Published : 25 May 2024 05:33 PM
Last Updated : 25 May 2024 05:33 PM

‘சிக்கன’ சிங்கம் நடராஜன் திறமையைப் பறைசாற்றும் தரவுகள் - வாய்ப்புத் தர மறுப்பது ஏன்?

தமிழகத்தைச் சேர்ந்த இடது கை ஸ்விங் பவுலர் டி.நடராஜன், முன்பு ‘யார்க்கர்’ நட்டு என்று செல்லமாக அழைக்கப்பட்டார். ஆனால் இப்போதெல்லாம் அவரது பந்துவீச்சில் புதுரக உத்திகள் பல சேர்க்கப்பட்டுள்ளன. பேட்ஸ்மென்களுக்கு குறுகிய பவுண்டரிகள், லேசான - ஆனால் பவர் பேட்கள் என்ற சாதகங்கள் உள்ள பவுலர்களுக்கு எதிரான ஒரு வியாபாரச் சூழலில் டி.நடராஜன் தன் பந்து வீச்சில் புதிய வகைகளை சேர்த்து, அதன் மூலம் பேட்டர்களைக் கட்டுப்படுத்தி தனக்கென ஓர் இடத்தைப் பேசும்படிச் செய்துள்ளார்.

இப்போது வரை ஐபிஎல் தொடர்களில் 6 சீசன்களில் நட்டு 60 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். அவரின் சராசரி 28.96. இத்தகைய மட்டையடி பிட்ச்களில் அதுவும் ஹைதராபாத் விளாசும் அதிகபட்ச ஸ்கோர் போட்டிகளில் எதிரணிகள் விளாசும் போட்டிகளிலும் சேர்ந்து நடராஜனின் சிக்கன விகிதம் ஓவருக்கு 8.83 என்பது சாதாரணமல்ல. தனிப்பட்ட முறையில் ஒருமுறை 19 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

2017-ல் கிங்ஸ் லெவன் பஞ்சாபில் ஐபிஎல் கரியரைத் தொடங்கினார் நடராஜன். 2 விக்கெட்டுகளையே கைப்பற்றினார். அதன் பிறகு 2020 சீசனில் 16 விக்கெட்டுகள். 2021 சீசனில் காயம் காரணமாக 2 போட்டிகளில் 2 விக்கெட். 2022 ஐபிஎல் சீசனில் பெரிய அளவுக்கு மீண்டு வந்த நடராஜன் 11 போட்டிகளில் 18 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதில் 10 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் பெஸ்ட் பவுலிங் ஃபிகர்.

2023-சீசனில் 12 போட்டிகளில் 10 விக்கெட். இந்த சீசனில் 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை எடுத்து சீசனின் டாப் பவுலர்களில் 4-ம் இடத்தில் இருக்கிறார். மேலும் சிக்கன விகிதத்தில் வேகப்பந்து வீச்சாளர்களி பும்ரா ஓவருக்கு 6.48 என்று டாப்பில் இருக்க, அவருக்கு அடுத்த இடத்தில் டி.நடராஜன் இருக்கிறார். பர்ப்பிள் கேப் டாப்பில் இருக்கும் ஹர்ஷல் படேல் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியவரின் சிக்கன விகிதம் 9.73. நடராஜன் இவரை விடவும் குறைவாக 8.83.

உலகக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் தேர்வான ஆவேஷ் கான் 16 போட்டிகளில் 19 விக்கெட். நடராஜன் 13 போட்டிகளில் 19 விக்கெட். ஆவேஷ் கானின் சிக்கன விகிதம் 9.59. ஆவேஷ் கான் ரிசர்வ் அணியிலாவது இடம்பிடித்தார். நடராஜன் பெயர் ‘பரிசீலிக்கப்பட்டது’ என்ற புனைவோடு சரி.

அடுத்து மிக முக்கியமாக இந்திய அணியிலேயே இடம்பிடித்த இடது கை ஸ்விங் பவுலர் அர்ஷ்தீப் சிங் நடப்பு ஐபிஎல் பவுலர்கள் பட்டியலில் 6-ம் இடத்தில் 14 போட்டிகளில் 19 விக்கெட்டுகளுடன் உள்ளார். இவரது சிக்கன விகிதம் 10.03. நடராஜனுடன் ஒப்பிடும்போது அதிகம். ஆனால், இவர் உலகக் கோப்பை டி20 அணியில் உள்ளே. நடராஜன் வெளியே.

டி20 உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட இன்னொரு பவுலர் முகமது சிராஜ். 14 போட்டிகளில் 15 விக்கெட்டுகள், சிக்கன விகிதம் 9.18. இதுவும் நடராஜனை ஒப்பிடுகையில் அதிகம். ‘இவருக்கு கட் அவுட், நடராஜனுக்கு கெட் அவுட்டா?’ என்று மறைந்த நடிகர் விவேக் காமெடி பாணியில் நாமும் கேட்க வேண்டியதுதான்?

இதைவிட ‘ஆல்ரவுண்டர்’ ஹர்திக் பாண்டியா 11 விக்கெட்டுகள் சிக்கன விகிதம் 10.75 ரன்கள். பேட்டிங்கிலும் 216 ரன்கள்தான், இவரை எப்படி தேர்வு செய்தார்கள் என்பது இந்திய அணித் தேர்வின் ‘விளங்க முடியாக் கவிதைதான்’ (ஆளவந்தான் படப் பாடலை நினைவில் கொள்ளவும்).

தேர்வு செய்த வீரர்களை விட தேர்வு செய்யப்படாத அல்லது இந்திய அணித் தேர்வாளர்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சிறப்பாக ஆடியுள்ளார்கள். பேட்டிங்கில் தினேஷ் கார்த்திக், பவுலிங்கில் டி.நடராஜன் இருவரும் டி20 உலகக்கோப்பையில் இல்லை என்பது தமிழக வீரர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறதோ என்ற தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கும் ஒரு நியாயம் வழங்கி விடுகிறது.

இந்தப் புள்ளி விவரங்கள் ஒருபுறமிருக்க, நடராஜன் பந்து வீச்சு இப்போது மிகுந்த முதிர்ச்சியுடன் வீசப்படுகிறது, கடினமான லெந்த்களைக் கண்டுப்பிடித்துக் கொண்டுள்ளார். யார்க்கரிலேயே ஸ்லோ யார்க்கரையும் சேர்த்துள்ளார். அனைத்துக்கும் மேலாக பேக் ஆஃப் லெந்த் ஸ்லோ ஷார்ட் பிட்ச் பந்துகளை கிட்டத்தட்ட பேட்டர்களின் தோள்பட்டை உயரத்துக்கு குத்தி எழுப்புகிறார். இதை ஆடவே முடிவதில்லை என்பதைத்தான் இந்த ஐபிஎல் சீசனில் நாம் பார்த்தோம். நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 3 ஓவர் 13 ரன்கள் 1 விக்கெட். மிகவும் டைட்டாக வீசினார். அடிக்க முடியவில்லை.

அன்று டுபிளெசிசிஸுக்கு ஒரு போட்டியில் இத்தகைய உயரமான பேக் ஆஃப் லெந்த் பிட்ச் ஸ்லோ பவுன்சரை வீசி வீழ்த்தினார். அதிலிருந்தே அவரது இத்தகைய பந்துகளைத் தொட முடிவதில்லை. பாட் கமின்ஸ் மிகத்திறமையாக அவரைப் பயன்படுத்துகிறார். பாட் கமின்ஸைப் பார்த்து இவரும் உத்வேகம் பெறுகிறார். புதுவித பந்துவீச்சுகளை தன் பவுலிங் ஆயுதப் பாசறையில் சேர்த்துக் கொள்கிறார்.

இவரையல்லவா முதலிடத்தில் டி20 உலகக் கோப்பை அணியில் அர்ஷ்தீப் சிங்கிற்குப் பதிலாக சேர்த்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் ஆவேஷ் கானுக்குப் பதிலாக ரிசர்வ் வீரராகவாவது சேர்த்திருந்தால் நடராஜனின் ஐபிஎல் தொடரின் சீரான முயற்சிகள் மதிக்கப்பட்டது என்று கூற இடமிருந்திருக்கும்.

ஏன் இப்படி என்று கேட்டால் ஜெய் ஷா, ‘ஐபிஎல் ஆட்டங்களை வைத்து தேர்வு செய்யவில்லை’ என்கிறார். ஏன் தேர்வு செய்யக் கூடாது? அப்போது எப்படி ஷிவம் துபே அணியில் இருக்கிறார்? தினேஷ் கார்த்திக் இல்லை? ரிங்கு சிங் இல்லை? ஹர்திக் பாண்டியாவை சேர்த்ததற்காக ஐபிஎல்-லிருந்து தேர்வு இல்லை என்று சப்பைக் கட்டுவது பல கேள்விகளை எழுப்புகிறது. இதனைக் கூடவா ஜெய் ஷாவினால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஐபிஎல் பூராவும் பேட்டிங் பிட்சாகப் போட்டு விட்டு, பேட்டர்களை ஐபிஎல் பெர்ஃபார்மென்ஸ் வைத்து தேர்வு செய்ய முடியாது என்ற சப்பைக் கட்டு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தாலும், ஐபிஎல் 2024-ன் பேட்டிங் சாதக பிட்ச்களில் தன் சொந்த திறமையை வளர்த்துக் கொண்டு, சிக்கனமாக வீசும் நடராஜனை ஏன் இந்த வெட்டிக் கொள்கைக்காக பலிகடாவாக்க வேண்டும்.

உண்மையில், இந்த ஆண்டின் அதிரடி ஐபிஎல் பேட்டிங் தொடரில் சிறப்பாக வீசிய பவுலரையல்லவா அணியில் எடுக்க வேண்டும். ஆகவே, இவர்களுக்கு அணித் தேர்வில் சார்பு இருக்கிறது அல்லது புற அழுத்தங்கள் இருக்கிறது என்பதே நம் சந்தேகமாக உள்ளது. உண்மையான திறமை அணித் தேர்வில் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்பதே நடராஜனை ஒழித்ததில் வருந்தத்தக்க உண்மை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x