Published : 03 Apr 2018 08:39 AM
Last Updated : 03 Apr 2018 08:39 AM

தொடக்க ஜோடியை முடிவு செய்யவில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங் தகவல்

தொடக்க ஜோடியை இன்னும் முடிவு செய்யவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்தார்.

ஐபிஎல் 11-வது சீசன் போட்டிகள் வரும் 7-ம் தேதி மும்பையில் கோலாகலமாக தொடங்குகிறது. 2 வருட தடைக்கு பிறகு திரும்பி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் தொடக்க நாளான 7-ம் தேதி மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது. இந்தத் தொடருக்காக சென்னை அணி வீரர்கள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங், கேப்டன் தோனி ஆகியோரது மேற்பார்வையில் கடந்த ஒரு வாரகாலமாக சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பயிற்சியார் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:

இந்த சீசனில் தொடக்க வீரர்கள் யார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை. சேம் பில்லிங்ஸ், டு பிளெஸ்ஸிஸ், சோரே, முரளி விஜய், ஷேன் வாட்சன், அம்பாட்டி ராயுடு உள்ளிட்ட 6 தொடக்க பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். அணி சேர்க்கை மற்றும் சூழ்நிலையின் அடிப்படையிலேயே தொடக்க ஜோடியை முடிவு செய்வோம். அணி சேர்க்கை என்பது தொடக்க ஜோடிக்கு மட்டும் அல்ல மற்ற வரிசைக்கும் சேர்த்துதான் அமையும். தோனி இந்த சீசனில் பேட்ஸ்மேனாக விளையாடுவார். பந்து வீச்சை பொறுத்தவரையில் ஆல்பி மோர்கல், நெஹ்ரா ஆகியோர் இல்லாத குறையை நிகிடி, மார்க் வுட் நிரப்புவார்கள்.

இவர்களுடன் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சுழற்பந்துதான் எங்களுக்கு வலுவான ஆயுதம். மிட்செல் சான்ட்னருக்கு மாற்று வீரரை இதுவரை நாங்கள் முடிவு செய்யவில்லை. இந்த விஷயத்தில் நாங்கள் அவசரம் காட்டவில்லை. அணியில் பலதுறையிலும் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் பலர் உள்ளனர். தொடர் சிறப்பாக சென்றால் மாற்று வீரரை தேட வேண்டிய சூழல் அமையாது என்றே கருதுகிறேன். பயிற்சி ஆட்டங்களில் தீபக் சஹார், ஷர்துல் தாக்குர் ஆகியோரை பவர் பிளே மற்றும் கடைசி கட்ட ஓவர்களில் அதிகம் பயன்படுத்தி உள்ளோம்.

ஷர்துல் தாக்குர் இந்திய அணிக்காக இந்த பணியை ஏற்கெனவே சிறப்பாக செய்துள்ளார். ஹர்பஜன் சிங்குக்கு பந்து வீச்சுடன் பேட்டிங்கிலும் கூடுதல் பயிற்சி வழங்கி வருகிறோம். முதல் ஆட்டத்தில் பந்து வீச்சு கூட்டணி எப்படி இருக்கும் என்பது இப்போதைக்கு எங்களுக்கே தெரியாது. இன்னும் சில வீரர்கள் அணியில் இணைய வேண்டியது உள்ளது. சூழ்நிலையை பொறுத்துதான் அணி சேர்க்கை முடிவு செய்யப்படும். ஹர்பஜன் சிங் பந்து வீச்சுக்கு சேப்பாக்கம் ஆடுகளம் நன்கு ஒத்துழைக்கும். இந்தத் தொடரில் அவர் முக்கிய பங்கு வகிப்பார்.

இவ்வாறு ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x