Published : 21 Apr 2018 12:54 AM
Last Updated : 21 Apr 2018 12:54 AM

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிர் விளம்பரமா ராஜஸ்தான் ராயல்ஸ்? சவாலற்ற போட்டியில் வாட்சன் சதத்துடன் வென்று சென்னை முதலிடம்

அன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் எந்த ஒரு தீவிரமும், முனைப்பும் இன்றி அறுவையாக ஆடித் தோற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராகவும் படுமோசமாக விளையாடி தோல்வி தழுவ சென்னை சூப்பர் கிங்ஸ் 6 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது.

இன்றைய போட்டியில் ஒரு அணிதான் தீவிரத்துடனும், விறுவிறுப்புடனும் குறிக்கோளுடனும் ஆடியது, அது சென்னை சூப்பர் கிங்ஸ்தான். முதலில் பேட் செய்து 204/5 என்று சென்னை ரன் குவிக்க தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் படுமோசமான சொத்தை பேட்டிங்கில் 140 ரன்களுக்குச் சுருண்டது.

சென்னை ஒன்றுமேயில்லாத, சவாலற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு வழியில்லை, ஆனால் தமிழ் வர்ணனையாளர்கள் கூறியதுதான் ‘பயங்கரம்’. ‘சென்னைக்கு ஒரு எக்ஸ்ட்ராடினரி விக்டரி’, எக்சலண்ட், எக்சலண்ட், எக்சலண்ட் என்று இப்படி விதந்தோதுவதற்கு இந்தப் போட்டியில் சரியான எந்த ஒரு சவாலையும் சென்னை அணி எதிர்கொள்ளவில்லை, இலக்கு 200 ரன்களுக்கும் மேல் என்பதால் அல்ல இலக்கு 150 ஆக இருந்தாலும் ராஜஸ்தான் இப்படித்தான் ஆடியிருக்கப் போகிறது. ஏனெனில் எக்சலண்ட், பெஸ்ட், எக்ஸ்ட்ராடினரி போன்ற உயர்வு நவிற்சியெல்லாம் அதற்கு நிகரான எதிரிடை இருந்தால்தான் சரியாக இருக்கும், ஒன்றுக்கும் இன்னொன்றுக்கும் சரிசம அளவான போட்டி இருக்கும் போது ஒன்று சிறப்பாக ஆடியது என்று கூறலாம் ஒரு அணி ஒன்றுமேயில்லை, ஒரு அணி வெல்கிறது என்ற ஒருதலைபட்ச ஆட்டத்தில் எக்ஸ்ட்ராடினரி, எக்சலண்ட் என்ற உயர்வு நவிற்சிகள் அர்த்தமற்றவை.

இதில் டாஸ் வென்று சென்னையை பேட் செய்ய அழைத்ததன் ரகசியம்தான் என்னவென்று புரியவில்லை, இத்தனைக்கும் 40 ஓவர்களுக்கும் நல்ல பிட்ச்தான் இது என்று டாஸ் முடித்துக் கூறிய ரஹானே ஏன் சென்னையை பேட் செய்ய அழைக்க வேண்டும்? இலக்கை விரட்டுவதில் நெருக்கமாக வந்து வென்றுள்ள சென்னை, கிங்ஸ் லெவன் அணிக்கு எதிராக தோற்றுப் போனது. அப்படியிருக்கையில் முதலில் பேட் தான் செய்திருக்க வேண்டும்.

சரி பவுலிங்கைத் தேர்வு செய்தாகி விட்டது. பவுலிங் எப்படி வீச வேண்டும், முழுத் தீவிரத்தையும் காட்ட வேண்டாமா? படுசொத்தையாக வீசியதில் வாட்சன் புகுந்து 51 பந்துகளில் அதிரடி சதம் கண்டார், சுரேஷ் ரெய்னா காயத்திலிருந்து வந்தவர் அவருக்கு நெஞ்சுயர பவுன்சரை வீசினால் அவ்வளவுதான் கொஞ்ச நேரத்தில் கையில் கொடுத்து விட்டு போயிருப்பார். ஆனால் வாட்சனுக்கும், ரெய்னாவுக்கும் மாறி மாறி கேட்டுக் கேட்டு போட்டுத் தந்தனர் ராஜஸ்தான் ராயல்ஸ்.

சிறப்பு ரயிலில் தல தோனியையும், சென்னை வெற்றியையும் பார்க்க வந்த ரசிகர்களுக்கு சென்னையின் எளிதான வெற்றி, அதிரடி பேட்டிங், பவுலிங், என்பதை ரசித்திருப்பார்கள், ஆனால் இன்னும் சவாலாக இருந்திருந்தால் இவ்வளவுதூரம் அங்கு போய் பார்த்திருப்பதற்கு ஒரு நல்ல கிரிக்கெட் விருந்தாகக் கிடைத்திருக்கும். ராஜஸ்தான் இதற்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை.

ஷேன் வாட்சனுக்கு உள்ளூர் வீரர் திரிப்பாதி விட்ட கேட்சும் வாட்சனின் சதமும்

முதல் ஓவரிலேயே ஸ்லிப்பில் ரெகுலராக வரும் கேட்ச்தான் விட்டார் திரிப்பாதி, தன் சொந்த மண்ணில் பீல்டிங்கிலும் சொதப்பி, பேட்டிங்கிலும் காணாமல் போனார். லாஃப்லின் வீசிய கட் செய்வதற்கு வாகில்லாத பந்தை கட் செய்ய முயன்று அம்பாத்தி ராயுடு 12 ரன்களில் வெளியேற, ரெய்னா, வாட்சன் ஜோடி சேர்ந்தனர்.

ரெய்னா சமீப காலங்களில் ஆடிவரும் ‘சுதந்திர வெளிப்பாடு மனோபாவத்துடன்’ (careless abandonment)ஆடினார். ராஜஸ்தான் ராயல்ஸ் நன்றாகப் போட்டுக் கொடுத்தது. கே.கவுதம், குறிப்பாக ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரை வலைவீச்சாளர்கள் போல் சாத்தினார் வாட்சன், கவுதம் 13 பந்துகளில் 31 ரன்கள் வாட்சனால் விளாசப்பட்டார். இதில் 3 சிக்சர்கள் ஒரு பவுண்டரி அடங்கும். ஸ்டூவர்ட் பின்னியின் ஒரு ஓவரில் போனால் போகிறது என்று 3 பவுண்டரிகளுடன் நிறுத்திக் கொண்டார் வாட்சன்.

குறுக்குசால் மட்டை போட்டார் வாட்சன் அதற்கு வாகாக ராஜஸ்தான் பந்து வீச்சு அமைந்தது. லெக் திசையில் மட்டும் அவர் பாதிக்கும் மேலான ரன்களைக் குவித்திருப்பார். தன் 28வது பந்தில் ஸ்லாக் ஸ்வீப்பில் வாட்சன் அரைசதம் கடந்தார். அடுத்த அரைசதம் 23 பந்துகளில் வந்தது, கெய்லை விடவும் விரைவாக சதம் எடுத்தார் வாட்சன், ஆனால் கெய்ல் ஆட்டத்தைப் பார்க்கும் போது உள்ள பிரமிப்பு இவரிடம் இல்லை, காரணம் அங்கு சன் ரைசர்ஸ் பவுலிங் அப்படி. 57 பந்துகளில் 107 ரன்கள், இதில் 9 பவுண்டரிகள் 6 சிக்சர்கள், முடிவில் கொஞ்சம் மந்தமடைந்தார் ஆனால் அது பாதிக்கவில்லை.

சுரேஷ் ரெய்னா 29 பந்துகளில் 9 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் அடித்தார். முதல் 15 ஒவர்கள் வரையிலும் 10-11 ரன்கள் என்று ரன் விகிதம் வைத்திருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு கட்டத்தில் 220-225 ரன்கள் வரை போகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஷ்ரேயஸ் கோபால் தன் ஸ்பின் மூலம் 4 ஓவர்களில் வெறும் 2 பவுண்டரிகளையே கொடுத்து 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் முக்கிய விக்கெட்டுகளான ரெய்னா, தோனி (5) ஆகியோர் விக்கெட்டுகளும் அடங்கும். பிறகு சாம் பிலிங்ஸ் விக்கெட்டையும் கோபால் சாய்த்தார். இதனால்தான் கடைசி 7 ஓவர்களில் 54 ரன்கள் மட்டும் வந்தது. ஷ்ரேயஸ் கோபால் இந்தத் தொடரில் விராட் கோலி, டிவில்லியர்ஸ், ரெய்னா, தோனி ஆகியோரை வீழ்த்தி அசத்தியுள்ளார். உனாட்கட் மறுபடியும் வேஸ்ட், அவர் இதுவரையிலான போட்டிகளில் மொத்தம் 6-7 பந்துகளையே ஸ்டம்பில் வீசியுள்ளார். இன்றும் 4 ஓவர்களில் 39 ரன்கள். சென்னை அணி 204/5 என்ற ஸ்கோரை எட்ட சிரமம் எதுவும் படவில்லை. தொடக்கத்திலிருந்தே ரன் விகிதம் ஓவருக்கு 10-11 என்றே வந்து கொண்டிருந்தது.

ரஹானேவின் மோசமான கேப்டன்சி பேட்டிங் வரிசையிலும் பளிச்

ராகுல் திரிப்பாதி கடந்த ஐபிஎல் போட்டிகளில் தொடக்கத்தில் இறங்கி பவர் பிளேயில் கன்னாபின்னாவென்று ரன்களைக் குவித்தவர், ஆனால் அவரைப் பிடிவாதமாக இத்தனை போட்டிகளாக நடுவரிசையில் களமிறக்கி வருகிறார்.

ஹெய்ன்ரிச் கிளாசன் ஒரு நடுவரிசை வீரர் அவரைப்போய் தொடக்கத்தில் இறக்கினார். வாட்சன் தனக்கு கேட்ச் விட்ட தன் முந்தைய அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக கிளாசனுக்கு ஒரு கேட்சை விட்டார். ஆனாலும் அவர் அதனைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை, மந்தமான பிட்ச் அவரது கால்நகர்த்தல்களில் பிரதிபலித்து ஷர்துல் தாக்கூர் பந்தில் மிடில் ஸ்டம்பை இழந்தார். சஞ்சு சாம்சனை அன்று மாவி ஷார்ட் பிட்சில் வீழ்த்தினார் இன்று தீபக் சாஹர் ஷார்ட் பிட்ச் பந்தில் 2 ரன்களில் சஞ்சு சாம்சனை வெளியேற்றினார்.

16 ரன்கள் எடுத்த ரஹானே அசிங்கமான ஒரு ஷாட்டில் சாஹரிடம் பவுல்டு ஆக ராஜஸ்தான் அணி 33/3 என்று ஆனது.

பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் இணைந்தனர் இம்ரான் தாஹிரை அடித்த ஒரு சிக்ஸ் தவிர பட்லருக்கு எதுவும் சரியாக மாட்டவில்லை அவர் பிராவோவிடம் 22 ரன்களுக்கு வீழ்ந்தார். ஸ்டோக்சுக்கும் ஒன்றும் மாட்டவில்லை. 45 ரன்களில் அவரும் வெளியேற ராஜஸ்தான் பேட்டிங் அவர்கள் பந்து வீச்சைப் போல் பிசுபிசுத்தது. ஆட்ட நாயகன் ஷேன் வாட்சன்.

சென்னை அணியில் சாஹர், தாக்குர், பிராவோ, கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வாட்சன் இம்ரான் தாஹிர் தலா 1 விக்கெட்டைக் கைப்பற்றினர், இந்த சொத்தை பேட்டிங்கிலும் இம்ரான் தாஹிர் 4 ஓவர்களில் 44 ரன்கள் கொடுத்ததை தோனி நிச்சயம் குறித்துக் கொண்டிருப்பார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் இனியும் இப்படியாடினால் ஐபிஎல் தொலைக்காட்சி ரேட்டிங் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆடும்போது கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x