Last Updated : 18 Apr, 2018 08:47 PM

 

Published : 18 Apr 2018 08:47 PM
Last Updated : 18 Apr 2018 08:47 PM

சச்சின் வாழ்க்கையையே மாற்றிய அவரது தந்தையின் முடிவு: புதிய புத்தகத்தில் ருசிகரத் தகவல்

சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் வாழ்க்கையையே மாற்றிய முடிவை அவரது தந்தையார் ரமேஷ் டெண்டுல்கர் எடுத்ததாக சச்சின் டெண்டுல்கர் பற்றிய புதிய புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் அதன் ஆசிரியர் தேவேந்திர பிரபுதேசாய்.

“வின்னிங் லைக் சச்சின்: திங்க் அண்ட் சக்ஸீட் லைக் டெண்டுல்கர்” (‘Winning like Sachin: Think & Succeed like Tendulkar’) என்ற புத்தகத்தில் சச்சின் தந்தை முக்கியத் தருணத்தில் எடுத்த முக்கிய முடிவினால் சச்சின் என்ற வீரர் நமக்கு கிடைத்ததாக பதிவு செய்துள்ளார்.

சச்சினின் மதிப்புக்குரிய பயிற்சியாளர் ராமாகந்த் அச்ரேக்கரிடம் சச்சினை அவரது சகோதரர் அஜித் டெண்டுல்கர் கொண்டு விடும்போது சச்சினின் வயது 11.

சச்சின் முதலில் பாந்த்ரா ஐ.இ.எஸ் என்ற ஆங்கில மீடியம் பள்ளியில் படித்து வந்தார். இந்தப் பள்ளியில் கிரிக்கெட் அணி கிடையாது. அப்போதுதான் அச்ரேக்கர் சச்சினை ஷார்தாஸ்ரம் வித்யா மந்திருக்கு மாற்றுமாறு பரிந்துரை செய்தார்.

சச்சினின் வீடோ பாந்த்ராவில் இருந்தது. தாதரில் இருப்பது ஷார்தாஸ்ரம் வித்யாமந்திர், இதற்கான போக்குவரத்து கடினமானது. நேரடி பேருந்து வசதி கிடையாது. காலை 7 மணிக்கு பள்ளியில் இருக்க வேண்டும் என்பதால் 2 பேருந்துகள் மாறினால்தான் வர முடியும்.

பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் அணியில் பொதுவாக 7வது படிக்கும் போதே சேர்த்து விடுவது அங்கு வழக்கம். ஆனால் சச்சின் 6ம் வகுப்பில் தொடங்க வேண்டும். பள்ளியின் தூரம் படிப்பைப் பாதிக்கும் என்ற சிந்தனையும் இருந்தது.

“பேராசிரியர் ரமேஷ் டெண்டுல்கர் வெகு எளிதாக, பாதுகாப்பான ஒரு முடிவை எடுத்து படிப்புதான் முக்கியம் என்று கூறியிருக்கலாம். விடுமுறை தினங்களில் கிரிக்கெட் ஆடிக்கொள்ளட்டும் என்று முடிவு எடுத்திருக்கலாம். அதனால் இவ்வளவு தூரம் சென்று கிரிக்கெட் ஆட வேண்டியத் தேவையில்லை எனவே பள்ளியை மாற்ற வேண்டாம் என்று அவர் முடிவெடுத்திருக்கலாம். ஆனால் தந்தையார் அப்படிச் செய்யவில்லை. அவரும், குடும்பத்தினரில் மற்றவர்களும் சச்சினிடம் முடிவை விட்டு விட்டனர். சச்சின் என்ன முடிவெடுத்தாலும் தங்களுக்குச் சம்மதம்தான் என்றும் சச்சினுக்கு ஆதரவளித்தனர்.

அப்போது அந்தக் குடும்பத்துக்குத் தெரியாது அப்போது பள்ளியை மாற்றும் முடிவு இந்திய கிரிக்கெட்டுக்கு விடிவெள்ளி பிறந்த நாள் என்று. சச்சின் மாற்றத்துக்கும் சவாலுக்கும் தயார் என்று அவர்கள் முடிவெடுத்தனர்” என்று அந்த நூலில் அவர் எழுதியுள்ளார்.

அதன் பிறகுதான் அச்ரேக்கர் பயிற்சியின் கீழ் இன்றைய ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சின் உருவானார்.

ரூபா பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ள இந்தப் புத்தகம் சச்சின் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றித் தருணங்களுக்கு பின்னால் உள்ள இம்மாதிரியான விஷயங்களை அலசுகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x