Last Updated : 30 May, 2024 02:49 PM

 

Published : 30 May 2024 02:49 PM
Last Updated : 30 May 2024 02:49 PM

தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் ரயிலில் கீழே அமர்ந்து பயணித்து வரும் அவலம்

தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் ரயிலில் கீழே அமர்ந்து பயணித்து வருகின்றனர்.

புதுச்சேரி: தேசிய ஜூடோ போட்டியில் பங்கேற்ற புதுச்சேரி வீரர்கள் பரிசுகளை வென்றும், ரயிலில் கீழே அமர்ந்து பயணித்து வரும் சூழலில் இருப்பதாக பயிற்சியாளர் வீடியோவில் புகார் அளித்துள்ளார்.

தேசிய அளவிலான ஜூடோ தற்காப்பு கலை போட்டி இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த 25-ம் தேதி முதல் நடந்தது. இதில் புதுவையில் இருந்து சென்ற விளையாட்டு வீரர்கள் நீலவேணி (16), மணிவண்ணன் (26) ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களின் பயிற்சியாளராக காவல் துறையில் பணியிற்றும் பாலசந்தர் உடன் சென்றுள்ளார். சென்னையில் இருந்து டெல்லி வரை செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்ற இவர்களுக்கு போகும்போது டிக்கெட் உறுதி செய்யப்பட்டது.

ஆனால், புதுச்சேரி திரும்பி வரும்போது இவர்களுக்கு டிக்கெட் உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் உறுதி செய்யப்படாத டிக்கெட்டில் தரையில் அமர்ந்து வருகின்றனர். டிக்கெட் இன்றி ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கானவர்கள் ஏறி, இறங்குவதால் விளையாட்டு வீரர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

டிக்கெட்டில் காத்திருப்பு பட்டியலில் 14-வது இடத்தில் தாங்கள் இருந்தாலும் 120-வது இடத்தில் இருப்பவருக்கு இடம் கன்பார்ம் ஆகிறது. ஆனால், தங்களுக்கு டிக்கெட் கன்பார்ம் ஆகவில்லை. இதனால் எஸ் கோச்சில் இருந்து வெளியேறுமாறு அடிக்கடி டிக்கட் பரிசோதகர் கூறுவதாக பயிற்சியாளர் பாலசந்தர் வீடியோ மூலம் புகார் கொடுத்துள்ளார்.

இதே நிலை நீடித்தால், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வீரர்களுக்கு தயக்கம் ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு இவர்கள் சென்னைக்கு வர உள்ளனர். அதுவரை ரெயிலில் தரையில் அமர்ந்து வர வேண்டிய நிலைக்கு விளையாட்டு வீரர்கள் தள்ளப்பட்டுள்ளது பற்றி என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x