சிறந்த பந்து வீச்சின் மூலம் தன் மீதான விமர்சனங்களை ம்யூட் செய்த ஸ்டார்க்!

மிட்செல் ஸ்டார்க்
மிட்செல் ஸ்டார்க்
Updated on
1 min read

அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபையர் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது மிட்செல் ஸ்டார்க்கின் பந்து வீச்சு.

குவாலிபையர் போட்டியில் ஸ்பார்க் உடன் வீசிய அவர், முதல் ஓவரிலேயே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட்டை போல்ட் ஆக்கினார். அடுத்ததாக ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் நிதிஷ் ரெட்டி மற்றும் ஷாபாஸ் அகமது விக்கெட்டை கைப்பற்றினார். மொத்தம் நான்கு ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அது கொல்கத்தா அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அதன் பலனாக ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.

நடப்பு சீசனுக்காக அவரை ரூ.24.75 கோடிக்கு ஏலத்தில் வாங்கி இருந்தது கொல்கத்தா அணி. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவருக்கு இந்த சீசனின் தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. ரன்கள் வாரி வழங்கினார். எக்கானமி ரேட் 10+ என இருந்தது. அதன் காரணமாக கிரிக்கெட் வல்லுநர்கள், விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை விமர்சித்தனர். இந்த நிலையில் தான் முக்கிய போட்டியில் சிறப்பான செயல்திறனை அவர் வெளிப்படுத்தினார்.

“எங்கள் அணிக்கு சிறந்த தொடக்கம் கொடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி. ஹெட் மற்றும் அபிஷேக் கூட்டு சேர்ந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் அறிவோம். பவர்பிளே ஓவர்களில் இந்த இரண்டு அணிகளும் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதனால் அவர்களுக்கு ஸ்டம்ப் டு ஸ்டம்ப் வீச வேண்டும் என முடிவு செய்தோம்.

அவர்கள் இருவரையும் நாங்கள் சொற்ப ரன்களில் வெளியேற்றினோம். சன்ரைசர்ஸின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அவர்கள் தான். எங்கள் அணியின் வைபவ் மற்றும் ஹர்ஷித் ராணா என இருவரும் சிறந்த திறன் கொண்டவர்கள். கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்கள். அவர்கள் வரும் நாட்களில் விக்கெட்டுகளை குவிப்பார்கள். அது ஐபிஎல் மட்டுமல்லாது இந்திய அணிக்காகவும் இருக்கும்.

சுழற்பந்து வீச்சிலும் சிறந்த வீரர்களை கொண்டுள்ளோம். எங்கள் அணி சிறந்த பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது” என ஆட்ட நாயகன் ஸ்டார்க் தெரிவித்தார். நடப்பு சீசனில் 13 போட்டிகளில் ஆடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in