Published : 23 May 2024 06:24 AM
Last Updated : 23 May 2024 06:24 AM

மேக்னஸ் கார்ல்சனை நார்வேயில் எதிர்கொள்வது சவால் இல்லை: சொல்கிறார் பிரக்ஞானந்தா

ஸ்டாவன்ஜர்: மேக்னஸ் கார்ல்சனை அவரது சொந்த மண்ணில் எதிர்கொள்வது தனக்கு எந்தவித நெருக்கடியும் சவாலும் இல்லை என இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார்.

நார்வே செஸ் தொடர் வரும் 27-ம் தேதி ஸ்டாவன்ஜர் நகரில் தொடங்குகிறது. இதில் பல முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கருனா, ஹிகாரு நகமுரா, நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரென், பிரான்ஸின் அலிரேசா ஃபிரோஸ்ஜா, இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா ஆகிய 6 பேர் கலந்து கொள்கின்றனர். இரு ரவுண்ட் ராபின் முறையில் 11 நாட்கள் நடத்தப்படும் இந்த தொடரின் நேரக்கட்டுப்பாடு 120 நிமிடங்கள் ஆகும்.

18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டரான ஆர்.பிரக்ஞானந்தா சமீபத்தி போலந்து நாட்டின் வார்சாவில் நடைபெற்ற சூப்பர்பேட் ரேபிடு மற்றும் பிளிட்ஸ் தொடரில் 33 வயதான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியிருந்தார். கடந்த இரு ஆண்டுகளில் நடைபெற்ற தொடரில் மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றிகளை பிரக்ஞானந்தா பதிவு செய்துள்ளார். இந்நிலையில் நார்வே செஸ் தொடர்பாக பிரக்ஞானந்தா கூறியதாவது:

மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக அவரது சொந்த மண்ணில் விளையாடுவதை எனக்கான சவாலாக கருதவில்லை. பொதுவாக சொந்த மண்ணில் விளையாடும் வீரருக்குத்தான் இது முக்கியம். ஆனால் எனக்கு அது முக்கியம் இல்லை. நான் எப்போதும் நல்ல சவாலை ரசிப்பேன். கடந்த ஆண்டு ஃபிடே உலகக் கோப்பைக்குப் பிறகு, மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக நான் விளையாடும் முதல் கிளாசிக்கல் ஆட்டம் இதுவாகும். அவருக்கு எதிராக விளையாடுவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இதேபோன்றுதான் மற்ற வீரர்களுக்கு எதிராக மோதுவதிலும் உற்சாகமாக இருக்கிறேன். இங்குள்ள அனுபவம் எதிர்கால போட்டிகளில் எனக்கு உதவும்.

நார்வே செஸ் போட்டி மிகவும் வலுவானது. எனது சிறந்த செயல் திறனை வெளிப்படுத்த வாய்ப்பாகவும் சவாலாகவும் இந்த தொடரை பார்க்கிறேன். வேறு எங்கும் விளையாடாத நேரக் கட்டுப்பாட்டை நார்வே செஸ் தொடரில் விளையாட உள்ளதை ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளேன்.

இந்த ஆண்டு போட்டிகள் அதிகம் உள்ளன.நார்வே செஸ் போட்டிக்குப் பிறகு, செஸ் ஒலிம்பியாட்போட்டிக்காக புடாபெஸ்ட் செல்கிறோம். ஆண்டின் பிற்பகுதியில் குளோபல் செஸ்லீக்கிலும் விளையாடுகிறேன். இப் போதைக்கு, எனது கவனம் நார்வே செஸ் தொடர் மீது உள்ளது, என்னால் முடிந்ததைச் செய்ய உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் நன்கு தயாராக இருக்கிறேன். இவ்வாறு பிரக்ஞானந்தா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x