

பெங்களூரு: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்க வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றிலிருந்து சிஎஸ்கே அணி வெளியேறியது.
இதனால் இதுதான் தோனிக்கு கடைசி ஐபிஎல் போட்டி என்ற கருத்து பரவியது. ஆனால் இதை இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கே அணியில் விளையாடியவருமான அம்பத்தி ராயுடு மறுத்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: இந்த சீசனில் சிஎஸ்கே, பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை. அவ்வளவுதான். எனவே, இதுவே தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவரது கிரிக்கெட் பயணத்தை இப்படி முடிப்பதைப் பார்க்க நான் விரும்பவில்லை.
பெங்களூரு அணியுடனான போட்டியின்போது அவர் ஆட்டமிழந்த நிலையில், ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பிளே ஆஃப்சுற்றுக்குத் தகுதி பெற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதோனி நினைத்தார். இம்பாக்ட் பிளேயர் விதியை பிசிசிஐ நீக்கக் கூடாது. நாங்கள் எம்.எஸ்.தோனி மீண்டும் விளையாடுவதைப் பார்க்க விரும்புகிறோம். ஆனால், அந்த முடிவு பிசிசிஐ அமைப்பின் கைகளில்தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.