Published : 13 Apr 2018 06:25 PM
Last Updated : 13 Apr 2018 06:25 PM

40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒளிபரப்பு உரிமைகளை இழந்த சேனல் 9

கடந்த 40 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டிகளை உயர்தரமாக ஒளிபரப்பு செய்து வந்த சேனல் 9 இம்முறை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ஒளிபரப்பு உரிமைகளை இழந்தது.

1 பில்லியன் டாலர்களுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை இழந்தது சேனல் 9.

சேனல் 7 மற்றும் அதன் பே டிவி பார்ட்னர் ஃபாக்ஸ்டெல் இந்த ஒப்பந்தத்தைத் தட்டிச் சென்றது. இந்த ஒப்பந்தம் 6 ஆண்டு காலத்துக்கானது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் என்றாலே சேனல் 9-தான். இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முதன் முதலில் கிரிக்கெட் ஒளிபரப்பு எப்படி இருக்க வேண்டும், எந்தத் தரத்தில் இருந்தால் தொலைக்காட்சி நேரலைக்கு ரேட்டிங் ஏறும் என்று சேனல் 9 1985-ம் ஆண்டு நடைபெற்ற மினி உலகக்கோப்பையின் போது இந்தியா வாங்கி ஒளிபரப்பிய போட்டியின் போது நிரூபித்தது. இன்னமும் கூட அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோஜர் பின்னி பந்து வீச்சும் கபில்தேவ் ஆலன் பார்டரை முதல் பந்திலேயே பவுல்டு எடுத்ததும், பிறகு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், தன் அதிரடி அனாயாச பேட்டிங் மூலம் ராட் மெக்கர்டி உள்ளிட்ட ஆஸி. பந்து வீச்சை புரட்டி எடுத்ததும் சேனல் 9 ஒளிபரப்பில் மறக்க முடியாத தருணஙக்ள். இறுதியில் பாகிஸ்தானை வீழ்த்தி ரவி சாஸ்திரி ஆடி காரை தொடர் நாயகனுக்காக பரிசாகப் பெற்றதும், ரசிகர்களால் எள்ளி நகையாடப்பட்ட கவாஸ்கர் கோப்பையைத் தூக்கியதும் இந்திய ரசிகர்களால் சேனல் 9 மூலம் மறக்க முடியாத தருணங்களாயின என்பது மிகையல்ல.

அதன் பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈஎஸ்பிஎன் ஒளிபரப்பு நிறுவனங்கள் வந்ததையடுத்து ஆஸ்திரேலியாவில் கோடைகால கிரிக்கெட் நேரலை ஒளிபரப்புக்காக காத்திருந்து பயன்பெற்றனர் கிரிக்கெட் ரசிகர்கள், குறிப்பாக ஆசிய கிரிக்கெட் நாடுகளின் ரசிகர்கள். அப்போதுதான் 1992 உலகக்கோப்பையும் வந்தது.

40 ஆண்டுகளாக உலகத்தரம் வாய்ந்த ஒரு ஒளிபரப்பை கிரிக்கெட் மூலம் நமக்கெல்லாம் வழங்கிய சேனல் 9, கிரிக்கெட் இன்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஒளிபரப்பு உரிமைகளை ஒப்பந்தப் புள்ளிகளில் இழந்தது.

சேனல் 9 வழங்கிய உயர்தர தொழில்நுட்ப தெளிவான கிரிக்கெட் ஒளிபரப்புக்கு அதன் வர்ணனைக் குழுவான டோனி கிரேக், ரிச்சி பெனோ, இயன் சாப்பல், பில் லாரி வளம் சேர்த்தனர். கிரிக்கெட்டை எப்படிப் பார்க்க வேண்டும், லைவ் கமெண்டரி கொடுக்கும் போது எப்படி சிக்கனமாகக் கையாள வேண்டும் என்பதையெல்லாம் ரிச்சி பெனோ சக வர்ணனையாளர்களுக்குக் கற்றுக் கொடுத்த காலம். ரிச்சி பெனோவின் சிக்கனத்துக்கு பல உதாரணங்களில் ஒன்றைக் கூற வேண்டுமெனில் 1991 முத்தரப்பு ஒருநாள் தொடரில் மால்கம் மார்ஷலை சச்சின் டெண்டுல்கர் எதிர்கொள்கிறார். அப்போது முதல் ஷார்ட் பிட்ச் பந்தை சச்சின் மிட்விக்கெட் பவுண்டரிக்கு அனுப்பினார், அடுத்த பந்தும் அதேமாதிரி, அதே ஷாட், ரிச்சி பெனோ ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை.. ‘அண்ட் எகெய்ன்’ என்றார் அவ்வளவுதான். இப்போதைய வர்ணனையாளர்கள் போல் ஆர்பாட்டமெல்லாம் கிடையாது.

கிரிக்கெட் கற்றுக் கொள்ள வேண்டுமென்றாலும் வர்ணனையைக் கற்றுக் கொள்ள வேண்டுமென்றாலும் அது ரிச்சி பெனோ, டோனி கிரேக், இயன் சாப்பல், பில் லாரி நால்வர் குழுவிடத்தில் மட்டுமே சாத்தியம்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு தலைவலி கொடுத்த கெரி பேக்கருடையது இந்த சேனல் 9. பேக்கர் சீரிஸ் என்று அப்போதே தனியார் கிரிக்கெட்டை நடத்தி புகழ்பெற்றவர் அவர்.

சேனல் 9 ஒப்பந்தம் போனது பற்றி அந்த வர்ணனைக்குழுவில் இருக்கும் இயன் ஹீலி கூறும்போது, “இது எப்படியிருக்கும் என்பது பற்றி என்னால் கணிக்க முடியவில்லை, 40 கோடைக்காலங்கள்... முழுதும் கிரிக்கெட், எனக்கு கோடை விடுமுறை இல்லை. இப்போது கிடைத்தால் ஓகேதான்” என்று கூறியுள்ளார். ஆனால் அடுத்த ஆண்டு ஆஷஸ் தொடர், அடுத்த ஒருநாள் மற்றும் டி20 உலகக்கோப்பை உரிமைகளை சேனல் 9 வைத்துள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய விளையாட்டு கிரிக்கெட் என்பதால் மக்களுக்கு நேரலை ஒளிபரப்புகள் இலவசம்தான், தற்போது புதிய ஒப்பந்தங்களின் படியும் 80% போட்டிகள் இலவசம்தான் மீதி 20% போட்டிகள் கட்டணம் செலுத்த வேண்டி ஏற்படலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x