Published : 11 May 2024 06:00 AM
Last Updated : 11 May 2024 06:00 AM

இம்பாக்ட் பிளேயர் விதி நிரந்தரமானது இல்லை - சொல்கிறார் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா

மும்பை: ஐபிஎல் தொடரில் நடப்பு சீசனில் இம்பாக்ட்பிளேயர் விதி முறையால் 250 ரன்களை எட்டுவது என்பது எளிதாக நடைபெறும் விஷயமாக மாறி உள்ளது. இந்த சீசனில் மட்டும் 8 முறை 250 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இம்பாக்ட் பிளேயர் விதியால் பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களை வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் இந்த விதியானது அணிகளை நீண்ட பேட்டிங் வரிசையை வைத்திருக்கவும் அனுமதிக்கிறது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த விதிமுறையால் ஆல்ரவுண்டர்களுக்கு பந்து வீசுவதற்கு போதிய வாய்ப்பு கிடைக்காமல் போவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியதாவது: இம்பாக்ட் பிளேயர் விதி சோதனை அடிப்படையில்தான் உள்ளது. இதன் வெளிச்சமான மறுபக்கத்தை பார்த்தால் அது கூடுதலாக இரு இந்திய வீரர்கள் விளையாடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இரு இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது முக்கியம் அல்லவா? விளையாட்டும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறி வருகிறது.

இந்த விதி சரியில்லை என்று இதுவரை யாரும் கூறவில்லை. எனினும் ஐபிஎல் மற்றும் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்த பிறகு இதுதொடர்பாக வீரர்கள், அணிகளின் உரிமையாளர்கள், ஒளிபரப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவோம். இம்பாக்ட் பிளேயர் விதி நிரந்தரமானது இல்லை.

டி 20 உலகக் கோப்பைக்காக இந்திய வீரர்களுக்கு ஏன் ஓய்வு கொடுக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் விளையாடுவது வீரர்களுக்கு சிறந்த பயிற்சி. உலகக் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு இதைவிட சிறந்தது வேறு ஏதும் கிடைக்காது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் உள்ளனர். பந்து வீச்சாளர்களுக்கு நாம் ஓய்வு கொடுத்தால் அவர்கள், டிராவிஸ் ஹெட் போன்ற பேட்ஸ்மேனுக்கு பந்து வீசும் வாய்ப்பை பெற முடியாது. ஜஸ்பிரீத் பும்ரா, டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக தற்போது பந்து வீசுவதால், அவருக்கு எதிராக எங்கே வீச வேண்டும், எப்படி வீச வேண்டும் என்பதை அறிந்துகொள்வார். இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்காது. இவ்வாறு ஜெய் ஷா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x