Published : 20 Apr 2018 05:30 PM
Last Updated : 20 Apr 2018 05:30 PM

சச்சின் பாராட்டு கோலிக்கு பெற்றுக்கொடுத்த ‘புதிய மகுடம்’

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை லிட்டில் மாஸ்டர் சச்சின் பாராட்டி எழுதியதன் விளைவாக டைம் பத்திரிக்கையில் 100 பிரபலமானவர்கள் பட்டியலில் கோலி இடம் பெற்றார்.

அணியின் கேப்டனாக இருந்து டைம் பத்திரிகையில் இடம் பிடித்த 3-வது வீரர் விராட் கோலி ஆவார். இதற்கு முன் இலங்கை வீரர் குமார் சங்கக்கரா, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

2018-ம் ஆண்டுக்கான 100 பிரபலமனவார்கள் பட்டியலை டைம் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டில் டி20,ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 விதமான போட்டிகளிலும் விராட் கோலி விளையாடி 2,818 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 11 சதங்கள் அடங்கும்.

மேலும், சாம்பியன்ஸ் கோப்பை, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றி, வங்கதேசத்தில் நடந்த முத்தரப்பு தொடர் வெற்றி, ஆஸ்திரேலியா, இலங்கையுடன் இருஒருநாள் தொடர் வெற்றி ஆகியவை விராட் கோலியின் தலைமையில் கிடைத்துள்ளது.

விராட் கோலியின் திறமை, கேப்டன்ஷிப் குறித்து புகழ்ந்து லிட்டில் மாஸ்டர் டைம் பத்திரிகைக்கு புகழ்ந்து எழுதியுள்ளார். அதில் நான் கடந்த 2008ம் ஆண்டு 19வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடியதைப் பார்த்து இருக்கிறேன். இந்த அணியில் இருக்கும் வீரர்கள் நிச்சயம் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என்று எண்ணினேன்.

இந்தியாவை ஒரு துடிப்புள்ள, இளம் வீரர் வழிநடத்திச் செல்வதை முதல்முறையாக நான் பார்க்கிறேன். கிரிக்கெட்டின் சாம்பியனாக விராட் கோலி இன்று விளங்குகிறார். 29வயதான விராட் கோலி களத்தில் ரன் வேட்டையாடும் வீரர், நிலையாக பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடியவர். இவரின் பேட்டிங் கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த முத்திரையாக இருக்கும்.

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரானத் தொடரில் கடும் விமர்சனங்களை விராட் கோலி சந்தித்தபோதிலும், அவர் இலட்சியத்துடன் விளையாடியவர். அவரின் பேட்டிங் தொழில்நுட்பங்களை முன்னேற்றி, உடல்தகுதியை நிரூபித்துள்ளார் என்று சச்சின் புகழ்ந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் புகழாரத்துக்கு விராட் கோலி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், சச்சின் சகோதரருக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். என்னைப் பற்றி பெருமிதமாக எழுதியதற்கும், ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக் கூறியிருக்கிறீர்கள். டைம் பத்திரிகையின் 100 பேர் கொண்ட பட்டியலில் உங்கள் வார்த்தைகளால் நான் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x