‘‘முன்கூட்டியே வெளியேறும் இங்கிலாந்து வீரர்களுக்கு அபராதம்’’ - சுனில் கவாஸ்கர் வலியுறுத்தல் @ ஐபிஎல் 2024

இங்கிலாந்து வீரர்கள்
இங்கிலாந்து வீரர்கள்
Updated on
1 min read

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வீரர்கள் வெளியேறுகின்றனர். இதனை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் பிசிசிஐ அபராதம் விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். “விளையாட்டு வீரர்கள் எப்போதுமே தங்களது தேசத்துக்காக விளையாடுவது அவசியமானது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதை நான் ஏற்கிறேன்.

ஆனால், ஒரு சீசன் முழுவதும் ஆடுவதாக ஃப்ரான்சைஸ் அணிகளுக்கு உறுதி அளித்துவிட்டு, அதிலிருந்து பின்வாங்குவது ஃப்ரான்சைஸ் அணிக்குதான் வீழ்ச்சி. இந்த மாதிரியான சூழலில் அணியின் உரிமையாளர்கள் வீரர்களுக்கான கட்டணத்தில் இருந்து குறிப்பிட்ட கட்டணத்தை கழித்துக் கொள்ளலாம். இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் சார்ந்துள்ள கிரிக்கெட் வாரியத்துக்கு கட்டணத்தில் 10 சதவிகிதம் வழங்க வேண்டி உள்ளது. அதை இந்த மாதிரியான நேரங்களில் தவிர்க்கலாம்.

இந்த விவகாரத்தில் தங்கள் வீரரை அனுப்பிவிட்டு, பின்னர் அழைத்துக் கொண்ட வாரியத்துக்கு அபராதம் விதிக்கலாம். ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் வாரியத்துக்கு கமிஷன் வழங்கும் நடைமுறையை பிசிசிஐ மட்டுமே கடைபிடிக்கிறது. ஆனால், அதற்கான உரிய பலனை பெறுகிறதா என்பது கேள்வி” என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள ஜாஸ் பட்லர், மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோ, சேம் கரண், லியாம் லிவிங்ஸ்டன், பில் சால்ட், வில் ஜேக்ஸ், ரீஸ் டாப்லி ஆகியோர் நடப்பு ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளுக்காக விளையாடி வருகின்றனர்.

உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இங்கிலாந்து உள்நாட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடுகிறது. இதில் பங்கேற்கும் வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து வீரர்கள் வெளியேறி தாயகம் திரும்புவார்கள் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

அதன்படி இங்கிலாந்து வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். முழங்கால் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு காரணமாக லிவிங்ஸ்டன் நாடு திரும்பியுள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக அவருக்கு ஓய்வு அவசியம் தேவைப்படுகிறது.

அவருடன் பட்லர், வில் ஜேக்ஸ் மற்றும் ரீஸ் டாப்லி ஆகியோரும் சென்றுள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் சுற்றில் இருந்து வெளியேறிய நிலையில் சேம் கரண் மற்றும் பேர்ஸ்டோ போன்ற வீரர்கள் நாடு திரும்புவதில் எந்த சிக்கலும் இருக்காது என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in