Last Updated : 12 Apr, 2018 04:35 PM

 

Published : 12 Apr 2018 04:35 PM
Last Updated : 12 Apr 2018 04:35 PM

சோகத்தில் சிஎஸ்கே வீரர்கள்: சென்னையில் இருந்து போட்டிகள் புனேவுக்கு மாற்றப்படுவதால் வேதனை

காவிரி போராட்டத்தின் எதிரொலியாக சென்னையில் இருந்து ஐபிஎல் போட்டிகள் புனே நகருக்கு மாற்றப்பட்டதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பலர் அதிருப்தியும், வேதனையும் தெரிவித்துள்ளனர்.

காவிரி நதிதீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால், இளைஞர்கள் திசைதிரும்பிவிடக்கூடும் என்பதால், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தக்கூடாது என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. அதையும் மீறி நுழைந்த சில போராட்டக்காரர்கள், மைதானத்தில் ரவிந்திர ஜடேஜா மீது செருப்பு வீசினார்கள். இதனால், சிறிதுநேரம் ஆட்டம் தடைபட்டது.

மேலும், சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பது இயலாது என்று சென்னை போலீஸார் ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டனர். இதனால், சென்னையில் அடுத்தும் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும், புனேவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.

சூதாட்டப் புகார் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகள் தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வந்துள்ளது. இதனால், சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு போட்டியையும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்நிலையில் போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஷேன் வாட்ஸன் ட்விட்டரில் வேதனையுடன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய சோகம் நடந்துள்ளது. சென்னை போட்டிகள் அனைத்தும் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதால்,இனி, நாங்கள் விளையாட முடியாது. சென்னையில் இருக்கும் சூழல் மிகவும் அற்புதமானது. தமிழகத்தில் இருக்கும் அரசியல் சூழல், விரைவில் மாறும் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீரர் சுரேஷ் ரெய்னா, ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், ''எங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதை இந்த ஆண்டும் இழந்துவிட்டோம். சென்னை ரசிகர்களையும், சிஎஸ்கே ரசிகர்களையும் இந்த ஆண்டும் மகிழ்விக்க முடியவில்லை. நாங்கள் சென்னையை விட்டு வெளிமாநிலம் சென்று விளையாடினாலும், சென்னை ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களும் எங்கள் மனதில் எப்போதும் நிலையாக இருப்பீர்கள். வருத்தத்துடன் புனே செல்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த ஆண்டு இடம் பெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சென்னையில் இந்த சீசனில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாது என்பது இதயத்தை நொறுங்கவைக்கும் செய்தியாகும். சென்னையில் சிஎஸ்கே அணியின் விளையாட்டைப் பார்க்க ரசிகர்கள் 2 ஆண்டுகளாகக் காத்திருந்தார்கள். விரைவில் அனைத்துப் பிரச்சினைகளும் நல்லவிதமாக தீர்வு காணப்பட்டு, மீண்டும் சென்னையில் போட்டியில் நடத்தப்படும் என நம்புகிறேன். உங்களின் அன்புக்கும் நன்றிகள். தமிழக மக்களுக்காக எப்போதும் என் பிரார்த்தனைகள் தொடரும்'' என அவர் தெரிவித்துள்ளார்.

ரவிந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ''இன்னமும் சிஎஸ்கே ரசிகர்கள் மீது அதிகப்படியான அன்பையும், அக்கறையையும் வைத்திருக்கிறோம்'' என்று அவர் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் தலைமைப்பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்பிங் கூறுகையில், ''சென்னையைவிட்டுச் செல்வது வருத்தமளிக்கிறது. 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியது மிகப்பெரிய அனுபவம். தமிழக ரசிகர்களின் அன்பும், ஆதரவும், கிரிக்கெட் மீதான காதலும் எங்களை உற்சாகப்படுத்துகிறது. தமிழகத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன். எங்களுக்குசிறப்பான முறையில் வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.

சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் ஊடகங்களிடம் கூறுகையில், ''சென்னை ரசிகர்கள் அளித்த ஆதரவு அளப்பரியது. இங்கிருக்கும் சூழலை என்னால் நம்பமுடியாத அளவுக்கு பிரமிப்பாக இருக்கிறது. உங்களின் ஆதரவு என்னை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது''எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x