Published : 24 Apr 2018 07:15 PM
Last Updated : 24 Apr 2018 07:15 PM

சென்னை அணி சார்பாக 13-7 வெற்றி விகிதம்: ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே ஆதிக்கம் தொடருமா? புதனன்று மோதல்

ஐபிஎல் கிரிக்கெட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் மோதல் நாளை (புதன், ஏப்ரல் 25) அன்று சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. அதாவது இதுவரை ஆர்சிபிக்கு எதிராக 13-7 என்று வெற்றி விகிதம் வைத்துள்ள தோனி தலைமை சிஎஸ்கே அணியை கோலி தலைமை ஆர்சிபி வென்று அடக்குமா என்ற கேள்விக்கான விடை நாளை தெரியும்.

கடந்த 2 ஐபிஎல் தொடர்களில் சூதாட்டத் தடை காரணமாக சிஎஸ்கே அணிக்கும் ஆர்சிபி அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறாமல் இருந்துள்ளதால் மீண்டும் இரு அணிகளுக்குமிடையிலான நாளைய போட்டி ரசிகர்களிடையே கடும் எதிர்பார்ப்புகளைக் கிளப்பியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு மீண்டும் வந்த சென்னை அணி தன் தாயகத்தை காவிரிப் போராட்டங்களுக்கு இழந்தாலும் 5 போட்டிகளில் 4-ல் வென்றுள்ளது, ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டி நீங்கலாக நெருக்கமாக வந்து திரில் வெற்றி பெற்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். மாறாக ஆர்சிபி 5-ல் 2-ல்தான் வென்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான வெற்றி விகிதத்தில் 13-7 என்று சிஎஸ்கே ஆதிக்கம் உள்ளது, சின்னசாமி ஸ்டேடியத்தில் இரு அணிகளும் மோதிய முந்தைய 7 போட்டிகளிலும் சென்னை-ஆர்சிபி வெற்றி விகிதம் 3-3 என்று சமநிலையில் உள்ளது, எனவே வெற்றி பெறும் அணி என்று ஒன்றைக் கூற வேண்டுமானால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

ஏ.பி.டிவில்லியர்ஸ் சென்னைக்கு எதிராக பெரிய அளவில் ஸ்கோர் செய்ததில்லை, இது சென்னைக்கு அனுகூலமல்ல, மாறாக சென்னை அணி பயப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். ஏற்கெனவே 360 டிகிரி வீரர் டிவில்லியர்ஸ் அன்று 39 பந்துகளில் 90 ரன்கள் அடித்து மைதானத்தில் பந்துகள் எங்கெல்லாம் செல்ல முடியாதோ அங்கெல்லாம் அடித்து அசத்தியுள்ளார்.

கோலி-டிவில்லியர்ஸ் கூட்டணி ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 2,361 ரன்கள் எடுத்துள்ளது, கிறிஸ் கெய்ல்-கோலி கூட்டணிதான் அதிகம், அதாவது 2,787 ரன்கள் கூட்டணி அமைத்துள்ளனர். ஷிகர் தவண்-வார்னர் கூட்டணி 2,357 ரன்கள் எடுத்துள்ளனர்.

சென்னை அணியைப் பொறுத்தவரையில் வாட்சன், மற்றும் எங்கு இறக்கினாலும் புரட்டி எடுக்கும் அம்பாத்தி ராயுடு, தேவையான அதிரடியைக் காட்டும் தோனி ஆகியோரும் ரெய்னாவின் அனுபவமும் எந்த எதிரணிக்கும் அச்சுறுத்தல்தான். பிராவோ எப்போதும் ஒரு ஆல்ரவுண்ட் அச்சுறுத்தல். தீபக் சாஹரின் தொடக்க ஸ்விங் பவுலிங் கோலியை காலி செய்தால் பெங்களூரு கடும் நெருக்கடிக்குள்ளாகும் என்பது தெளிவு.

ஆர்சிபி அணியில் சாஹல், வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சு எப்படி அமையும் என்பதைப் பொறுத்து வெற்றி தோல்வி தீர்மானமாகும். ஸ்பின் பந்து வீச்சில் சிஎஸ்கே நடப்பு ஐபிஎல் தொடரில் தடுமாறி வருகிறது, இதுவரை ஸ்பின்னர்களிடம் 10 விக்கெட்டுகளைக் கொடுத்துள்ளது சிஎஸ்கே.

கிறிஸ் வோக்ஸ், உமேஷ் யாதவ் ஆகியோரின் தொடக்க ஸ்பெல்கள் மேலும் தீவிரமாக சிஎஸ்கேயால் பரிசீலிக்கப்பட வேண்டியுள்ளது, ஏனெனில் உமேஷ் யாதவ்வின் 4 ஓவர்களை முதலிலேயே முடிக்கும் உத்தியை கோலி நிச்சயம் கடைபிடித்தால் சிஎஸ்கே அவரிடம் 2-3 விக்கெட்டுகளை தொடக்கத்தில் கொடுக்காமல் ஆடுவது அவசியம், குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்து பலவீனமுடைய ரெய்னாவை தட்டிப்போட்டு எடுத்து விடும் வாய்ப்பு அதிகம்.

சென்னை அணியில் அதிக மாற்றம் இருக்காது என்றே கூற வேண்டும். நாளை இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.

(பிடிஐ தகவல்களுடன்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x