Last Updated : 19 Apr, 2018 04:10 PM

 

Published : 19 Apr 2018 04:10 PM
Last Updated : 19 Apr 2018 04:10 PM

‘ஒரு வேளை 2 உமேஷ் யாதவ் இருக்கிறார்களோ’ - நோ-பால் சரிபார்ப்பு குழப்பத்தில் நெட்டிசன்கள் கேலி

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் ஒரு பெரிய தவறு நிகழ்ந்தது. அது குறித்து நெட்டிசன்கள், ட்விட்டர்வாசிகள் தங்கள் கேலிப்பார்வைகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதை முதன் முதலில் அம்பலப்படுத்தியது ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவாகும் அந்த இணையதளத்துக்கு வாசகர் ஒருவர் அனுப்பிய ஆதார பூர்வ வீடியோவினால் இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.

விராட் கோலி ஒருமுனையில் ஆடிவந்தார் ஆனாலும் 13 பந்துகளில் வெற்றி பெற 77 ரன்கள் தேவை என்ற அசாத்திய நிலை. அப்போது 18வது ஓவரில் ஜஸ்பிரீத் பும்ரா வீசிய பந்தை உமேஷ் யாதவ் அடிக்க ரோஹித் சர்மா கேட்ச் பிடித்தார்.

பந்து வீசும்போது நடுவர்கள் அது நோபாலா என்று பார்க்க வேண்டியதுதான் முதற்கடமை, ஆனால் இப்போதெல்லாம் நடுவர்கள் அதனை பேட்ஸ்மென்கள் அவுட் ஆன பிறகு தொழில் நுட்ப உதவியுடன் செய்து வருகின்றனர். இது ஒரு வீழ்ச்சிதான். அப்படித்தான் உமேஷ் யாதவ் அவுட் ஆனது நோ-பாலிலா என்று நடுவர் 3ம் நடுவருக்கு அழைப்பு விடுக்க அவர்கள் காட்டிய ரீப்ளேவில் பவுலர் பந்து வீச வந்து கிரீசிற்கு அருகே வரும்போது உமேஷ் யாதவ் ரன்னர் முனையில் இருக்கிறார், இது எப்படி? அந்தக் குறிப்பிட்ட பந்தை விடுத்து வேறு ஒரு ரீப்ளேயைக் காட்டினர். உமேஷ் யாதவ் பேட்டிங் முனையில் அல்லவா இருந்திருப்பார்.

இது மட்டுமல்ல இந்த ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஒரு பந்து கூடுதலாக வீசியதும் நடந்தது. அதுவும் லீகல் பால்தான். அந்தப் பந்தில் ஒரு சிக்சர் அடித்து அது எதிரணியின் தோல்விக்குக் காரணமாகி அப்பீல் செய்தால் ஆட்ட முடிவே ரத்து செய்யப்படும் அளவுக்குக் கொண்டு செல்ல முடியும்.

அதுபோல்தான் நல்ல வேளையாக அது நோ-பால் இல்லை, உண்மையில் பும்ரா நோ-பால் வீசி அதற்குத் தவறான ரீப்ளேயைக் காட்டி வெற்றி பெறுவதற்கு 2 ரன்கள் இருக்கிறது எனும்போது தவறான அவுட் என்றால் விராட் கோலி சும்மா விடுவாரா என்பதுதான் இங்கு விவகாரம்.

இதனையடுத்து ட்விட்டர் வாசிகள் கேலிப்பதிவுகளை இடத்தொடங்கினர்.

அதில் குறிப்பாக உமேஷ் யாதவ் இரட்டையா? இது ஏமாற்றுவேலை மோசடி இதற்குக் காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ரீதியில் சிலரும்,

இன்னொரு ஜியோ ஸ்பான்சர்ஷிப் உமேஷ் யாதவ் பந்தை அடிக்கும் போது அவரே ரன்னர் முனையிலும் இருக்கிறார் நன்றாக இருக்கிறது என்று வேறு சிலரும்

வேறு சிலரோ இந்த ஐபிஎல் தொடரே ஒரு பெரிய ஊழல்.. விசாரணை தேவை என்று ட்விட்டர் வாசிகள் கேலியிலும் கோபத்திலும் பதிவிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x