Published : 25 Apr 2018 07:59 AM
Last Updated : 25 Apr 2018 07:59 AM

இந்தியாவின் ‘அடுத்த கபில்தேவ்’ பாண்டியா 19 பந்தில் 3 ரன்: டெல்லி ‘டர்’ டெவில்ஸ் வழியில் மும்‘பை’ இந்தியன்ஸ்

சன் ரைசர்ஸ் அணியின் 118 ரன்கள் இலக்கை விரட்ட முடியாமல் மும்பை இந்தியன்ஸ் அணி 87 ரன்களுக்குச் சுருண்டு படு கேவலமான தோல்வியைத் தழுவியது.

ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அணிகளும் ஆல் அவுட் ஆனது இது 3வது முறை, ஐபிஎல் வரலாற்றில் 2வது மிகவும் குறைந்த ஸ்கோரை வெற்றிகரமாக தடுத்தாட்கொண்டது சன் ரைசர்ஸ்.

மீண்டும் இரு அணிகளுக்குமிடையே யார் தோற்பது என்பதில் கடும் போட்டி, ஸ்கோர் போர்டு காட்டும் அளவுக்கு இந்தப் பிட்சில் ஒன்றுமில்லை, 10 விக்கெட் அல்ல 15 விக்கெட்டுகளை இழந்தாலும் 119 ரன்கள் என்ற இலக்கை வெற்றி பெற்றேயாக வேண்டும், எப்படியிருந்தாலும் வெற்றி பெறும் இலக்காகும் இது, ஆனால் இதையும் தோற்பது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியில் சீரியசாக ஏதோ பிரச்சினை உள்ளது. அதற்காக ரஷீத் கான், சித்தார்த் கவுல், பேசில் தம்பி ஆகியோரது அபாரப் பந்து வீச்சை குறைத்துப் பேசுவதாகாது, புவனேஷ்வர், ஸ்டான்லேக் இல்லாமலேயே 118 ரன்களை வெற்றிகரமாக சன் ரைசர்ஸ் தடுத்தது.

அதிலும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் டாஸ் வென்று இலக்கைத் துரத்துவோம் என்று சன் ரைசர்ஸ் அணியைக் களமிறக்கி சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வியது பெரிய தமாஷ்தான்.

இந்தியாவின் 'அடுத்த கபில்தேவ்'  பாண்டியாவை ஆட்டிப்படைத்தது ரஷீத் கான் மட்டும்தானா?

2 போட்டிகளாக அதிரடி வீரர்களிடம் சிக்கி ரன்களை கொடுத்த ரஷீத் கான் மும்பை அணியை தன் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளும் நம்பிக்கையுடன் இறங்கினார். அதனால்தான் 11 ரன்களுக்கு இவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு ஆட்டத்தின் 17வது ஓவரை இந்தியாவின் அடுத்த கபில்தேவான ஹரிதிக் பாண்டியாவுக்கு மெய்டன் ஓவர் வீசியது சிறப்பு மிக்கதாகும்.

 

4 ஓவர்களில் 39 ரன்கள் என்பது எடுக்க முடியாதது அல்ல ஆனால் ஹர்திக் பாண்டியா, ரஷீத் வீசிய முதல் பந்தை லாங் ஆஃபுக்கு அடித்து சிங்கிள் ஓட மறுத்தார், காரணம் எதிர்முனையில் பும்ரா, அவரை ரஷீத் கான் சாப்பிட்டு விடுவார் என்று ஸ்ட்ரைக்கைத் தக்கவைக்க முனைந்தார். இதுவரை சரி. ஆனால் ஸ்ட்ரைக்கைத் தக்க வைத்து என்ன செய்தார் என்பதுதான் கேள்வி.

அடுத்த பந்து பீட்டன், அடுத்த 4 பந்துமே தடுத்தாடப்பட்டது. மெய்டன் ஓவர். ஐபிஎல் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த கபில்தேவுக்கு 17வது ஓவர் மெய்டன்! இது நடக்குமா எங்காவது? ஹர்திக் பாண்டியா ‘ஹைப்’ பாண்டியாவானதைத்தான் இது காட்டுகிறது.

ஆனால் அடுத்த ஓவரில் பும்ரா கேட்ச் போல் சென்றாலும் 1 ரன்னை எடுத்து பாண்டியாவிடம் ஸ்ட்ரைக் கொடுத்தார், பேசாமல் பும்ரா சிங்கிளை வேண்டாம் என்று கூறி பாண்டியாவிடமிருந்து ஸ்ட்ரைக்கைக் காப்பாற்றியிருக்கலாம். சித்தார்த் கவுல் வீசிய இந்த ஓவரில் பாண்டியா ஸ்ட்ரைக்கு வந்தவுடன் மிட் ஆஃப் முன்னால் உள்ளது, ஃபின் லெக்கும் வட்டத்துக்குள் உள்ளது, ஆனால் 'அடுத்த கபில்தேவ்' மைதானத்தில் ஈக்கள் அதிகம் போல் மட்டையை சுற்றி ஈயோட்டிக் கொண்டிருந்தார். சித்தார்த் கவுல் முடிந்தால் என்னை அடி என்று சவால் விடுத்தார் அடுத்த பந்து ‘கண்ணொரு பக்கம் நெஞ்சொரு பக்கம் பெண்ணோடு போராடுது’ என்ற பாடல் வரியை நினைவூட்டியது போல் கையொரு பக்கம் காலொரு பக்கம் பாண்டியாவோடு போராடியது மட்டை, என்னவோ செய்தார் தேர்ட்மேனில் கேட்ச் ஆனது.

ஸ்ட்ரைக்குக்கு வந்த பும்ரா அடுத்த பந்தை அருமையாக புல் ஷாட்டில் பவுண்டரி அடித்தது ஸ்ட்ரைக் கொடுக்காமல் அகராதித் தனம் காட்டி தமாஷாக முடிந்த பாண்டியாவுக்கு பும்ரா கொடுத்த பதில் போலத்தான் இருந்தது. 19 பந்துகளில் 3 ரன்கள். ஸ்ட்ரைக் ரேட் 15.78. ரஷீத் கான் மட்டுமல்ல பேசில் தம்பி, சித்தார்த் கவுல் என்று பாண்டியாவுக்கு ஒன்றுமே வரவில்லை. இவருக்கு லாபி செய்த தோனி, விராட், சாஸ்திரி அண்ட் கோ-தான் தென் ஆப்பிரிக்காவில் மணீஷ் பாண்டேயை 6 ஒருநாள் போட்டிகளிலும் உட்கார வைத்தது. சஞ்சு சாம்சனின் திறமையை வம்பிழுக்கும் வினோத் காம்ப்ளிக்கு ஒரு சவால், ஹர்திக் பாண்டியா ஒரு ஹைப் என்று எழுதத் தயாரா?

சன் ரைசர்ஸ் பேட்டிங்கும் சொதப்பல்

சன் ரைசர்ஸ் பேட் செய்ய அழைக்கப்பட்ட போது கேன் வில்லியம்சன், ஷிகர் தவண் இறங்கினர். இருவருமே 9 பந்துகள் தாக்குப் பிடித்தனர். மிட்செல் மெக்லினாகன் இருவரையும் வீழ்த்திய போது ஆஹா ரோஹித் முடிவு சரிதான் என்று தோன்றியது.

மணீஷ் பாண்டே சிறிது நேரம் நின்றாலும் 3 பவுண்டரிகளுடன் 11 பந்துகளில் 16 ரன்களுக்கு ஸ்டைலிஷாக ஆடி கவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார், வில்லியம்சனும், ஷாகிப் அல் ஹசனும் ஒரு ரன்னுக்காக கபடி ஆடி அது கடைசியில் ஷாகிப் ரன் அவுட்டில் முடிந்தது. கேன் வில்லியம்சன் மட்டும் தன் கடந்த இன்னிங்சின் தொடர்ச்சியாக 5 பவுண்டரிகளுடன் 21 பந்துகளில் 29 எடுத்து இன்சைடு எட்ஜில் கேட்ச் ஆக சன் ரைசர்ஸ் 5 விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள்.

யூசுப் பத்தான் ஆட்டத்தின் முதல் சிக்ஸை அடித்து 33 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். மொகமது நபியும் 14 ரன்கள் சேர்த்தனர். ஆனால் மயங்க் மார்க்கண்டே நபி, பேசில் தம்பியைக் காலி செய்ய யூசுப் பத்தானை முஸ்தபிசுர் ரஹ்மான் வீழ்த்த, அபாய ரஷீத் கானை பும்ரா வீழ்த்த 20 ஓவர்களுக்குள் 118 ரன்களுக்குச் சுருண்டது சன் ரைசர்ஸ். மெக்லினாகன், மார்க்கண்டே, பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மும்பை வீழ்ந்தது:

எவின் லூயிஸ், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா, இஷான் கிஷன், பாண்டியா சகோதரர்கள் ஆகியோருக்கு 119 ரன்கள் ஒரு பொருட்டா? ஆனால் 2வது போட்டியில் ஆடும் வேறு வகையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா பிரமாதமாக வீசி எவின் லூயிஸை இன்ஸ்விங்கரில் லீடிங் எட்ஜில் வீழ்த்தினார். இஷான் கிஷன் விக்கெட் கீப்பிங்கில் நேற்று சொதப்பிய கையோடு படுமோசமான பொறுப்பற்ற ஷாட்டில் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் ரோஹித் சர்மா, ஷாகிப் அல் ஹசனை வாரிக்கொண்டு ட்ரைவ் ஆட முனைந்து எட்ஜ் செய்ய ஸ்லிப்பில் ஷிகர் தவண் கேட்ச் எடுத்தார். பவர் பிளே முடிந்து ஸ்கோர் 22/3.

சூர்யகுமார் யாதவ் (34), குருணால் பாண்டியா (24) தவிர ஒருவரும் அர்த்தமுள்ள வகையில் ஆடவில்லை. இருவரும் 40 ரன்களைச் சேர்த்தனர். ரஷீத் வந்தார் குருணாலை எல்.பி. செய்தார். பின் காலில் பட்டது, லைனில் உள்ள பந்து உடனடியாக கையை தூக்க வேண்டிய ரவிக்கு மட்டும் அது நாட் அவுட் போலும், ரிவியூ சென்றதன் அடிப்படையில் அவுட் ஆனது. பொலார்ட் இறங்கினார் ஷாகிப் அல் ஹசன் பந்தில் இந்தப் போட்டியின் 2வது சிக்சரை அடித்தார். ஆனால் ரஷீத் கான் டாட் பால்களாக வீச வீச நெருக்கடி அதிகரித்த பொலார்ட், ஸ்லிப் இருக்கும் போதே ரஷீத்தை லேட் கட் ஆடி கேட்ச் ஆனார். ஷாட் தேர்வும் கேள்விக்குரியதே. அதன் பிறகுதான் பாண்டியாவுக்கு மெய்டன் ஓவர்.

பேசில் தம்பி 15வது ஓவரில் வரவழைக்கப்பட்டார். இவர்தான் முக்கிய விக்கெட்டான சூரியகுமார் யாதவ்வை வீழ்த்தினார். நல்ல ஷாட்தான் ஆனால் நேராக மிட்விக்கெட்டில் ரஷீத் கையில் அடித்தார். ஆனால் ஹர்திக் பாண்டியா ஏதோ ஜெயிக்க வைக்க வந்தவர் போல் நின்றார், ஆனால் சொதப்பினார். சித்தார்த் கவுல் ஸ்பெல் வேகமானது, ஆக்ரோஷமானது, இதில் மெக்லினாகன், மார்க்கண்டே, ஹர்திக் பாண்டியா ஆகியோரை வீட்டுக்கு அனுப்பினார். பேசில் தம்பி, முஸ்தபிசுரை வீழ்த்த 19வது ஓவரில் மும்பை இந்தியன்ஸ் சம்பிரதாயங்கள் முடிந்தன.

ஆட்ட நாயகன் ரஷீத் கான். 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் 1 போட்டியில்தான் வென்றுள்ளது, மும்பையும் டெல்லியும் கடும் வீழ்ச்சிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x