Last Updated : 12 Apr, 2018 12:26 PM

 

Published : 12 Apr 2018 12:26 PM
Last Updated : 12 Apr 2018 12:26 PM

‘‘ஐ மிஸ் யு சென்னை’’ - சுரேஷ் ரெய்னா உருக்கமான ட்வீட்

காவிரி மேலாண்மை அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்துவருவதால், சென்னையில் நடக்க இருக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

காவிரி நதிதீர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித்தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தினால், இளைஞர்கள் திசைதிரும்பிவிடக்கூடும் ஆதலால், ஐபிஎல் போட்டிகளை சென்னையில் நடத்தகூடாது என்று பல்வேறு அமைப்பினரும், அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த எதிர்ப்பையும் மீறி முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி பலத்த போலீஸ்பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. ஆனாலும், ரசிகர்களின் போர்வையில் நுழைந்த சில போராட்டக்காரர்கள், மைதானத்தில் ரவிந்திர ஜடேஜா மீது செருப்பு வீசினார்கள். இதனால், சிறிதுநேரம் ஆட்டம் தடைபட்டது.

மேலும், சென்னையில் நடக்கும் போட்டிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பது இயலாது என்று சென்னை போலீஸார் ஐபிஎல் நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டனர். இதனால், சென்னையில் அடுத்தும் நடக்கும் ஐபிஎல் போட்டிகள் அனைத்தையும், புனைவுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

சூதாட்ட புகார் தொடர்பாக கடந்த 2 ஆண்டுகள் தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு விளையாட வந்துள்ளது. இதனால், சிஎஸ்கே அணியின் ஒவ்வொரு போட்டிகளையும் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். இந்நிலையில் போட்டி புனேவுக்கு மாற்றப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

சென்னையில் புனேவுக்கு போட்டிகள் மாற்றப்பட்டதற்கு வேதனை தெரிவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் சுரேஷ் ரெய்னா ட்விட்டரில் உருக்கமாக கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எங்களுடைய சொந்த மண்ணில் விளையாடுவதை இந்த ஆண்டும் இழந்துவிட்டோம். சென்னை ரசிகர்களையும், சிஎஸ்கே ரசிகர்களையும் இந்த ஆண்டும் மகிழ்விக்க முடியவில்லை. நாங்கள் சென்னையை விட்டு வெளிமாநிலம் சென்று விளையாடினாலும், சென்னை ரசிகர்களும், சிஎஸ்கே ரசிகர்களும் எங்கள் மனதில் எப்போதும் நிலையாக இருப்பீர்கள். வருத்தத்துடன் புனே செல்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x