

பாங்காங்: தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி மற்றும் ஷிராக் ஷெட்டி இணையர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவு அரை இறுதி சுற்றில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது சீனாவின் ஷென் போ யங், லியு யி ஜோடியை எதிர்த்து விளையாடினர்.
இதில் சாட்விக் - ஷிராக் ஜோடி 21-15, 21-15 என்ற செட்டில் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். முதல் ஆட்டத்தில் பின்தங்கிய நிலையில் இருந்து அவர்கள் முன்னேற்றம் கண்டனர். அதன் பின்னர் இரண்டாவது கேமில் ஆட்டத்தை தங்களது முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். அதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கடந்த சில தொடர்களாக பின்னடைவை சந்தித்த சூழலில் இந்த வெற்றி அவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. “இன்று எங்களது சிறந்த ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்தினோம். ஒரு புள்ளிக்கு கூட நாங்கள் ரிலாக்ஸாக ஆடவில்லை. ஏனெனில், எதிர்த்து ஆடியவர்கள் இறுதிவரை போராடுவார்கள் என்பதை நாங்கள் அறிவோம்” என சாட்விக் தெரிவித்தார்.