

வரும் ஜுன் 9-ம் தேதியன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை மேற்கொள்ள உள்ளன. இந்நிலையில், இந்தப் போட்டிக்கு ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
மைதானத்துக்குள் நுழைந்து ‘Lone Wolf’ தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என நசாவ் கவுண்டி காவல் ஆணையர் பேட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.
ஜூன் 2 முதல் 29-ம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறுகிறது. இதில் இடம் பெற்றுள்ள 20 அணிகளும் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, அயர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி உலக அளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், கடந்த 2012-13க்கு பிறகு இரு அணிகளும் நேரடி தொடர்களில் விளையாடுவது இல்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.
அதனால் இந்தியா - பாகிஸ்தான் நேரடியாக பலப்பரீட்சை செய்யும் போட்டி பரவலானவர்கள் மத்தியில் கவனம் பெறுவது வழக்கம். கடைசியாக கடந்த ஆண்டு அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இரு அணிகளும் விளையாடின. இதில் இந்தியா வெற்றி பெற்றது.
தீவிரவாத அச்சுறுத்தல்: இந்தச் சூழலில் அமெரிக்காவில் உலகக் கோப்பை போட்டியின் போது ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு அமைப்பான கொராசான் என்ற தீவிரவாத குழு ‘Lone Wolf’ தாக்குதல் நடத்த உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் நசாவ் கவுண்டி காவல் ஆணையர் பேட்ரிக் ரைடர் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் ஆளுநரும் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அதீத கவனம் செலுத்துமாறு நியூயார்க் காவல் துறையை கேட்டுக் கொண்டுள்ளார். இது போன்ற தீவிரவாத அமைப்புகளின் மிரட்டலை அவ்வப்போது அமெரிக்கா சந்திப்பது வழக்கம் என்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் மக்களின் பாதுகாப்பு சார்ந்த விவகாரங்களில் தங்களது கவனம் கூடுதலாகவே இருக்கும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதை சர்வதேச செய்தி நிறுவனங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.
நசாவ் கிரிக்கெட் மைதானம்: டி20 உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக நியூயார்க் நகரின் மன்ஹாட்டனுக்கு கிழக்கே நசாவ் கவுண்டியில் உள்ள ஐசனோவர் பூங்காவில் சுமார் 34 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை கண்டுகளிக்கும் வகையில் நசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. நியூயார்க் மட்டுமல்லாது டெக்சாஸ், புளோரிடா ஆகிய மாகாணங்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த மைதானத்தில் மட்டும் லீக் சுற்றின் 8 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் முக்கியமான ஆட்டமாக ஜூன் 9-ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆடுகளங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இங்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, கனடா, அயர்லாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகள் மோதும் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஜூன் 3-ம் தேதி இங்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.