‘என்னால் 90மீ தூரம் ஈட்டி எறிய முடியும்; ஆனால் கன்சிஸ்டன்ஸி முக்கியம்’ - நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா | கோப்புப்படம்
நீரஜ் சோப்ரா | கோப்புப்படம்
Updated on
1 min read

தோஹா: நடப்பு தோஹா டைமண்ட் லீகில் பங்கேற்க தயாராக உள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை அவர் தக்கவைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் அதுகுறித்து அவர் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுடன் பகிர்ந்து கொண்டார்.

“ஆண்டுக்கு ஐந்து டைமண்ட் லீக் மீட் நடைபெறுகிறது. இதில் வாய்ப்புகள் அதிகம். புதிய சாதனைகள் படைக்கலாம். ஆனால், ஒலிம்பிக் அப்படி அல்ல. நான்கு ஆண்டுகளுக்கு ஒரே ஒரு முறை தான். அதன் காரணமாகவே அதில் அழுத்தம் அதிகம்.

அந்த லெவலில் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்த உங்களது உடல், உள்ளம் என அனைத்தையும் நிர்வகிக்க வேண்டும். அதுவும் அதை அந்த தருணத்தில் சரியாக செய்ய வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த முடிவுகள் வரும். அதனால் தான் வரலாற்றில் சாதனை படைத்த பல வீரர்கள் தடுமாறினர் என நான் கருதுகிறேன். மற்ற இடங்களில் சிறப்பாக செயல்பட்டவர்கள் ஒலிம்பிக்கில் அதை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறியதை நாம் பார்த்துள்ளோம்.

அந்த அனுபவத்தை நானும் டோக்கியோ ஒலிம்பிக்கில் அனுபவித்தேன். அந்தச் சூழல், அந்த தருணத்தின் அழுத்தம் போன்றவை நீங்கள் எங்கு போட்டியிடுகிறீர்கள் என்பதை அறிய செய்யும். அது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால், அது சாத்தியமற்றதும் அல்ல.

டைமண்ட் லீகிற்கு நான் சிறந்த முறையில் தயாராகி உள்ளேன். நான் 88 - 90 மீட்டர் மார்க்கில் உள்ளேன். அதனை தகர்க்க விரும்புகிறேன். எனது கவனம் முழுவதும் ஆரோக்கியத்தில் உள்ளது. அதுதான் எனது பலம் மற்றும் சிறந்த அஸ்திரமும் கூட. என்னால் 90 மீட்டர் தூரம் ஈட்டியை எறிய முடியும் என்பதை நான் அறிவேன். ஆனால், கன்சிஸ்டன்ஸி மிகவும் முக்கியம்.

பயிற்சியின் போது மனதளவில் நமது இலக்கு சார்ந்த தெளிவும் மிகவும் அவசியம். நான் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளேன். குறைந்தபட்சம் எனது அறிமுகம் எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் வரை அப்படித்தான் களத்தில் இருக்கும். அதை சரியாக கையாள வேண்டிய கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in