

கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
2 முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 3 தோல்விகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதை உறுதி செய்துவிடும். தொடக்கவீரர்களான சுனில் நரேன், பில் சால்ட் ஆகியோர் பவர்பிளே ஓவரில் தாக்குதல் ஆட்டம்மேற்கொள்வது பெரிய பலமாக உள்ளது.
இந்த சீசனில் இந்த ஜோடியின் அதிரடியால் கொல்கத்தா அணி முதலில் பேட் செய்த 8 ஆட்டங்களில் 6-ல் 200-க்கும் அதிகமான ரன்களை வேட்டையாடி உள்ளது. 32 சிக்ஸர்களுடன் இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசி உள்ளவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சுனில் நரேன்ஒரு சதம், 3 அரை சதங்களுடன் 183.66 ஸ்டிரைக் ரேட்டுடன் 461 ரன்களை குவித்துள்ளார். அதேவேளையில் பில் சால்ட் 183.33ஸ்டிரைக் ரேட்டுடன் 429 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த ஜோடியிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
சுனில் நரேன், பில் சால்ட் ஆகியோரது தாக்குதல் ஆட்டத்தால் ஆந்த்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங் ஆகியோருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் வாய்ப்பு கிடைக்கப்பெற்ற ஒரு சிலஆட்டங்களில் அதனை அவர்கள் சரியாகவும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனினும் இவர்கள் எந்த சூழ்நிலையிலும் ஆட்டத்தின் தன்மையை மாற்றும் திறன் கொண்டவர்களாக அறியப்படுகிறார்கள். அங்கிரிஷ் ரகுவன்ஷி, ரமன்தீப் சிங் ஆகியோரும் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஸ்ரேயஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் மேலும் அதிகரிக்கும்.
பந்து வீச்சை பொறுத்தவரையில் மிட்செல் ஸ்டார்க் பார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு பலம் சேர்த்துள்ளது. வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, வைபவ் அரோராஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். இவர்களுடன் சுனில் நரேன், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோரும் பந்து வீச்சில் கைகொடுப்பது கூடுதல் பலமாக கருதப்படுகிறது. இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு சொந்த மைதானத்தில் இது கடைசி லீக் ஆட்டம் ஆகும். இதனால் அந்த அணி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும்.
5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது. அந்த அணி 12 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 8 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 56 பந்துகளில் 102 ரன்களை விளாசியிருந்தார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.
கடந்த 5 ஆட்டங்களில் 4-ல் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்த ரோஹித் சர்மா பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். இதேபோன்று தடுமாறி வரும் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளார். இந்த சீசனில் அவர், கடைசி 6 ஆட்டங்களில் 10 ரன்களை கடக்கவில்லை. ஒட்டுமொத்தமாக அவர், 12 ஆட்டங்களில் 198 ரன்களே எடுத்துள்ளார். இதில் அதிகபட்சம் 46 ரன்கள் ஆகும்.