Published : 23 May 2024 06:29 AM
Last Updated : 23 May 2024 06:29 AM

“அணியில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டார்கள்” - கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பெருமிதம்

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் அகமதாபாத்தில் நடைபெற்ற தகுதி சுற்று 1 ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணியை 19.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் ஓவரிலேயே மிட்செல் ஸ்டார்க் அற்புதமாக பந்து வீசி டிராவிஸ் ஹெட்டை ரன் ஏதும் எடுக்காத நிலையில் போல்டாக்கினார்.

இதையடுத்து அபிஷேக் சர்மாவை (3), வைபவ் அரோரா வெளியேற்ற தொடக்கத்திலேயே ஆட்டம் கண்டது ஹைதராபாத் அணி. எனினும் ராகுல் திரிபாதி தனது அதிரடியால் சற்று அச்சுறுத்தல் கொடுத்தார். அவர் 35 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 55 ரன்களில் ரன் அவுட் ஆக மீண்டும் சரிவை சந்தித்தது ஹைதராபாத் அணி. நிதிஷ் குமார் ரெட்டி (9), ஷாபாஷ் அகமது (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் மிட்செல் ஸ்டார்க் பெவிலியனுக்கு திருப்பினார்.

ஹென்ரிச் கிளாசன் 32, பாட்கம்மின்ஸ் 30 ரன்களும் சேர்த்ததால் ஹைதராபாத் அணியால் சற்று கவுரவமான இலக்கை கொடுக்க முடிந்தது. கொல்கத்தா அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3, வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட்கள் வீழ்த்தினர். வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

160 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 24 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். முன்னதாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 23, சுனில் நரேன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. 2021-ம் ஆண்டு சிஎஸ்கேவிடம் தோல்வி அடைந்து 2-வது இடம் பிடித்திருந்தது.

வெற்றி குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது:

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சியாக உள்ளது. அணியில் அனைவரும் பொறுப்புடன் செயல்பட்டனர். அணியின் ஒட்டுமொத்த செயல் திறனும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் சரியாக பயன்படுத்தினோம்.

ஆடுகளத்தின் சூழ்நிலையை அறிந்து ஒவ்வொரு பந்து வீச்சாளரும் செயல்பட்ட விதம் அற்புதமானது. ரன் விகிதம் அதிகரித்தபோதிலும் பந்து வீச்சாளர்கள் கடைப்பிடித்த அணுமுறை சிறப்பானது. எங்களது பந்து வீச்சாளர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாக செயல்படக்கூடியவர்கள். யாருமே விஷயங்களை எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

ரஹ்மனுல்லா குர்பாஸ் முதல் ஆட்டத்தில் விளையாடினாலும் தொடக்கத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தினார். சுனில் நரேனும் அந்த உத்வேகத்தை தொடர்ந்தார். அதை பின்பற்றி நடுவரிசையில் நானும், வெங்கடேஷ் ஐயரும் ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இறுதிப் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு ஸ்ரேயஸ் ஐயர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x