Published : 22 Apr 2018 07:56 AM
Last Updated : 22 Apr 2018 07:56 AM

சொல்லி அடித்த ‘ஜீனியஸ்’ ஏபி.டிவில்லியர்ஸ்: களவியூகம் மறந்த கம்பீர்; புன்னகைப் பூத்த விராட் கோலி

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று ஏ.பி.டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்த பெங்களூரு கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்களின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.

முதலில் பேட் செய்த டெல்லி டேர் டெவில்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயர் (52), இளம் ரிஷப் பந்த்(85) ஆகியோரது அதிரடியில் 15,3 ஓவர்களில் 105/4 என்ற நிலையிலிருந்து 174/5 என்ற ஓரளவுக்கு சவாலான இலக்கை எட்டியது. தொடர்ந்து ஆடிய ஆர்சிபி அணி தொடக்க பின்னடைவுக்குப் பிறகு டிவில்லியர்ஸின் ஜீனியஸில் 18 ஓவர்களில் 176/4 என்று வென்றது.

டிவில்லியர்ஸ் எனும் ஜீனியஸ்: வாயடைத்துப் போன டெல்லி டேர் டெவில்ஸ்

டி காக் (18), வோரா (2) விரைவில் வெளியேற 29/2 என்று தடுமாறிய பெங்களூரு அணி விராட் கோலி (30), டிவில்லியர்ஸ் கூட்டணியில் 11 ஓவர்களில் 92/2 என்று முன்னேற விராட் கோலி, ஹர்ஷல் படேல் புல்டாஸை சிக்சருக்குத் தூக்கி அடித்தார் பந்து பறந்து கொண்டிருந்த போது, பவர்புல் பிளிக் ஷாட் அது, அங்கு போல்ட் தலைக்கு மேல் பந்து சென்று கொண்டிருந்த்து. பின்னால் எம்பிப்பாய்ந்தார் போல்ட் வலது கையில் கேட்சைப் பிடித்து பவுண்டரி மேல் விழாமல் இருக்க ஏகப்பட்ட பிரயத்தனம் கடைசியில் கோலியை வெளியேற்றினார், பயங்கரமான கேட்ச். 92/3 என்ற நிலையில் கொஞ்சம் என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்ற நிலைதான். இந்தக் கேட்சைப் பற்றி இன்னும் சில காலங்களுக்கு அனைவரும் பேசவே செய்வார்கள்.

ஆனால் ஏ.பி.டிவில்லியர்ஸின் ஜீனியஸ் அங்குதான் ஏற்கெனவே தன் முகத்தைக் காட்டியிருந்தது. கிறிஸ் கெய்ல் ஆட்டம் ஒரு sublime terror (உன்மத்த பயங்கரம்) என்றால் டிவில்லியர்ஸ் ஆட்டம் என்பது உன்னதக் கலைஞனின் Sublime Aesthtetics (உன்னத அழகியல்). முன்பு ஒரு முறை இப்படித்தான் நம்பிக்கையெல்லாம் போய் விட்ட நிலையில் ஆர்சிபிக்கு ஒரு போட்டியை வென்று கொடுத்தார், அன்று டேல் ஸ்டெய்னை வெளுத்து வாங்கினார். அதாவது சூழ்நிலை தன்னை என்ன செய்து விட முடியும், நான் வைத்ததுதான் சட்டம் என்று அவர் தன் இஷ்டப்படி சுதந்திர ஜீவியாக ஆடினார். அதுவும் காயங்களிலிருந்து மீண்ட பிறகு புன்னகை தவழும் அவரது முகத்தில் எந்த விதமான ஆக்ரோஷ பாவனையும் காட்டாத ஒரு அமைதியான அதிரடி. ஆஃப் ஸ்டம்பில் ஒதுங்கிக் கொண்டு லெக் திசையிலும் அடிக்கிறார், அதே ஆஃப் திசையில் ஒதுங்கிக் கொண்டு அதே ஆஃப் திசையிலும் அடிக்கிறார், உள்ளே வரும் ஷார்ட் பிட்ச் பந்தை ‘என்ன?’ என்று கேட்டவாறே தன் மூக்கு வரைக்கும் வர அனுமதித்து பின் சாய்ந்து தேர்ட்மேனுக்கு மேல் தூக்குகிறார். அதாவது நான் பார்க்காத பவுலிங்கா, நான் பார்க்காத சூழ்நிலையா என்பதைப் போல் அவரது மட்டை பேசியது, ஆனால் அவர் முகத்தில் எதுவும் தெரியவில்லை. முகத்தில் எந்த ஒரு கோபாவேசமோ ஆக்ரோஷமோ இல்லை, அகந்தையும் இல்லை.

சர்பராஸ் கானுக்குப் பதில் வந்த மனன் வோரா, 2 ரன்களில் மேக்ஸ்வெலை 2வது ஓவரில் ஸ்வீப் ஷாட்டில் டாப் எட்ஜ் செய்து வெளியேற, குவிண்டன் டி காக் 18 ரன்களில் இல்லாத ரன்னுக்கு ஓடப்போய் கேப்டன் கோலிக்காக தன் விக்கெட்டைத் தியாகம் செய்து வெளியேறினார். 29/2.

இறங்கியவுடன் நிதானித்து பிறகு அடிப்பது என்ற கதையெல்லாம் டிவில்லியர்சிடம் கிடையாது. வந்து 3 பந்துகள் ஆகியிருக்குமா என்று தெரியவில்லை. இடது கை ஸ்பின்னர் ஷாபாஸ் நதீமை 2 பவுண்டரிகள் விளாசினார், பிறகு நதீமின் அடுத்த ஓவரில் திடீர் புதுவித ஷாட் உற்பத்தியில் 3 அதிரடி ஸ்வீப் ஷாட் பவுண்டரிகள் என்று கம்பீருக்கு களவியூகச் சிக்கல்களைத் தோற்றுவித்தார். ஷாட் எட்ஜெல்லாம் ஆகவில்லை அனைத்தும் நன்றாக மிடில் செய்யப்பட்ட ஷாட்கள். தன் இஷ்டத்துக்கு ஆடினார். ஷாட்களெல்லாம் அவருக்கே உரிய தனித்துவ ஷாட்கள், ஒருவரும் அதனை நகல் செய்ய முடியாது.

கோலி ஆட்டமிழந்த போது 54 பந்துகளில் 83 ரன்கள் தேவை என்ற ஒரு நெருக்கடி நிலைதான், ஆனால் ஹர்ஷல் படேல் வீச வந்தார், எனக்கு ஏன் கவலை என்று டிவில்லியர்ஸ் லாங் ஆனில் அவரை ஒரு சிக்சருக்குத் தூக்கினார். அடுத்த பந்துக்கு ஆஃப் திசையில் ஒதுங்கினார், படேல் பந்து அவரைத் துரத்தியது ஆனாலும் கவலையில்லை ஆஃப் திசையிலேயே தூக்கி அடித்தார் பவுண்டரியானது 24 பந்துகளில் அரைசதம் பூர்த்தி செய்தார். அதே ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் என்றும் பாராமல் ஒரு அரக்க ஸ்வீப் ஆடி ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ் அடித்தார். டெவாட்டியா வந்தார் நின்றபடியே ஒரே தூக்கு. லாங் ஆனில் சிக்ஸ். தன் சக தோழர் கிறிஸ் மோரிஸ் வந்தார் பந்து சின்னசாமி ஸ்டேடியத்தின் மேற்கூரையைத் தொட்டு வந்தது. அடுத்து ஒரு பவுண்டரி. 30 பந்துகளில் 35 என்று இலக்கு வழிக்கு வந்தது. கடைசியில் டிரெண்ட் போல்ட் ரவுண்ட் த விக்கெட்டில் பவுன்சர் வீச அதை வா வா என்று வரவேற்று தன் மூக்கு வரை வரவிட்டு பிறகு தேர்ட் மேன் தலைக்கு மேல் தூக்கினார். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, புதியது புனைந்தது போதும் என்று கடைசியில் ஒரு நேர்மறையான கவர் டிரைவ் பவுண்டரியில் வெற்றி தேடித்தந்தார்.

39 பந்துகளில் 90 ரன்கள். இதில் 10 பவுண்டரிகள் 5 சிக்சர்கள். மந்தீப் சிங் 17 நாட் அவுட். 176/4 என்று ஆர்சிபி வென்றது. ஆட்ட நாயகன் விருது வேறு யாருக்கு வழங்க முடியும்? டிவில்லியர்ஸ் அதனை தட்டிச் சென்றார்.

ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் மீட்ட டெல்லி:

முன்னதாக டாஸ் வென்ற விராட் கோலி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், தொடக்க ஓவர்களில் அசத்தி பிற்பாடு ரன்களைக் கசியவிடும் உமேஷ் யாதவ்வை இன்று முதல் 10 ஒவர்களிலேயே 4 ஓவர்கள் கோட்டாவை முடித்தார் விராட் கோலி. இது அருமையான யோசனை, அதன் படி உமேஷ் 27 ரன்களை மட்டுமேதான் விட்டுக் கொடுத்தார். அதோடு கவுதம் கம்பீரை ஷார்ட் பிட்ச் பந்தில் வீழ்த்தினார்.

இதோடு மட்டுமல்லாமல் ஜேசன் ராய் இதுவரை லெக்ஸ்பின்னுக்கு எவ்வளவு முறை ஆட்டமிழந்தார் என்பதை அறிந்தவராக கோலி சாஹலிடம் பந்தைக் கொடுத்தார். முதலில் இரண்டு பந்துகளைக் கடுமையாகத் திருப்பி பீட் செய்த சாஹல் அடுத்ததாக ஒரு டெம்ப்ளேட் நேர் பந்தை வீசினார் கட் ஆட முயன்ற ஜேசன் ராய் ஸ்டம்ப் தொந்தரவானது. சுமார் 20 பந்துகளுக்கு ரன் எதுவும் வராமல் பவர்ப்ளே முடிவில் 28 ரன்களுக்கு 2 விக்கெட் என்று இந்த சீசனின் குறைந்த பவர் ப்ளே ஸ்கோரை எடுத்தது டேர் டெவில்ஸ்.

உமேஷ் யாதவ்வையும் முடித்த கோலி வாஷிங்டன் சுந்தரின் 3 ஓவர்களையும் முடித்திருந்தார், இதனால் வோக்ஸ், சிராஜை நம்பி கடைசி ஓவர்களை கொடுக்க வேண்டியிருந்தது. அதில் ரிஷப் பந்த், ஐயர் புகுந்து 49 பந்துகளில் 75 ரன்களை விளாசினர். லாங் ஆன், லாங் ஆஃபில் தூக்கித்தூக்கி அடித்த ரிஷப் பந்து ரிவர்ஸ் ஸ்வீப் என்றேல்லாம் ஆடி 34 பந்துகளில் அரைசதம் கண்டார். அதன் பிறகு 2 பெரிய சிக்சர்களையும் பவுண்டரிகளையும் அடித்து 48 பந்துகளில் 6 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 85 ரன்கள் சேர்த்தார். ஐயர் 31 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் எடுத்து வாஷிங்டன் சுந்தரிடம் வீழ்ந்தார். 15.3 ஓவர்களில் மேக்ஸ்வெல் விக்கெட்டுடன் 105/4 என்று ஆன டெல்லி ரிஷப் பந்த்தின் ஆக்ரோஷத்தினால் 20 ஓவர்களில் 174/6 என்று ஆனது. சாஹல் 2 விக்கெட்டுகள்.

கடைசியில் டிவில்லியர்ஸின் உன்னத அழகியல் ஆட்டத்தை டெல்லி அணியினருமே பார்க்க நேரிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x