Published : 23 May 2024 06:14 AM
Last Updated : 23 May 2024 06:14 AM

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்: 12 பதக்கங்கள் வென்று இந்தியா அசத்தல்

சச்சின் சர்ஜேராவ் கிலாரி

கோபே: ஜப்பானின் கோபே நகரில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிநடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான குண்டு எறிதலில் எஃப் 46 பிரிவில் இந்தியாவின் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.30 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் தனது சொந்த ஆசிய சாதனையையும் முறியடித்துள்ளார். கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் சச்சின் சர்ஜேராவ் கிலாரி 16.21 மீட்டர் தூரம் எறிந்திருந்தார்.

சச்சின் சர்ஜேராவ் கிலாரி கூறும்போது, “தங்கப் பதக்கம் வென்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏற்கெனவே பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன். அங்கேயும் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற ஆடவருக்கான கிளப் த்ரோ எஃப் 51 பிரிவில் இந்தியாவின் தரம்பீர் 33.61 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

நேற்று முன்தினம் ஈட்டி எறிதலில் சுமித் அன்டில் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவருக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மாரியப்பன் 1.88 மீட்டர் உயரம் தாண்டி சாம்பியன்ஷிப் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். மேலும் மகளிருக்கான கிளப் த்ரோவில் ஏக்தாபியான் தங்கப் பதக்கம் கைப்பற்றியிருந்தார்.

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்கள் வென்றுள்ளது. உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா அதிக பதக்கங்கள் வெல்வது இதுவே முதன்முறையாகும். கடந்த ஆண்டு பாரிஸ்தொடரில் அதிக பட்சமாக 3 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 10 பதக்கங்கள் கைப்பற்றி இருந்தது.

இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில் இந்தியாவுக்கு மேலும் சில பதக்கங்கள் கிடைக்க வாய்ப்புஉள்ளதாக தலைமை பயிற்சியாளர் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, “மேலும் 2 தங்கப் பதக்கங்களை எதிர்பார்க்கிறோம். இம்முறை பதக்கங்களின் எண்ணிக்கை 17-ஐ தொடும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார். - பிடிஐ

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x