சிஎஸ்கே வெற்றிகளில் பிராவோ மும்முனைப் பங்களிப்பு அதிகம்: பவுலிங் ஆலோசகர் சிம்மன்ஸ்

சிஎஸ்கே வெற்றிகளில் பிராவோ மும்முனைப் பங்களிப்பு அதிகம்: பவுலிங் ஆலோசகர் சிம்மன்ஸ்
Updated on
1 min read

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பவுலர்களுக்கு டிவைன் பிராவோ எப்படி ஒரு அனுபவமிக்க அறிவுரையாளராக செயல்படுகிறார் என்று அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

பிராவோ முதல் ஐபிஎல் போட்டியில் பேட்டிங்கில் வெளுத்து வாங்கியதில் நம்பமுடியாத இடத்திலிருந்து சென்னை வெற்றி பெற்றது, அந்த உத்வேகத்திலும் தோனியின் அபாரமான பேட்டிங், கேப்டன்சி, விக்கெட் கீப்பிங் என்ற ஆல்ரவுண்ட் ஆட்டத்தினாலும், ராயுடுவின் அயராத பங்களிப்பினாலும் வெற்றிகளைப் பெற்றுவருகிறது.

முதல் போட்டியில் பேட்டிங்கில் பிராவோ பங்களிப்பு செய்தது பெரிய அளவில் பேசப்பட்டாலும் அன்று பந்து வீச்சில் 4 ஓவர்களில் 25 ரன்களையே கொடுத்து கட்டுப்படுத்தியதும் வெற்றிக்கு ஒரு அங்கமாக அமைந்தது.

ஆனால் பிராவோ எப்படி இளம் சிஎஸ்கே வீச்சாளர்களுக்கு ஒரு அனுபவ அறிவுரையாளராகத் திகழ்கிறார் என்று பவுலிங் ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் விளக்கினார்:

பிராவோ ஒரு அபாரமான அனுபவமிக்க வீரர், மும்பைக்கு எதிராக புதைந்துதான் போனோம். ஆனால் பிராவோ நான் பார்த்ததிலேயே சிறந்த டி20 இன்னிங்ஸ்களில் ஒன்றை ஆடினார். அந்தப் போட்டியை வெல்வோம் என்று கூட எதிர்பார்க்கவில்லை. தோனி கூட தோற்றாலும் சேத அளவைக் குறைப்பது பற்றித்தான் பேசினார்.

பிராவோவின் பவுலிங் பங்களிப்பு நடு ஓவர்களில் அபரிமிதமானது. பீல்டிங்குக்குத் தக்கவாறு வீசுகிறார் இது பார்ப்பதற்கு ஆச்சரியகரமாக உள்ளது.

அவர் பந்துகளில் ஒரு ரன் வரும் பந்துகள் அதிகம் உள்ளன. என்ன நடக்கப்போகிறது என்பதை பிராவோ புரிந்து வைத்துள்ளார்.

அவர் ஆலோசகராக இளம் பவுலர்களுக்கு இருப்பது நாம் பார்த்து தெரிந்து கொள்வதல்ல. இளம் வீச்சாளர்களிடம் நிறைய பேசுகிறார், நிறைய அறிவுரை வழங்குகிறார். கிரிக்கெட்டில் சிலவேளைகளில் சிறந்த தெரிவு சில பேட்ஸ்மென்களுக்கு சிங்கிள் கொடுத்து விடுவதுதான்.

இளம் பவுலர்கள் தங்கள் பந்து வீச்சுக்கான களவியூகத்துக்கு வீசுகிறார்களா என்பதை உறுதி செய்வதில் பிராவோவின் பங்கு அபரிமிதமானது. அணியைப் பொறுத்தவரையில் 3 முக்கியப் பங்குகளில் பிராவோ செயலாற்றுகிறார் என்றே எனக்குப் படுகிறது.

இவ்வாறு கூறினார் எரிக் சிம்மன்ஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in