Published : 19 May 2024 08:01 AM
Last Updated : 19 May 2024 08:01 AM
பெங்களூரு: ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி ஆட்டத்தின் சமநிலையை சீர்குலைத்துள்ளதாக ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் விதி நடப்பு சீசனில் பெரியஅளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. எனினும் இந்த விதிமுறையால் ஆல்ரவுண்டர்கள் உருவாவது பாதிக்கப்படுவதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேனும் இந்திய அணியின் கேப்டனுமான ரோஹித் சர்மா கருத்து தெரிவித்திருந்தார். இந்த விதிமுறைக்கு நான் ரசிகன் இல்லை எனவும், கிரிக்கெட்டை 11 பேர் விளையாட வேண்டும், 12 பேர் கிடையாது எனவும் கூறியிருந்தார்.
இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 262 ரன்கள் இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணி 8 பந்துகளை மீதம் வைத்து வெற்றிகரமாக துரத்தி சாதனை படைத்தது. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 287 ரன்கள் குவித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வரலாற்றுசாதனை நிகழ்த்தியது.
ஒட்டுமொத்தமாக இதுவரை நடப்பு சீசனில் 8 முறை 250-க்கும் அதிகமான ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனைகள் அனைத்தும் இம்பாக்ட்பிளேயர் விதிமுறையின் தாக்கத்தால் நிகழ்த்தப்பட்டவையாகவே கருதப்படுகிறது.
இந்நிலையில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடர்பாக ஆர்சிபி அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கூறியதாவது:
ரோஹித் சர்மாவின் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். விளையாட்டில் பொழுதுபோக்கு என்பது ஓர் அம்சம். ஆனால்ஆட்டத்தில் சமநிலை இல்லை. இம்பாக்ட்பிளேயர் விதி ஆட்டத்தின் சமநிலையைசீர்குலைத்துள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் மட்டும் அல்ல, பெரும்பாலானோர் இதையே உணர்கிறார்கள். பந்துவீச்சாளர்கள் தாங்கள் என்ன செய்ய வேண்டும்என்று யோசித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
ஒவ்வொரு பந்திலும் பவுண்டரி அல்லது சிக்ஸரை விட்டுக்கொடுத்து விடுவோமோ என்று பந்துவீச்சாளர்கள் நினைக்கும் இதுபோன்ற அனுபவத்தை நான் ஒருபோதும் அனுபவித்ததில்லை. ஒவ்வொரு அணியிலும் ஜஸ்பிரீத் பும்ரா அல்லது ரஷித் கான் இருப்பது இல்லை. கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் இருப்பதால்தான் பவர்பிளேவில் நான் 200 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடுகிறேன்.
8-வது வரிசையில் ஒரு பேட்ஸ்மேன் காத்திருப்பார் என்பதை நான் அறிவேன். நாம் உயர்மட்ட அளவிலான கிரிக்கெட்டை விளையாடுகிறோம். அதில் இம்பாக்ட் பிளேயர் விதியின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பது எனதுகருத்து. மட்டைக்கும் பந்துக்கும் இடையே சமநிலை இருப்பதில் ஒரு அழகு இருக்கிறது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, இம்பாக்ட் பிளேயர் விதி குறித்து பகுப்பாய்வுசெய்யப்படும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளார்.
அவர்கள், விளையாட்டை சமநிலைக்கு கொண்டு வரும் முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரு பேட்ஸ்மேனாக, இம்பாக்ட் பிளேயர் விதி சிறப்பானது என்று கூறமுடியும். ஆனால் போட்டியில் ஆர்வம் இருக்க வேண்டும். பவுண்டரிகள், சிக்ஸர்கள் மட்டுமே ஆர்வத்தை ஏற்படுத்தாது. 160ரன்களை கட்டுப்படுத்துவதிலும் சுவாரசியம் இருக்கிறது. இவ்வாறு விராட் கோலி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT