ஷ் கேப்டன்சியில் வழக்கம் போல செயல்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட் முதல் ஓவரை வீச ஷேய் ஹோப் அவரை 5-வது பந்தில் சிக்ஸர் விளாசத் தொடங்கினார்.
மறு முனையில் சார்லஸ் ஜோஷ், ஹேசில்வுட் ஓவரில் 2 பவுண்டரிகளை விளாச 3-வது ஓவர் ஸ்பின்னர் ஆஷ்டன் ஆகரிடம் அளிக்கப்பட்டது. இவரை 3 பவுண்டரிகள் அடித்தார் சார்லஸ். ஆனால், ஹோப் 14 ரன்களில் இங்லிஸிடம் கேட்ச் ஆகி வெளியேற பூரன் இறங்கி மீதமிருந்த ஒரு பந்தில் பெரிய சிக்ஸரை விளாச அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது.
4-வது ஓவரை எல்லிஸ் வீச பூரன் 2 சிக்ஸர்களை விளாசினார். பவர் பிளேயில் 1 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு பூரன், சிக்ஸர் மழை பொழிந்தார். மொத்தமாக 8 சிக்ஸர்களை விளாசி, 25 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆடம் ஜாம்பாவிடம் வெளியேறினார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 300. மொத்தம் 5 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் என்று செம காட்டுக் காட்டினார். 10 ஒவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் என்றும் 15 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் என்றும் செம விளாசு விளாசியது.
இந்த இடைப்பட்ட ஓவர்களில் ரோவ்மேன் பவல் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 25 பந்துகளில் 52 ரன்களை அடித்து நொறுக்கி டிம் டேவிட்டிடம் ஆட்டமிழந்தார். 17-வது ஓவரில் ருதர்ஃபோர்டு இறங்கிய வேகத்தில் ஜாம்பா வீசிய 17-வது ஓவரில் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்களை விளாசி அந்த ஓவரில் 22 ரன்கள் வர கடைசி 5 ஒவர்களில் 74 ரன்களை குவித்தது மேற்கு இந்தியத் தீவுகள். ஹெட்மையர் 18 ரன்களையும், ருதர்ஃபோர்டு 18 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 47 ரன்களையும் விளாச மேற்கு இந்தியத் தீவுகள் 257 ரன்களைக் குவித்தது.
டிம் டேவிட் 4 ஓவர் 40, ஹேசில்வுட் 4 ஓவர் 55, ஆஷ்டன் ஆகர் 4 ஓவர் 58, ஜாம்ப்பா 4 ஓவர் 62 என அனைவரும் செம சாத்து வாங்கினார்கள். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் 6 பந்துகளில் 15 ரன்களுடன் வெளியேறினார். தொடக்கத்தில் இறங்கிய ஆஷ்டன் ஆகர், 13 பந்துகளில் 28 ரன்களை எடுத்தார். மிட்செல் மார்ஷ் 4 ரன்களில் வெளியேற 9.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவும் வேகமாக இலக்கை சேஸ் செய்தது.
13-வது ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 156 ரன்கள் என்று இருந்த போது 7 ஓவர்களில் 102 ரன்கள் வெற்றிக்குத் தேவை என்பது கொஞ்சம் அதிகமாக இருந்தது. மொத்தத்தில் 222 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. அல்ஜாரி ஜோசப் 4 ஓவர் 44 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், குடாகேஷ் மோட்டி அருமையாக வீசி 4 ஓவர் 31 ரன்கள் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக பூரன் தேர்வு செய்யப்பட்டார்.