

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தடகளப் பிரிவில் வட்டு எறிதல் வீரர் விகாஸ் கௌடா மூலம் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
வியாழக்கிழமை இரவு பெய்த இடைவிடாத மழைக்கு இடையே ஆடவர் வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. தொடர் மழை காரணமாக வீரர்களுக்கு சரியாக பிடி கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் வெகுதூரம் வட்டு எறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
எனினும் விடாப்பிடியாக போராடிய இந்தியாவின் விகாஸ் கௌடா தனது 3-வது முயற்சியில் 63.64 மீ. தூரம் வட்டு எறிந்ததன் மூலம் தங்கத்தை உறுதி செய்தார். கடந்த காமன்வெல்த் போட்டியில் கௌடா வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. சைப்ரஸின் அப்போஸ்டோலோஸ் பேரலிஸ் (63.32 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும், ஜமைக்காவின் ஜேசன் மோர்கன் (62.34 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். கடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஆஸ்திரேலிய வீரர் பென் ஹெராடின் 61.91 மீ. தூரம் வட்டு எறிந்து 4-வது இடத்தையே பிடித்தார்.
தங்கப் பதக்கம் வென்றது குறித்துப் பேசிய கௌடா, “நான் போட்டியில் பங்கேற்பதற்காக வந்தபோது மழை பெய்வதைப் பார்த்தேன். இது நிச்சயம் மற்ற வீரர்களுக்கு இடையூறாக அமையும் என தெரியும். நான் மழையிலும், பனியிலும் மட்டுமின்றி, ஈரமான வட்டுடனும் பயிற்சி பெற்றிருந்தேன். அதனால் தொடர் மழையால் எனக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இப்போது தங்கம் வென்ற மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இப்போது ஏற்பட்டுள்ள மகிழ்ச்சி இந்த ஆண்டு முழுவதும் எனக்குள் இருக்கும். கடந்த முறை வெள்ளிப் பதக்கம்வென்ற நான், இந்த முறை தங்கம் வெல்ல வேண்டும் என விரும்பினேன். அது நடந்துவிட்டதால் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதற்காக மிகவும் கடுமையாக உழைத்திருக்கிறேன்” என்றார்.