சென்னை உள்ளிட்ட 10 மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கும் பிசிசிஐ

சென்னை உள்ளிட்ட 10 மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கும் பிசிசிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் போட்டிகள் நேற்று முன்தினம் சென்னையில் முடிவடைந்தன. இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்த தொடருக்காக சிறந்த ஆடுகளங்களை அமைத்த வடிவமைப்பாளர்கள் மற்றும் மைதான பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு ஊக்கத் தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ.

இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளார் ஜெய் ஷா தனது எக்ஸ் வலைதள பதிவில், “ஐபிஎல் டி 20 தொடரை வெற்றிகரமாக நடத்த உதவியது கொண்டாடப்படாத ஹீரோக்களான நம்பமுடியாத வகையில் பணிபுரிந்த மைதான ஊழியர்கள்தான். இவர்கள், கடினமான வானிலையிலும் அற்புதமான ஆடுகளங்களை வழங்க அயராது உழைத்தவர்கள்.

இதனால் எங்கள் பாராட்டின் அடையாளமாக, வழக்கமான ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் 10 மைதானங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். மேலும் கூடுதலாக போட்டிகள் நடத்தப்பட்ட 3 மைதானங்களுக்கு தலா ரூ .10 லட்சம் கிடைக்கும். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

மும்பை, டெல்லி, சென்னை, கொல்கத்தா, சண்டிகர், ஹைதராபாத், பெங்களூரு, லக்னோ, அகமதாபாத் மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய 10 இடங்களில் ஐபிஎல் போட்டிகள் வழக்கமாக நடத்தப்பட்டு வருகின்றன. இம்முறை இந்த இடங்களுடன் குவாஹாட்டி, விசாகப்பட்டினம் மற்றும் தரம்சாலாவிலும் போட்டிகள் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in