

பெங்களூரு: “நான் தன்னம்பிக்கை இல்லாமல் போராடியபோது எனக்கு உதவியவர் தினேஷ் கார்த்திக்" என்று விராட் கோலி நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார்.
தினேஷ் கார்த்திக் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வுபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் ஓய்வு குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் ஆர்சிபி நிர்வாகம் இரண்டு வீடியோக்களை வெளியிட்டு ஓய்வை உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்றில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கின்றனர். மற்றொன்றில், ஆர்சிபி வீரர்கள் தினேஷ் கார்த்திக் குறித்து புகழ்ந்து பேசி வாழ்த்து தெரிவிக்கின்றனர். இதில் குறிப்பாக விராட் கோலி பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
தினேஷ் கார்த்திக் குறித்து விராட் கோலி பேசுகையில், “தென் ஆப்பிரிக்காவில் நடந்த 2009 சாம்பியன்ஸ் டிராபி என்று நினைக்கிறேன். அந்தத் தொடரில் நான் முதன்முதலில் தினேஷ் கார்த்திக்கை சந்தித்தேன். முதல் சந்திப்பில் அவர் மிகவும் ஹைபர் ஆக்டிவ் என்றே எனக்கு தோன்றியது. காரணம், அவர் ஒரு இடத்தில் இருக்காமல், அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருப்பது என சுறுசுறுப்பாக இருந்தார்.
அவரை குழப்பமான மனிதர் என நினைத்தேன். உண்மையாகவே, அதுதான் தினேஷ் கார்த்திக்கை பற்றிய எனது முதல் அபிப்ராயம். ஆனால், அற்புதமான பேட்ஸ்மேன். அவரின் சிறப்பான திறமை இன்னமும் அப்படியே உள்ளது. தற்போது அமைதியாகியுள்ளார். எனினும் தினேஷ் புத்திசாலி. களத்துக்கு வெளியே டிகே உடன் சில சுவாரஸ்யமான உரையாடல்களை நடத்தியுள்ளேன். கிரிக்கெட் மட்டுமல்ல, அவற்றை தாண்டி பல விஷயங்களை குறித்து அபார அறிவு மிக்கவர் அவர்.
அவருடனான உரையாடல்களை ஒவ்வொன்றையும் நான் மிகவும் ரசித்திருக்கிறேன். 2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் எனக்கு சிறப்பாக அமையவில்லை. தன்னம்பிக்கை இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தேன். மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த அந்த நேரத்தில், என்னை உட்கார வைத்து பேசிய தினேஷ், ஒவ்வொரு விஷயங்களையும் அவர் எப்படி அணுகுகிறார் என்பதை நேர்மையாக எனக்கு விளக்கினார்.
இப்படி தான் விரும்பும் விஷயங்களைப் பற்றி யாரிடமும் சென்று பேசுவதற்கான அவரது நேர்மை மற்றும் தைரியமும் தான் தினேஷ் கார்த்திக்கிடம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவே அவரை நேசிக்க வைத்தது. அதனால்தான் நாங்கள் நன்றாகப் பழகுகிறோம்” என்று நெகிழ்ச்சியாக கூறினார். தினேஷ் கார்த்திக் குறித்த விராட் கோலியின் இந்த புகழாரம் தற்போது வைரலாகி வருகிறது.