Published : 15 Apr 2018 01:30 PM
Last Updated : 15 Apr 2018 01:30 PM

சிஎஸ்கே அணிக்கு மேலும் சிக்கல்: ரெய்னா , டூப்பிளசி, நிகிடி இல்லை - அஸ்வின் அணியை சமாளிக்குமா?

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக ரெய்னா இன்றைய போட்டியில் விளையாடாத நிலையில், டூப்பிளசியும், நிகிடியும் இன்று பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சண்டிகரில் இன்று இரவு 8மணிக்கு அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

கடந்த இரு போட்டிகளிலும் 2 வெற்றிகளுடன் சென்னைசூப்பர் கிங்ஸ் இருந்தபோதிலும் இரு போட்டிகளிலும் இரு முக்கிய வீரர்களை காயத்தால் இழந்துள்ளது. முதல் போட்டியில் கேதர் ஜாதவுக்கு ஏற்பட்ட காயத்தால், அவர் தொடரில்இருந்தே விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

அடுத்த போட்டியில் சுரேஷ் ரெய்னாவுக்கு ஏற்பட்ட காயத்தால், அடுத்த இரு போட்டிகளுக்கு விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது. சிஎஸ்கேயில் ரெய்னா இல்லாமல் களமிறங்குவது இது முதல்முறையாகும். இதனால், பேட்டிங்கில் சற்று வலு குறைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத காரணத்தால் டூப்பிளசிஸ் இன்றைய போட்டியிலும் விளையாடமாட்டார்.

மேலும் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் நிகிடியின் தந்தை இறந்துவிட்டதால், அவர் தென் ஆப்பிரிக்கா சென்றுவிட்டார். இதனால் அவரும் விளையாடமாட்டார்.

இதுபோன்ற அனுபவம் மிகுந்த வீரர்களை இழப்பது சிஎஸ்கே அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம், கடந்த இருபோட்டிகளிலும் வாய்ப்புப் பெறாத முரளி விஜய் இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கேதார் ஜாதவுக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவரும் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கலாம்.

தொடக்க வீரராக அம்பதி ராயுடு கடந்த இருபோட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவரை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை, அதனால், முரளிவிஜய் நடுவரிசையில் களமிறங்கவே அதிகமான வாய்ப்பு உள்ளது. முரளிவிஜய் இல்லாத நிலையில் டெல்லி பேட்ஸ்மேன் துருவ் ஷோரே களமிறக்கப்படலாம்.

இந்தச் சூழலில் களத்தில் தனது நீண்டகால நண்பர்களை எதிர் அணியாக சந்திக்கிறார் கிங்ஸ்லெவன் அணியின் கேப்டன் அஸ்வின். முதல்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்திய கிங்ஸ்லெவன் அணி, 2-வது போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்தது.

பஞ்சாப் அணியில் பேட்டிங் வரிசை மிகவும் வலுவற்ற நிலையில் இருக்கிறது. கடந்த இருபோட்டிகளிலும் சோபிக்காத யுவராஜ் சிங்குக்கு பதிலாக மனோஜ் திவாரி இந்த போட்டியில் வாய்ப்பு பெறலாம். அதேபோல, ஆரோன் பிஞ்ச்சுக்கு பதிலாக டேவிட் மில்லர் களமிறக்கப்படலாம்.

பந்துவீச்சைப் பொறுத்தவரை பஞ்சாப் அணி பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது. குறிப்பாக அக்சர் படேல் பந்துவீச்சில் ஷேன் வாட்சன் இதுவரை 5 முறை ஆட்டமிழந்துள்ளார்.

கேப்டன் தோனியும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக மோசமான ரெக்கார்டுகளை வைத்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஐபில் போட்டியில் இருந்து 349 பந்துகளைச் சந்தித்து 367 ரன்கள் மட்டுமோ தோனி சேர்த்துள்ளார். இதுசுழற்பந்துவீச்சுக்கு அவர் திணறுவதையே காட்டுகிறது.

அதிலும் ரவிந்திர ஜடேஜா நிலைமை படுமோசம். 161 பந்துகளில் 157 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆதலால், இன்றைய போட்டியில் சிஎஸ்கே அணிக்கு அஸ்வின், அக்சர் படேல் சுழற்பந்துவீச்சு முக்கியப் பங்காற்றும்.

அதேபோல மோகித் சர்மா நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக ப ந்துவீசக்கூடிய திறமை பெற்றவர். அதிலும் 16 முதல் 20-வது ஓவர்களில் அருமையாக பந்துவீசுவார். 2015ம் ஆண்டில் இருந்து 16முதல்20 ஓவர்களுக்கு இடையே பந்துவீசி 43 ஐபிஎல் போட்டியில் 25 விக்கெட்டுகளை மோகித்சர்மா வீழ்த்தியுள்ளார்.

அதேசமயம், அம்பதி ராயுடு தொடக்க வீரராக களமிறங்கினாலும், சிக்கல் இருக்கிறது. இதுவரை அம்பதி ராயுடுவை 4 முறை ஐபிஎல் போட்டியில் அஸ்வின் ஆட்டமிழக்கச்செய்துள்ளார். அவரின் பலவீனத்தை அறிந்தவர் என்பதால், அஸ்வினின் பந்துவீச்சும் முக்கியப்பங்காற்றும்.

ஆதலால், இன்றைய போட்டி தோனியா படையா அல்லது அஸ்வினா படையா என்ற ரீதியால்தான் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x