

அபாயகரமான ஆட்டத்தை ஆடியதற்காக இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங் காமன்வெல்த் ஹாக்கி அரையிறுதியிலிருந்து தடை செய்யப்பட்டார்.
நாளை இந்தியா அரையிறுதியில் நியூசீலாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடி 5-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கேப்டன் சர்தார் சிங் அபாயகரமான ஆட்டத்திற்காக நடுவரால் எச்சரிக்கப்பட்டார்.
நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் அவர் அபாயகரமாக விளையாடியதாக நடுவர் குழுவினால் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.
இந்திய அணி நிர்வாகம் இந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தற்போது தடை ஒரு போட்டியாகக் குறைக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடும்போது எடி ஆக்கண்டென் என்ற வீரரை அபாயகரமாக தடுத்தார் சர்தார், இதனால் ஆஸ்திரேலிய வீரருக்கு முகத்தில் அடிபட்டது. இதனையடுத்து சர்தார் சிங் எச்சரிக்கபப்ட்டார்.
இந்நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு எதிராகவும் அபாய விளையாட்டில் ஈடுபட்டதால் மஞ்சள் அட்டைக் காண்பிக்கப்பட்டார் சர்தார் சிங்.
இதனால் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் சர்தார் சிங் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.