

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றில் தொடர்ச்சியாக 6 போட்டிகளில் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. சனிக்கிழமை அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முக்கியமான போட்டியில் அந்த அணி வீழ்த்தி இருந்தது.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்ளசி தெரிவித்தது. அவர் 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தார். இரண்டு கேட்ச்கள் பிடித்து அசத்தியிருந்தார். தனது அணியை சிறப்பாக வழிநடத்தி இருந்தார்.
“லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்ததில் மகிழ்ச்சி. முதலாவதாக பேட் செய்ய நான் ஆடிய ஆடுகளங்களில் மிகவும் கடினமானதாக இந்த ஆடுகளம் இருந்தது. மழைக்கு பிறகு மீண்டும் ஆட வந்த போது ஆடுகளம் ராஞ்சி மைதானத்தின் ஐந்தாம் நாள் ஆடுகளம் போல இருந்தது. அதை மிட்செல் சான்ட்னரிடம் சொன்னேன்.
கடந்த ஆறு போட்டிகளாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறந்த இன்டென்ட் உடன் விளையாடினர். ஸ்ட்ரைக் ரேட்டும் சிறப்பாக இருந்தது. இலக்கு சற்று நெருக்கமாக இருந்த போது தோனி களத்தில் இருந்தார். பலமுறை வெற்றிகரமாக அதை அவர் செய்துள்ளார் என எண்ணினேன். ஈரமான பந்தில் எங்களது பந்துவீச்சை மாற்ற முயற்சித்தோம்.
ஆட்ட நாயகன் விருதை யாஷ் தயாளுக்கு நான் வழங்க விரும்புகிறேன். அவர் பந்துவீசிய விதம் நம்பமுடியாததாக இருந்தது. அதற்கு அவர் தகுதியானவர். கடைசி ஓவர் வீசுவதற்கு முன்னதாக பந்தில் அதிகம் ஃபேஸ் வேண்டாம் என அவரிடம் சொன்னேன். அவரது திறனை நம்புமாறு சொன்னேன். முதல் பந்தில் யார்க்கர் முயற்சித்தார். அடுத்தடுத்த பந்துகளில் ஃபேஸை மட்டுப்படுத்தினார். அது பலன் தந்தது.
எங்களுக்கு பார்வையாளர்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு ‘லேப் ஆஃப் ஹானர்’ தர விரும்பினோம். எங்களது முதல் இலக்கு நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைவது. இதை இந்த நேரத்தில் அனுபவிப்பது அவசியம். ஆனால், நாளை எங்கள் வேலைக்கு திரும்ப வேண்டும்” என தெரிவித்தார்.
யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவர்: இந்தப் போட்டியில் சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி ஓவரில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை யாஷ் தயாள் வீசினார். அதில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து தோனியின் விக்கெட்டை கைப்பற்றி இருந்தார். 6,விக்கெட்,0,1,0,0 என கடைசி ஓவரில் அவரது செயல்பாடு இருந்தது.