“ஓய்வுக்கு பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவது எளிதல்ல” - தோனி

தோனி
தோனி
Updated on
1 min read

ராஞ்சி: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. இந்த சூழலில் நிகழ்வு ஒன்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி பங்கேற்று பேசி இருந்தார். அதனை யூடியூப் சேனல் ஒன்று பகிர்ந்துள்ளது.

அதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாட தான் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசன் தான் தோனி பங்கேற்று விளையாடும் கடைசி சீசனாக இருக்கும் எனச் சொல்லப்பட்டது. ஏனெனில், அடுத்த சீசனுக்கு முன்னதாக மெகா ஏலம் நடைபெற உள்ளது காரணமாக சொல்லப்பட்டது.

42 வயதான தோனி, இந்த சீசனின் தொடக்கத்துக்கு முன்னதாகவே கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி இருந்தார். ருதுராஜ் கெய்க்வாட் கேப்டன் பொறுப்பை கவனித்தார். ஐபிஎல்-2024 சீசனில் 11 இன்னிங்ஸ் ஆடி 161 ரன்களை தோனி எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 220.55. பேட்டிங் சராசரி 53.67.

“கடினமான விஷயம் என்னவென்றால் ஆண்டு முழுவதும் நான் கிரிக்கெட் விளையாடுவது இல்லை. அதன் காரணமாக நான் ஃபிட்னெஸ் உடன் இருக்க வேண்டியது அவசியம். நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இளம் வீரர்களுடன் போட்டியிட வேண்டி உள்ளது. தொழில்முறை சார்ந்த விளையாட்டு அவ்வளவு எளிதானது அல்ல. இங்கு வயதை பார்த்து எல்லாம் எந்த டிஸ்கவுன்டும் கொடுக்க மாட்டார்கள்.

நீங்கள் விளையாட வேண்டுமென்றால் உங்களுடன் விளையாடும் மற்ற வீரர்களை போல நீங்களும் ஃபிட்டாக இருக்க வேண்டும். அதனால் உணவு பழக்க வழக்கங்கள், கொஞ்சம் பயிற்சி என சில விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. நான் சமூக வலைதளத்தில் இல்லாதது என்னுடய அதிர்ஷ்டம். அதனால் எனக்கு எந்த கவனச்சிதறல் கொஞ்சம் குறைவு” என தோனி தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து அவர் ஓய்வு பெறுவது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அது எப்போது என்பதை அவர் மட்டுமே அறிவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தனது சொந்த ஊரான ராஞ்சியில் குடும்பம், விவசாய பண்ணை, தனது செல்லப்பிராணிகள், தனக்கு பிடித்த வாகனங்கள் என தனக்கு பிடித்த வகையில் வாழ்ந்து வருகிறார். அது அவரது மன அழுத்தத்தை போக்குவதாகவும் தோனி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in