Published : 09 Apr 2018 09:45 AM
Last Updated : 09 Apr 2018 09:45 AM

நான் நிறைய பந்துகளை விரயம் செய்தேன்: விராட் கோலி ஒப்புதல்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல்- 2018 போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு 200 ரன்களை எட்டியிருக்கலாம் ஆனால் கேப்டன் விராட் கோலி வழக்கத்துக்கு மாறாக படுமந்தமாக ஆடி 33 பந்துகளில் 31 ரன்களையே எடுத்ததும் தோல்விக்குக் காரணமாகியது.

அதாவது ரன் எடுக்காத டாட் பால்கள் கோலி பேட்டிங்கில் அதிகம், இதை அவரே ஒப்புக்கொண்டார். கோலி இறங்கும் போது ரசிகர்கள் மைதானம் நெடுக ‘கோலி.. கோலி’ என்று கோஷம் எழுப்பி உசுப்பேற்றிய போதும் கூட கோலி பேட்டிங் நேற்று சோபிக்கவில்லை.

இதனை அவரும் ஒப்புக் கொண்டு பேசியுள்ளார். கோலி இறங்கி முதல் 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்தார். குல்தீப் யாதவ் வீசிய 5வது ஓவரில் கடைசி 3 பந்துகளில் இரண்டு பந்துகளை மிட் ஆஃபுக்குத் தள்ளிவிட்டார், ரன் இல்லை, கடைசி பந்தை பவுலரிடமே தள்ளி விட்டார் ரன் இல்லை. இத்தனைக்கும் குல்தீப் யாதவுக்கு சரியான லைன் கிடைக்கவில்லை இதே ஓவரில்தான் ஒரு லெக் திசை மோசமான பந்தில் 5 வைடுகள் சென்றது.

பிறகு சாவ்லாவின் அடிக்க வாய்ப்பு கிடைத்த ஒரு பந்தையும் கோட்டை விட்டார் கோலி. 7வது ஓவரில் நரைனின் முதல் 2 பந்துகள் பிறகு கடைசி 2 பந்துகள் கோலி ரன் எடுக்காமல் டாட் பால்களாக மாறியது. மொத்தம் அவர் சந்தித்த33 பந்துகளில் 11 பந்துகள் ரன் இல்லாத டாட் பால்களானது. இந்த 11 பந்துகளில் அவர் குறைந்தது 15 ரன்களையாவது எடுத்திருந்தால் அப்படியிப்படி என்று 200 ரன்கள் பக்கம் வந்திருக்கும்.

இந்நிலையில் சுயவிமர்சன ரீதியாக விராட் கோலி கூறியது:

15 ரன்கள் குறைவாக எடுத்தோம். நான் உட்பட ஏகப்பட்ட டாட் பால்கள் (ரன் இல்லாத பந்துகள்), நான் நிறைய பந்துகளை விரயம் செய்தேன்.

பகுதி நேர ஸ்பின்னரிடம் டிவில்லியர்ஸும் நானும் அடுத்தடுத்து அவுட் ஆனோம். அது ஆட்டத்தின் போக்கை மாற்றியது. ஆனாலும் இழப்பதற்கு ஒன்றுமில்லை இந்தப் போட்டியிலிருந்து நிறைய பாசிட்டிவ் அம்சங்களை எடுத்துக் கொள்கிறோம். ஸ்பின்னர்கள் பவுலிங் செய்வது கடினமாக அமைந்தது.

இவ்வாறு கூறினார் கோலி.

தினேஷ் கார்த்திக் கூறும்போது, “ஏ.பி.டிவில்லியர்ஸ், கோலி கடைசி வரை நின்றிருந்தால் கடினமாக அமைந்திருக்கும். ஆனால் எங்கள் பக்கம் அதிர்ஷ்டம் இருந்தது. ரசிகர்கள் அபாரம், ரசிகர்களுக்காகத்தான் ஆடுகிறோம், இப்படிப்பட்ட ரசிகர்களுக்காகவும் இப்படிப்பட்ட அணிக்காகவும் ஆடுவதில் பெருமை அடைகிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x