Published : 06 Apr 2014 09:35 AM
Last Updated : 06 Apr 2014 09:35 AM

டி20 உலகக் கோப்பை யாருக்கு?: இந்தியா - இலங்கை இன்று மோதல்

இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்போட்டியில் இந்தியா வென்றால் இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் அணி என்ற பெருமையைப் பெறும். முன்னதாக 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் இருபது ஓவர் உலகக் கோப்பையில் தோனி தலைமையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இப்போதுதான் இந்திய அணி மீண்டும் 2-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியுள்ளது.

அதே நேரத்தில் ஏற்கெனவே இருமுறை இறுதி ஆட்டத்துக்கு முன்னேறி கோப்பையைக் கோட்டைவிட்ட இலங்கை அணி. இப்போது 3-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. எனவே வெற்றிக்காக அந்த அணி வீரர்கள் கடுமையாகப் போராடுவார்கள். இந்தியாவுக்கு இப்போட்டி சவால் நிறைந்ததாகவே இருக்கும்.

இப்போட்டியில் இதுவரை இந்திய அணி பங்கேற்ற அனைத்து 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, தோல்வியையே அடையாத அணி என்ற பெருமையுடன் இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணி 5 ஆட்டங்களில் ஒன்றில் தோல்வியடைந்துள்ளது.

எப்போதுமே பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ள இந்திய அணியில், இப்போது கோலி, ரெய்னா, ரோஹித் சர்மா, ரஹானே, யுவராஜ் சிங், தோனி அன அனைத்து முன்னணி பேட்ஸ்மேன்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக விராட் கோலி ஒவ்வொரு ஆட்டத்திலும் எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு பெரும் சவால் விடுத்து வருகிறார்.

அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா எடுத்த 172 ரன்களை இந்தியா விரட்டிப் பிடிப்பதில் கோலி முக்கியப் பங்கு வகித்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் இதில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். எனவே பேட்டிங்கில் இந்திய அணி வலுவாகவே உள்ளது.

லீக் ஆட்டங்களுடன் ஒப்பிடும்போது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை.

எனவே இலங்கை பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் நெருக்கடி அளிக்க முடியாது என்றே தெரிகிறது. மேலும் இலங்கை பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு விளையாடுவார்கள் என்பதால், இந்திய பந்து வீச்சாளர்கள் முழுத் திறமையையும் வெளிப்படுத்தினால் மட்டுமே இலங்கை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியும்.

லீக் ஆட்டங்களில் எடுபட்ட அமீத் மிஸ்ராவின் பந்து வீச்சு, தென்னாப்பிரிக்க வீரர்களிடம் எடுபடவில்லை. அஸ்வின் மட்டுமே தென்னாப் பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வேகப்பந்து வீச்சில் புவனேஷ்குமார், மோஹித் சர்மா ஆகியோரது பந்து வீச்சும் எடுபடவில்லை.

பேட்டிங்கில் சரியாக செயல் படாத தொடக்க வீரர் ஷீகர் தவணுக்கு பதிலாக ரஹானே சேர்க்கப்பட்டுள்ளது பலம் சேர்த்துள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சமபலமுடைய அணியாக உள்ளது. மலிங்கா, குலசேகரா, ரங்கணா ஹெராத் என சிறப்பான பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியில் உள்ளனர்.

பேட்டிங்கில் மூத்த வீரர்கள் ஜெயவர்த்தனா, சங்ககரா, தில்ஷான் ஆகியோர் வலு சேர்க்கின்றனர். தனது கடைசி டி20 தொடரில் விளையாடும் ஜெயவர்த்தனா கடந்த 4 போட்டிகளில் 134 ரன்களை எடுத்துள்ளார்.

அதே நேரத்தில் சங்ககாராவின் ஆட்டம் இத்தொடரில் குறிப்பிடும் படியாக இல்லை. எனினும் திசாரா பெரேரா, குசல் பெரேரா, மேத்யூஸ், திரிமனே ஆகியோர் ரன் குவித்து வருகின்றனர்.

தோனியின் அதிர்ஷ்டம்

இந்திய அணியில் கேப்டனாக இருந்தவர்களில் கேப்டன் தோனி அதிர்ஷ்டம் மிக்கவரும் கூட. முக்கியமாக தோனி தலைமையிலான அணி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிவிட்டால் வெற்றி வாய்ப்பு மிகவும் அதிகம் என்பதே கடந்தகால உண்மை. 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் தோனி தலைமையிலான அணி இலங்கை அணியை தோற்கடித்துதான் சாம்பியன் பட்டத்தை வென்றது.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் நூலிழையில் பாகிஸ்தானை வென்று சாம்பியன் ஆனது. கிரிக்கெட் உலகக் கோப்பையை இருமுறை வென்று தந்த கேப்டன்கள் என்ற பெருமை ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங், மேற்கிந்தியத்தீவுகளின் கிளைவ் லாய்ட் ஆகியோருக்கு உண்டு. இந்திய அணி கோப்பையை வென்றால், தோனியும் அப்பட்டியலில் இடம் பிடிப்பார்.

ஆடுகள நிலவரம்

போட்டி நடைபெறும் மிர்பூர் ஷேர் இ பங்ளா மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இது மிகவும் மெதுவான ஆடுகளம். எனவே பந்துகள் மெதுவாகவே எழும்பிச் செல்லும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. மோசமான வானிலை அல்லது மழை காரணமாக போட்டி தடைபட்டால் திங்கள்கிழமை மீண்டும் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா: தோனி (கேப்டன்), ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அஸ்வின், அமீத் மிஸ்ரா, மோஹித் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது சமி, வருண் ஆரோன், ஸ்டுவர்ட் பின்னி.

இலங்கை: சண்டிமால் (கேப்டன்), தில்ஷான், கே.பெரைரா, ஜெய வத்தனா, சங்ககாரா, திரிமனே, மேத்யூஸ், டி.பெரைரா, மலிங்கா, ஹெராத், லக்மல், குலசேகரா. சேனநாயகா. மென்டிஸ், பிரசன்னா.

போட்டி நேரம்: மாலை 6.30

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்ஷன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x