

சென்னை: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்த காரணத்தால் ஆட்டமிழந்தார். மூன்றாவது நடுவரின் பரிசீலனையில் அவர் அவுட் கொடுக்கப்பட்டார். அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் சிஎஸ்கே அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்தது.
“நான் அதை ஆட்டத்தின்போது பார்த்திருந்தேன். அதனை மிகவும் க்ளோஸாக நான் பார்க்கவில்லை. அவர் ரன் எடுக்க முயன்று திரும்பியிருந்தார். அதனால், அவர் ஆங்கிள் மாறி இருக்கலாம். ஆனால், ஆங்கிளை மாற்ற வேண்டுமென அவர் முயற்சிக்கவில்லை. இதை நான் இரண்டு பக்கமும் பார்க்கிறேன். அவர் எங்கிருந்து திரும்பி செல்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். நடுவர் அவுட் கொடுத்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. திசையை மாற்றி ஓடக் கூடாது என்றுதான் விதியும் சொல்கிறது. அதனால் அது சரியான தீர்ப்பாக கூட இருக்கலாம். ஆனால், நான் அதில் உறுதியாக இல்லை” என்று தெரிவித்தார்.
என்ன நடந்தது? - சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இடையிலான போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ராஜஸ்தான் வீரர் அவேஷ் கான் வீசிய 16-வது ஓவரின் 5-வது பந்தில் 2-வது ரன் ஓடும் முயற்சியில் ஈடுபட்ட போது எதிர்முனையில் இருந்த ஜடேஜா பாதி தூரம் வந்த நிலையில் மீண்டும் திரும்பி தனது இடத்துக்கு ஓடினார்.
அப்போது ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் ஸ்டெம்பை நோக்கி பந்தை எறிந்த போது ஜடேஜா மீது பட்டது. இதனால் ஜடேஜா ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக ராஜஸ்தான் அணி தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதை ஆய்வு செய்த 3-வது நடுவர், ஃபீல்டிங்குக்கு இடையூறு செய்ததாக ஜடேஜாவுக்கு அவுட் வழங்கினார். ஐபிஎல் வரலாற்றில் இதுபோன்று நிகழ்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 2013-ல் யூசுப் பதான், 2019-ல் அமித் மிஷ்ரா ஆகியோரும் இதேபோன்று ஆட்டமிழந்துள்ளனர்.
இதே சீசனில் இதே போல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக பேட் செய்த போது ஜடேஜா செயல்பட்டிருந்தார். அப்போது அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் நடுவரிடம் முறையிடவில்லை.