

லண்டன்: ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை அன்று நடைபெற்ற 4-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாத்தி எடுத்து வெற்றி பெற்றது இங்கிலாந்து. இதன் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.
முதலிலேயே சேஸிங் என்று முடிவெடுத்த இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர், டாஸ் வென்றவுடன் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். ஆனால், பாகிஸ்தான் அணியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்க முடியவில்லை. உஸ்மான் கான் 38, பாபர் அஸம் 36 என்று அதிகபட்சமாக ரன்களை எடுக்க பாகிஸ்தான் 157 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
மார்க் உட், ஆதில் ரஷீத், லியாம் லிவிங்ஸ்டன் தலா 2 விக்கெட்டுகளையும். ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், மொயின் அலி தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து, ஜாஸ் பட்லர் (39), பில் சால்ட் (45) அதிரடியில் பவர் பிளேயிலேயே போட்டியை முடிக்க அடித்தளம் இட்டு 82 ரன்களைக் குவித்தனர். மற்றபடி எல்லாம் ஃபார்மாலிட்டிதான். 15.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 4 ஓவர்களில் 6 பவுண்டரி 3 சிக்ஸர்களை வாரி வழங்கி 51 ரன்களை விட்டுக் கொடுத்தார். முகமது ஆமிர் 2 ஓவர்களில் 27 ரன்கள் என்று சாத்து வாங்கினார். ஹாரிஸ் ராவுஃபுக்கும் சாத்து என்றாலும் அவர் 4 ஓவர் முடிக்காமலேயே 38 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தான் அணியில் ரிஸ்வான், பாபர் அஸம் மீண்டும் தொடக்கத்தில் இறங்கி திட்டவட்டமாக ஆடி பவர் பிளேயில் 59 ரன்கள் என்று ஸ்கோரை வைத்திருந்தனர். ஆனால், அடுத்த 27 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான். இதில் ஆதில் ரஷீத் லெக் ஸ்பின்னில் பாகிஸ்தான் மடிந்தது.
உஸ்மான் கானின் 21 பந்து 38 ரன்கள்தான் பாகிஸ்தான் உடைந்து நொறுங்காமல் காப்பாற்றியது. மிடில் ஓவர்களில் லியாம் லிவிங்ஸ்டன் சிறப்பாக வீசி உஸ்மான் கானை வெளியேற்றினார், இங்கு அருமையான ஒரு கேட்சை எடுத்தார் கிறிஸ் ஜோர்டான். முன்பக்கம் டைவ் அடித்து பிடித்த கேட்ச் அது. ஹை ரிஸ்க் கேட்ச். அதனால் கிரேட் கேட்ச் ஆனது. பாகிஸ்தான் 157 ரன்களுக்கு மடிந்தது.
பாக். பவுலர்களுக்கு ‘நோ பீஸ் ஆஃப் மைண்ட்’: பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களை நிம்மதியில்லாமல் இங்கிலாந்து பவுலர்கள் செய்து விட்டனர் என்றும் கூறலாம், சிந்தனையின்றி திட்டமிடாமல் வீசிய பாகிஸ்தான் பவுலர்கள் என்றும் கூறலாம். ஃபில் சால்ட், ஜாஸ் பட்லர் பேய் ஃபார்மில் இருந்தனர். நசீம் ஷாவை ஒரே ஓவரில் 16 ரன்கள், மீண்டும் வந்து ஊதிப் பெருக்கப்படும் முகமது ஆமீரை ஒரே ஓவரில் 25 ரன்கள் விளாசினர். பவர் பிளேயில் 78 ரன்கள் விளாசப்பட்டது.
பிறகு ஹாரிஸ் ராவுஃப் கடும் வேகத்துடன் ஓவர்களை வீசினார். அவசரம் அவசரமாக பில் சால்ட், பட்லர், வில் ஜாக்ஸ் ஆகியோரை பெவிலியனுக்கு அனுப்பினார். ஆனால், ஜானி பேர்ஸ்டோ 1 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 16 பந்தில் 28 ரன்களையும், ஹாரி புரூக் 14 பந்துகளில் 17 ரன்களையும் குவிக்க 15.3 ஓவர்களில் இலக்கு முடிந்தது. அதுவும் ஹாரி புரூக், ஹாரிஸ் ராவுஃப் பந்தை கவருக்கு மேல் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்து வைத்தார்.
பாகிஸ்தானின் இடைநிலை பேட்டிங் சொதப்பலினாலும் பந்து வீச்சை ஜாஸ் பட்லர், பில் சால்ட் புரட்டி எடுத்ததாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. தொடரை 2-0 என்று அந்த அணி இழந்தது.