Published : 19 Apr 2018 09:24 AM
Last Updated : 19 Apr 2018 09:24 AM

ரூ.12.5 கோடி ஸ்டோக்ஸ், ரூ.11.5 கோடி உனாட்கட்...ஆடியதோ சொத்தை கிரிக்கெட்: ராஜஸ்தானை ஊதியது கொல்கத்தா

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசம் சொத்தை கிரிக்கெட்டுக்கும் குறிக்கோளுடைய கிரிக்கெட்டுக்கும் இடையே உள்ள வித்தியாசமாகும். அப்படி ஆடித்தான் தினேஷ் கார்த்திக்கின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதலில் குல்தீப் யாதவ், சாவ்லா, நிதிஷ் ராணா ஆகியோரைக் கொண்டு அதிரடி தொடக்கம் கண்ட ராஜஸ்தானை 160 ரன்களுக்கு மட்டுப்படுத்தியது, பிறகு சுனில் நரைன் (35), ராபின் உத்தப்பா (48) நிதிஷ் ராணா (35), தினேஷ் கார்த்திக் (42) என்று ஆக்ரோஷமாக ஆடி தொழில் நேர்த்தியுடன் 18.5 ஓவர்களில் 163/3 என்று அபார வெற்றி பெற்றது.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் ஏலத்தில் ரூ.12.5 கோடி கொடுத்து பென் ஸ்டோக்ஸையும், இந்திய வீர்ர்களில் ஜெய்தேவ் உனாட்கட்டை ரூ.11.5 கோடிக்கும் ஏலம் எடுத்தது. ஆனால் உனாட்கட் ரூ.11.5 கோடிக்கு முன்பு நன்றாக வீசியவர் அதன் பிறகு பவுலிங்கை மறந்துள்ளார். நேற்று 3 ஓவர்களில் 34 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதில் 4 டாட் பால்கள், 3 பவுண்டரிகள் 2 சிக்சர்கள். பென் ஸ்டோக்ஸ் 3 ஓவர்கள் 25 ரன்கள், பந்து வீச்சில் எந்த ஒரு தாக்கமும் இல்லை, ஒரு பீட்டன் கூட செய்ய முடியவில்லை. தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட அவரது பவுலிங் மேப்பின் படி இதுவரை ஆடிய இந்த ஐபிஎல் போட்டிகளில் 3-4 பந்துகளையே ஸ்டம்பில் வீசியுள்ளார் உனாட்கட்.

ராஜஸ்தான் பேட்ஸ்மென் டி ஆர்க்கி ஷார்ட் ஒரு வடிகட்டிய ஆஸ்திரேலிய வீரர் என்பது தெளிவானது, பிக் பாஷ் லீகில் அங்கு கடினமான பவுன்ஸ் பிட்ச்களில் வெளுத்துக் கட்டி 550 ரன்களுக்கும் மேல் எடுத்தவர், அதிகபட்சமாக 122 ரன்களை எடுத்தவர். ஆனால் இங்கு ஐபிஎல் மந்த பிட்ச்களில் அவர் போராடுகிறார். முதல் இரண்டு போட்டிகளில் ரன் அவுட். பெங்களூரு அணிக்கு எதிராக சஞ்சு சாம்சன் சிக்சர் மழை பொழிய இவரோ 17 பந்துகளில் 11 ரன்களுக்குத் திணறினார்.

நேற்று கொல்கத்தாவுக்கு எதிராக எப்படியாவது நின்று விட வேண்டும் என்று போராடினர். 43 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 44 ரன்கள் எடுத்து நிதிஷ் ராணா பந்தில் பவுல்டு ஆனார். ஸ்பின்னர்களிடம் திணறினார் ஷார்ட்.

மாறாக சுனில் நரைனை வெளுத்துக் கட்டினார் ரஹானே, ஒரே ஓவரில் அவரை 4 பவுண்டரிகள் விளாச இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் சுனில் நரைன் 4 ஓவர்களில் 48 என்று அதிகபட்ச ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ரஹானே கிரிக் இன்போவில் வந்த கட்டுரையை படித்திருப்பார் போலும் ‘என்னைப் பற்றியா குறைகூறுகிறீர்கள்?’ என்று 19 பந்துகளில் 5பவுண்டரிகள் 1 சிக்சர் என்று 36 ரன்களுக்கு வெளுத்துக் கட்டினார். ஆனால் ராணாதான் பிரேக்த்ரூ கொடுத்தார், ராணா பந்தை மேலேறி வந்து ஆட முயன்று தோற்ற ரஹானேயின் மட்டையில் மிக லேசாகப் பட்டு லெக் திசையில் பந்து விழ தினேஷ் கார்த்திக் மிக அற்புதமாக இடது புறம் நகர்ந்து பந்தை எடுத்து ஸ்டம்பில் அடிக்க ரஹானே ஆட்டமிழந்தார்.

இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவி தொடக்கத்தில் ஷார்ட், ரஹானேயிடம் வாங்கினாலும் அபாய வீரர் சஞ்சு சாம்சனை வேகமான ஷார்ட் பிட்ச் பந்தினால் 7 ரன்களில் பெவிலியன் அனுப்பினார். 13வது ஓவரில் 98/2 என்ற நிலையில் ராணாவிடம் ஷார்ட் ஆட்டமிழக்க திரிபாதி (15), பென் ஸ்டோக்ஸ் (14) ஆகியோரை குல்தீப், சாவ்லா வீழ்த்தினர். கடைசியில் ஜோஸ் பட்லர் 24 ரன்களை ஆட்டமிழக்காமல் எடுக்க 160/8 என்று ஓரளவுக்கு முடிந்தது. சாவ்லா 18 ரன்களையும் குல்தீப் 23 ரன்களையும் கொடுத்து தலா 1 விக்கெட்டைக் கைப்பற்ற நிதிஷ் ராணா, டாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

கொல்கத்தா ஆக்ரோஷ பேட்டிங்:

கிறிஸ் லின் ரன் எதுவும் எடுக்காமல் கவுதம் பந்தில் பவுல்டு ஆகி 2 பந்துகளிள் வெளியேற நரைன், உத்தப்பா எதிர்த்தாக்குதலில் ராஜஸ்தான் சொத்தைப் பந்து வீச்சு நிலைகுலைந்தது, அடிக்க அடிக்க ஏதாவது செய்ய வேண்டாமா ரஹானே, ஆனால் ஒன்றுமே முயற்சிகளே எடுக்கவில்லை, தீவிரமே இல்லை.

நரைனும் உத்தப்பாவும் 49 பந்துகளில் 69 ரன்களைச் சேர்த்தனர். பிறகு ராணா தனது அருமையான அணுகுமுறையில் 27 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார் அதுவும் மிட் ஆஃப் மேல் அடித்த சிக்ஸ் அபாரமானது. தினேஷ் கார்த்திக் வழக்கம் போல் தன் பாணியில் ஆடினார், உனாட்கட் பந்தை ஸ்கொயர் லெக் மேல் அடித்த சிக்ஸ் அலட்சியம். 23 பந்துகளில் 42 நாட் அவுட்.

சுனில் நரைன் 25 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள், ராபின் உத்தப்பா உண்மையில் ஒரு அபாய வீரர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்து 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 48 ரன்கள் எடுக்க ராஜஸ்தானை நொறுக்கியது கொல்கத்தா, ஐபிஎல் அட்டவணையில் முதலிடம் பிடித்தது. ஆட்ட நாயகன் நிதிஷ் ராணா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆட்டத்தில் எந்த ஒரு தீவிரமும் இல்லை, ஏனோதானோவென்று ஒரு ஆட்டத்தை ஆடி தோற்றார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x