

எந்த வித சவாலும் இல்லாமல் சரணடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் மீது இங்கிலாந்து ஊடகங்களும் முன்னாள் வீரர்கள் சிலரும் விமர்சன மழை பொழிந்துள்ளனர்.
முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் கூறும் போது, "இந்தியா ஒரு பெரிய தர்மசங்கடம், ஸ்பின் பந்து வீச்சிற்கு எதிராக விளையாடிப் பழகிய வீரர்கள், மொயீன் அலி ஏதோ கையெறி குண்டுகளை வீசுவது போல் மடிந்தனர். நெருக்கடியில் எதிர்ப்பின்றி சரணடைகின்றனர். களத்திற்கு வெளியே நடக்கும் சம்பவங்களில் அதிக கவனம் செலுத்தியதால் களத்தில் கோட்டை விட்டுள்ளனர்.
ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு தண்டனை வாங்கித் தருவதில் கவனம் செலுத்தி கிரிக்கெட்டிலிருந்து கண்களை எடுத்து விட்டனர். இங்கிலாந்து ஒன்றும் மேஜிக் பந்துகளை வீசிவிடவில்லை. இது மோசமான பேட்டிங். இந்திய வீரர்களிடத்தில் சூழ்நிலையை எதிர்த்துப் போராடும் மனநிலையோ, குணாம்சமோ அறவே இல்லை” என்று சாடியுள்ளார்.
இயன் போத்தம்: இந்த டெஸ்ட் போட்டியின் ஒரு கட்டத்தில் கூட இந்தியா இங்கிலாந்தைக் கடந்து செல்லவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேர ஆட்டத்திலும், அனைத்து விதங்களிலும் இங்கிலாந்து இந்தியாவை விட வலுவாகத் திகழந்தது. இந்தத் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியிலும் பிடியை விட்டுவிடக்கூடாது.
டெய்லி மெயில்: முதுகெலும்பற்ற, பரிதாபமான தோல்வி. லார்ட்ஸில் வரலாற்று வெற்றிக்குப் பிறகு தோனிக்கு அதிக ஆர்வம் இல்லை போலும்.
தி கார்டியன்: ஸ்டூவர்ட் பிராடை இழந்தும் இங்கிலாந்திடம் இந்தியா சரண் அடைந்துள்ளது. இந்திய அணியின் உணர்வு முறிந்து விட்டது.
இவ்வாறு விமர்சனங்கள் தொடுக்கப்பட்டுள்ளன.