Published : 13 Apr 2018 08:59 PM
Last Updated : 13 Apr 2018 08:59 PM

உமேஷ் யாதவ், டிவில்லியர்ஸ் பிரமாதம்: கிங்ஸ் லெவனை சற்றே போராடி வென்றது பெங்களூரு

பெங்களூருவில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் 2018, 8வது போட்டியில் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட கிங்ஸ் லெவன் அணி ராகுல் (47) மற்றும் கேப்டன் அஸ்வின் (33) ஆகியோரது பங்களிப்பினால் 155 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. உமேஷ் யாதவ் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைக் காலி செய்தார். கேஜ்ரோலியா, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து ஆடிய பெங்களூரு அணி போராடியே வென்றது. கடைசி ஓவரில் வாஷிங்டன் சுந்தர் பவுண்டரியில் 159/6 என்று 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று முதல் புள்ளிகளைப் பெற்றது. ஆட்ட நாயகன் உமேஷ் யாதவ்.

இந்திய பிட்ச்களின் தன்மைக்கு ஏற்ப முதல் ஓவரே அக்சர் படேல்தான் வீசினார், மறுமுனையில் அஸ்வின் வந்து விட்டார். பிஷன் சிங் பேடி கால நிலைமையை சிந்திக்க வைத்தது இந்த ஸ்பின் தொடக்கம். பிஷன் பேடியாவது பெயருக்கு மதன்லால் 2ஓவர், மொஹீந்தர் அமர்நாத் 2 ஓவர் என்று கொடுப்பார்.

ஆனால் அஸ்வினின் முடிவுக்கு பலன் இருந்தது அதிரடி மன்னன் மெக்கல்லம் 2வது பந்திலேயே அக்சர் படேலின் ஷார்ட் பிட்ச் பந்தை பேகவர்ட் பாயிண்டில் கேட்ச் கொடுத்தார், 17 வயது ஆப்கன் ஸ்பின்னர் முஜிபுர் கேட்ச் எடுத்தார்.

விராட் கோலியை அதிர்ச்சியடையச் செய்த 17 வயது முஜிபுர் ரஹ்மான்:

மெக்கல்லம் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் விராட் கோலி இறங்கினார், விக்கெட் எடுத்த ஓவரில் சிக்கனமாக வீச முடியாத அக்சர் படேல், விராட் கோலிக்கும், பிறகு டிக்காக்குக்கும் இரண்டு பவுண்டரிகளை வழங்கி முதல் ஓவரில் 10 ரன்களை  விட்டுக் கொடுத்தார்.

பிறகு அஸ்வினை கீப்பர் பின்னால் ஒரு பவுண்டரி அடித்தார் விராட் கோலி.

3வது ஓவரை ஆப்கான் இளம் லெக் ஸ்பின்னர் முஜீபுர் ரஹ்மான் வீசினார். கோலி, டிகாக் இருவருக்கும் வீசினாலும் அந்த ஓவரில் 3 ரன்களையே விட்டுக் கொடுத்தார் முஜீப்.

வேகப்பந்து வீச்சாளர் டை வந்தவுடனேயே மந்தமான இந்தப் பிட்சில் விராட் கோலி அவரை லாங் லெக்கில் புல்ஷாட் பவுண்டரியுடன் வரவேற்றார், பிறகு ஒரு ராஜ கவர் டிரைவ் பவுண்டரி என்று 13 பந்துகளில் அனாயசமாக 21 ரன்கள் வந்தார் விராட் கோலி.

அடுத்த ஓவரில்தான் விராட் கோலிக்கு முஜீபிடமிருந்து அதிர்ச்சி காத்திருந்தது. 5வது பந்து முஜீபின் அருமையான கூக்ளியாக பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆகி கடுமையாகத் திரும்பி கோலியின் மட்டை, கால்காப்பு இடைவெளியில் புகுந்து ஸ்டம்புகளை தொந்தரவு செய்தது. கோலி டிரைவ் ஆட முயன்றார். மிக அருமையான பந்து வீச்சு, கோலி அதிர்ச்சியடைந்தார்.

டிவில்லியர்ஸ் அதிரடி:

கோலி ஆட்டமிழந்தவுடன் டிவில்லியர்ஸ் புகுந்தார். மோஹித் சர்மாவின் ஒரே ஓவரில் 16 ரன்கள் விளாசினார், டிவில்லியர்ஸுகெல்லாம் மோஹித் சர்மா வீச முடியுமா? அதுவும் முதல் பந்தே ஷார்ட் பிட்ச் பின்னால் சென்று மிட்விக்கெட்டில் முறையாக சிக்ஸருக்கு அனுப்பினார். பிறகு பைன் லெக்கை முன்னால் வைத்துக் கொண்டு இடுப்புயர லெக் திசை ஸ்லோ பந்தை வீசினார் மோஹித் சர்மா கிளீனாக அதே திசையில் பவுண்டரி. கடைசி பந்து உண்மையில் ஈ  அடிப்பது போன்று கவர் திசையில் பவுண்டரி விளாசினார் டிவில்லியர்ஸ்.

அக்சர் படேல் ஓவரில் குவிண்டன் டிகாக் பிளம்பாக வாங்கினார், நாட் அவுட் என்றார் களநடுவர் அஸ்வின் ரிவியூ செய்தார் பலனில்லை அம்பயர் தீர்ப்பு என்று வந்தது, சூப்பர்ஸ்டார் அணிகள் ஆடும்போது நடுவர்களை கவனிக்க வேண்டுமென்று கூறுவதற்கு இன்னொரு சாட்சியம் இது. அதன் பிறகு டி காக் அஸ்வினை இறங்கி வந்து நேராக ராஜ சிக்ஸ் அடித்தார் பிறகு ஒரு ஸ்வீப் பவுண்டரி. அஸ்வின் 3-0-29-0.

அஸ்வினின் திருப்புமுனை 12வது ஓவரும் டிவில்லியர்ஸ் அபாரமும்

குவிண்டன் டி காக் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்திருந்த போது 12வது ஓவரை அஸ்வின் ரவுண்ட் த விக்கெட்டிலிருந்து ஒரு பந்தை ஸ்டம்புக்குள் செலுத்தினார். டி காக் இறங்கி வந்து ஆடினார் சிக்கவில்லை பவுல்டு ஆனார்.

அடுத்த பந்திலேயே சர்பராஸ் கானுக்கு அஸ்வின் வீசிய பந்து டூ மச். ஸ்லிப்பை நிறுத்தி அபாரமான கேப்டன்சி செய்தார் அஸ்வின், ஸ்லிப்பை நிறுத்தி தன் புதிய ஆயுதமான லெக் பிரேக்கை வீசினார், உள்ளே காற்றில் வந்து பிட்ச் ஆகி வெளியே ஸ்பின் ஆனது சர்பராஸ் ஸ்லிப்பில் நாயரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இது திருப்பு முனையாக ஆர்சிபி அணி 12 ஓவர்களில் 88/4 என்று கொஞ்சம் தடுமாறியது. ஆனால் டிவில்லியர்ஸ் 19 ரன்கலில் இருந்தார். இடையில் டிவில்லியர்ஸ் மோஹித் சர்மாவை செய்த ஸ்லாக் ஸ்வீப் பவுண்டரிதான் வர 17வது ஓவரில் முஜீப் உர் ரஹ்மான், டிவில்லியர்ஸுக்கு வீச நேரிட்டது, முதலில் மந்தீப் சிங் புல் ஷாட்டில் பவுண்டரி அடித்து பிறகு சிங்கிள் எடுத்து டிவில்லியர்ஸிடம் ஸ்ட்ரைக் கொடுக்க ஃபுல் பந்தை சும்மா ஸ்லைஸ் செய்தார் ஏபிடி அதுவே லாங் ஆஃபில் சிக்ஸ் ஆனது. அடுத்ததாக ஒரு புல்ஷாட்டையும் சிக்ஸாக மாற்றினார் டிவில்லியர்ஸ்.

முஜீப் 3 ஓவர்களில் 10 ரன்களையே கொடுத்திருந்தவர் கடைசி ஓவரில் 19 ரன்களைக் கொடுத்து 4-029-1 என்று முடிந்தார், ஆனாலும் இவரால் கோலியின் விக்கெட்டை மறக்க முடியாது.

மோஹித் சர்மா அடுத்த ஓவரில் வர 2வது பந்து ஸ்லோயர் ஒன்னாக அமைய காத்திருந்து ஒரே தூக்குத் தூக்கினார் ஏபிடி லாங் ஆனில் சிக்ஸ். இதுவே டிவில்லியர்ஸின் அரைசதமானது. சமன்பாடு 12 பந்துகளில் 10 என்று ஆனது. 19வது ஓவரின் முதல் பந்தில் அப்பர் கட் செய்து டீப்பில் கருண் நாயரிடம் கேட்ச் ஆனார் டிவில்லியர்ஸ். இவர் 40 பந்துகளில் 2 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 57 ரன்கள் என்ற அபார இன்னிங்ஸை ஆடி வெளியேறினார்.

மந்தீப் சிங் 19வது ஓவரின் 4வது பந்தில் 2 வது ரன் ஓட முயற்சித்து துல்லிய த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். இருவரும் அவுட் ஆக கிரீசில் இரண்டு புதிய வீர்ர்கள், கடைசி ஓவர் 5 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போதுதான் மோஹித் சர்மா ஷார்ட் பிட்ச் பந்தை வாகாக வீச வாஷிங்டன் சுந்தர் தேர்ட்மேனில் பவுண்டரிக்குத் தூக்கி விட்டார். கடைசியில் பீல்டர்கள் முன்னால் வர கவர் டிரைவ் பவுண்டரியில் வாஷிங்டன் சுந்தர் வெற்றி பெற்றுத் தந்தார். மோஹித் சர்மாவைத் தவிர அனைவரும் அருமையாக வீசினர், மோஹித் 3.3 ஓவர்களில் 45 ரன்கள். ஆட்ட நாயகன்  உமேஷ் யாதவ்

முன்னதாக...

யுவராஜ் சிங் மிடில் ஸ்டம்ப் பெயர்ந்தது: ஒரே ஓவரில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகள்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார் பெங்களூரு கேப்டன் விராட் கோலி.

இதில் 3 ஓவர்களில் 32/0 என்று கிங்ஸ் லெவன் அதிரடி காட்டிக் கொண்டிருந்தது.

அப்போது தன் 2வது ஓவரை வீசினார் உமேஷ் யாதவ். இன்னிங்சின் 4வது ஓவர்

முதலில் மயங்க் அகர்வால் (15) உமேஷ் யாதவ் பந்தை டிரைவ் ஆடச் செல்ல பந்து மட்டையின் விளிம்பில் பட்டு டி காக்கிற்கு வலது புறம் செல்ல டைவ் அடித்து அற்புதமான கேட்சைப் பிடித்தார்.

அடுத்த பந்தே ஆஸ்திரேலிய அதிரடி வீர்ர் ஏரோன் பிஞ்ச் இன்ஸ்விங்கரை கால் காப்பில் வாங்க நடுவர் கையை உயர்த்தினார், ஆனால் பிஞ்ச் அதனை ரிவியூ செய்தார். நடுவர் தீர்ப்பு இறுதி செய்யப்பட்டது, பிஞ்ச் டக் அவுட் ஆனார்.

யுவராஜ் சிங் இறங்கி ஹாட்ரிக் வாய்ப்பைத் தடுத்தார். 4வது பந்தையும் யுவராஜ் தடுத்தாடினார்.

அடுத்த பந்து மார்புயர ஷார்ட் பிட்ச் பந்து புல் ஆடினார், சரியாகச் சிக்கவில்லை, பீல்டர் பவுண்டரியில் நின்றிருந்தால் கேட்ச் ஆகியிருக்கும் ஆனால் அவர் முன்னே வந்ததால் பந்து பின்னால் சென்று பவுண்டரி ஆனது. மீண்டும் ரவுண்ட் த விக்கெட்டில் ஒரு பந்தை வேகமாக வீச வேகத்துக்கு ஈடுகொடுக்காமல் யுவராஜ் சிங் பவுல்டு ஆனார். மிடில் ஸ்டம்ப் பெயர்ந்தது. உமேஷ் இந்த விக்கெட்டை கொஞ்சம் ஆக்ரோஷமாகக் கொண்டாடினார்.

ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகள். 32/0 என்று தொடங்கிய கிங்ஸ் லெவன் 36/3 என்று சரிந்தது. உமேஷ் யாதவ் 3 ஓவர்கள் 15 ரன்கள் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

ஆனால் ராகுல்  (47), கருண் நாயர் (29) இணைந்து 7 ஓவர்களில் 58 ரன்கள் குவித்தனர். ஸ்டாய்னிஸை 11 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் ஸ்டம்ப்டு முறையில் வீழ்த்தியது முக்கியமானது. அஸ்வின் அருமையாக ஆடி 21 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 33 ரன்கள் எடுத்து முக்கியப் பங்களிப்புச் செய்தார்.

வாஷிங்டன் சுந்தர் 22 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிங்ஸ் லெவன் 155 ஆல் அவுட்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x