

நியூயார்க்: டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தான் தேர்வானது மிகவும் உணர்வுபூர்வமானது என்றும். அதை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
29 வயதான சஞ்சு சாம்சன், கடந்த 2015 வாக்கில் இந்திய அணியில் அறிமுகமானார். இதுநாள் வரையில் அவர் மொத்தம் 16 ஒருநாள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 510 ரன்களும், டி20 கிரிக்கெட்டில் 374 ரன்களும் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பை என எந்தவொரு தொடரிலும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நான் தேர்வானது மிகவும் உணர்வுபூர்வமானது. மெய்யாகவே இது நான் எதிர்பார்க்காத ஒன்று. உத்தேச தேர்வுக்கான வீரர்களின் பட்டியலில் கூட நான் இருந்திருக்க மாட்டேன். அதையும் நான் அறிவேன்.
இருந்தாலும் ஐபிஎல் சீசனில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முடிவு செய்தேன். அதற்காக எனது போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்தேன். முழுவதும் எனது கவனம் ஆட்டத்தின் மீது இருந்தது. சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தி எனது அணியை வெற்றி பெற செய்ய வேண்டுமென விரும்பினேன்.
அது உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பை பெற உதவும் என எண்ணினேன். உலகின் சிறந்த அணியில், அதுவும் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறுவது சிறப்பான தகுதியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.